தொட்டியப்பட்டி சாதி வெறியாட்டம்!

தொட்டியப்பட்டி சாதி வெறியாட்டத்தை கண்டிப்போம். சாதிய சக்திகளை தனிமைப்படுத்துவோம்!

தமிழகத்தில் சாதி வெறியாட்டங்களின் தன்மை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது, சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களை ஆணவப் படுகொலை செய்வது, அவர்களின் குடியிருப்பில் உள்ள பொருட்களை திருடிவிட்டு தீ வைப்பது, ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் வழிபாட்டிற்காக செய்த ‘தே​ரை’ தீ வைத்து கொளுத்துவது என ஆதிக்க சாதியவெறியாட்டம் ​முழு மிருக வடிவம் எடுத்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் கே.தொட்டியப்பட்டி கிராமத்தில் நாயக்கர் சமூகத்து மக்களும், அருந்ததியர் சமூகத்து மக்களும் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் அருந்ததியினர் குடியிருப்பில் குடிநீர் குழாய் எதுவும் இல்லை. ஆதிக்கசாதி குடியிருப்பில் குடிநீர் குழாய்கள் உள்ளன. இதனை அடுத்து கிராமத்திற்கு அருகாமையில் உள்ள சுடுகாடு பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த குடிநீர் தொட்டியில் தான் அருந்ததியினர் குடிப்பதற்கு தண்ணீரை பிடித்து வந்தனர்.

எல்லா பகுதியிலும் இருப்பது போல இப்பகுதியிலும் தண்ணீர் பஞ்சம் கடுமையாக இருந்ததனால் ஆதிக்கசமூகத்தினர் சுடுகாடு பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியிலும் தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வந்தனர். இரண்டு சமூகத்து மக்களிடையே தண்ணீர் பிடிப்பதில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனடிப்படையில் காவல்நிலையத்தில் இரண்டு சமூக மக்களும் வரவழைக்கப்பட்டு எல்லோரும் ஒரே நேரத்தில் பிடிக்க வேண்டாம். அருந்ததியினர் பிற்பகல் 2.00 முதல் 4.00 மணி வரை தண்ணீர் பிடிக்கட்டும். ஆதிக்கசாதியினர் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை தண்ணீர் பிடிக்கட்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

கடந்த வெள்ளி (31-03-2017) அன்று அருந்ததி சமூகத்தினர் ஒரு விசேஷ வீட்டிற்கு சென்று விட்டு மாலை ஆறு மணிக்கு மேல் சில பெண்கள் தண்ணீர் பிடிக்க வந்தார்கள். சுடுகாட்டில் உள்ள குழாயை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என கட்டுப்படுத்திய நாயக்கர் சாதியை சேர்ந்த ஆதிக்க சாதி வெறியர்கள் கால தாமதமாக வந்து தண்ணீர் பிடிக்க வரக்கூடாது என ஆபாச வார்த்தைகளில் திட்டி விரட்டி விட்டார்கள்.இதை தட்டி கேட்ட அருந்ததியின இளைஞர்களையும் அடித்து விரட்டி அருந்ததிய மக்களின் வீடுகளில் உள்ள டிவி, செல்போன் மற்றும் பல பொருட்களை திருடிவிட்டு அந்த வீடுகளுக்கு தீவைத்து சென்றார்கள் ஆதிக்க சாதி வெறியர்கள். இந்த மனிதாபிமானமற்ற ஆதிக்க ஜாதி வெறி வன்மையாக கண்டிக்கத்தக்கது.

​ஆதிக்க ஜாதியினர் தாக்கியதில் பெண்கள் உட்பட 24 பேர் ராஜபாளையம் / ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ​

​3 வீடுகள் முழுமையாக தீயில் கருகியுள்ளது 40க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டு தாக்கப்பட்டுள்ளது. ​

​ஆதிக்க சாதியினர் பயன்படுத்தும் குளம், கிணறு, குழாய் என அடிப்படை மனித உரிமையான தண்ணீர் உரிமையை கூட சாதி பார்த்து ஒடுக்கப்படும் மக்களின் பயன்பாட்டை தடுப்பது,அவர்களை தாக்குவது இன்னமும் நடப்பது “ஆண்ட” பெருமை பேசும், அதிகார திமிர் பிடித்த ஆதிக்க சாதி வெறியர்களிடம் இருப்பதை நாம் பொது வெளியில் ஒரு கீழ்த் தரமான நிகழ்வாகவே சுட்டிக்காட்ட முடியும். இதில் வீரமோ, பெருமையோ இல்லை மாறாக மிருகங்களை விட கீழான குணமுடைய மன நோயாளிகளாகவே ஆதிக்க சாதிவெறியர்கள் உலவி வருகிறார்கள்.

​வன்கொடுமை தாக்குதலில் 3 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டும், 40 வீடுகள் சேதப்படுத்தப்பட்டும் உள்ளன. என உண்மை அறியும் குழுக்கள் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். இச்சம்பவம் குறித்து வன்னியப்பட்டி காவல்நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிகிறது


தீண்டாமைக்கு உள்ளாகி வரும் இந்த பகுதி மக்களுக்கு அரசு பாதுகாப்பு அளித்து, தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்குவதுடன் வன்கொடுமை செய்தவர்களை தண்டிக்க வேண்டும். இந்த பகுதி மக்கள் பொது தண்ணீர் தொட்டியில் தண்ணீர் எடுப்பதற்கு உரிமை இருக்கிறது. தண்ணீர் அனைவருக்கும் பொதுவான இயற்கையின் கொடை, இதன் மீது சொந்தம் கொண்டாடி பிறரை தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது.

கார்ப்பரேட்டுகள் தண்ணீரை வணிகத்திற்காக பயன்படுத்துவதை எதிர்க்கும் நம் சமூகம், அதே தண்ணீரை ஒடுக்க்ப்பட்டவர்கள் பயன்படுத்தக்கூடாது என்கிற காட்டுமிராண்டித்தனத்தையும் எதிர்க்க முன்வரவேண்டும். ஆரிய சாதிவெறிப்பண்பாடான இந்த சீரழிவு சாதியப் பற்றை துடைத்தெறிந்து நிற்கும் பொழுதே நமக்கான விடிவு பிறக்கும்.

அருந்ததிய சமூக மக்களின் இந்த அடிப்படை உரிமைக்காக நாம் ஓரணியில் திரண்டு நிற்க வேண்டும். ஒடுக்கப்படும் மக்களுக்கான உரிமையை வென்றெடுப்பது மட்டுமே தமிழ்த்தேசிய அரசியலின் வெற்றியாக அமையும்.

மனிதர்களை சாதியை சொல்லி ஒடுக்கும் எந்த சாதி வெறியர்களாக இருந்தாலும் அவர்கள் அந்தந்த தேசிய இனங்களின் புற்றுநோயாகவே இருப்பர். அவர்களை முற்போக்கு , மனித நேய, சமத்துவ சமூக நோக்கில் பயணிக்க வைக்கவேண்டிய கடமை அனைத்து தமிழ் தேசிய, பெரியாரிய, இடதுசாரி, அரசியல், சமூக அமைப்புகளுக்கும் உண்டு என்பதை மே 17 இயக்கம் இந்த நேரத்தில் வலியுறுத்தி சொல்கிறது.

இது போன்ற சாதிவெறியாட்டங்களைச் செய்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவெடிக்கை எடுப்பதற்குரிய போராட்டங்களையும், அதே சமயத்தில் இது போன்ற சாதிவெறி கும்பல்களை தனிமைப்படுத்தும் நடவெடிக்கைகளையும் மேற்கொள்ளும் உறுதியோடு மே பதினேழு இயக்கம் தோழமை இயக்கங்களோடு கைகோர்த்து களத்தில் நிற்கும்.

சாதிய வெறியாட்டத்தையும், சாதி பாகுபாட்டையும் வீழ்த்த கைகோர்க்க வாருங்கள்.

Leave a Reply