சிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்

இந்த புகைப்படம் உலகெங்கும் இணையத்தில் மிக பரவலாக மக்களின் கவனத்தை ஈர்த்த புகைப்படம். இந்த புகழ்பெற்ற புகைப்படத்தை எடுத்தவர் Carlos Vera Mancilla என்பவர். சிலி நாட்டில் சாண்டியாகோ நகரத்தில் செப்டெம்பர் 13, 2016ம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம். இதன் பின்னே ஒரு வரலாறு உள்ளது.

சிலி நாட்டின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமரான சால்வடோர் கியேர்மோ அயேந்தே (Salvador Guillermo Allende Gossens, 26 சூன் 1908 – 11 செப்டம்பர் 1973) என்பவர் சிலி நாட்டு மார்க்சிய அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். இலத்தீன் அமெரிக்க நாடொன்றில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது மார்க்சிய அரசுத்தலைவர் இவர். இவரின் ஆட்சிக்காலத்தில் உழைக்கும் மக்களின் பிரதிநிதியாக தனது அரசை மாற்றியதுடன் அவர்களுக்காக பொருளாதாரத்தில் ஏராளமான சீர்திருத்தங்கள் கொண்டு வந்தார். அவர் கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் ஏராளமான தனியார் பங்குபெறும் துறைகளை பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றினார். இதன் மூலம் மக்களின் நன்மதிப்பை பெற்றபொழுது அமெரிக்காவின் ஏகாதிபத்தியமும் , சிலி நாட்டின் முதலாளித்துவ சக்திகளும் சேர்ந்து இராணுவ தளபதி மூலம் ஆட்சியை கவிழ்த்தது .

பின்னர் அங்கு அமெரிக்க பொருளாதார நிபுணர் மில்ட்டன் பிரீட்மன் (Milton Friedman) என்பவரின் சிந்தையில் உதித்த எங்குமே நடைமுறையில் சோதித்து பார்க்காத ( “Free market”) திறந்த சந்தை பொருளாதாரக் கொள்கையை சிலியில் நடைமுறைபடுத்தியது. அதன் முடிவு சிலி நாட்டின் மக்களிடையே மிகப்பெரிய சமூக அழிவை கொண்டுவந்தது. சிலி நாட்டில் 1974ம் ஆண்டில் 9% சதவிகிதம் வேலைவாய்ப்பின்மையாக இருந்த நிலை 1975ம் ஆண்டில் 19% சதவிகிதமாக உயர்ந்தது. மில்ட்டன் பிரீட்மனின் திறந்த சந்தை பொருளாதார கொள்கை மாபெரும் தோல்வியடைந்தது. என்றாலும் இன்றுவரை உலகெங்கும் தன்னுடைய ஏகாதிபத்திய கொள்கையாக அவற்றையே கடைபிடித்து வருகிறது .

அலண்டே பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து, இராணுவத் தலைவர் ஆகுஸ்தோ பினொச்சே
( Augusto Pinochet )ஆட்சியைக் கைப்பற்றி நாட்டை 1973 முதல் 1990 வரையில் இராணுவ ஆட்சியில் வைத்திருந்தார். இவரின் சர்வாதிகார ஆட்சியில் நடந்த கணக்கில்லாத கொலைகளும் , மக்களை சித்திரவதை செய்வதும் , பத்திரிகையாளர்களை கொன்று குவிப்பதும் என்று ஏராளமான துன்பங்களால் மக்கள் வாடினர். அவரின் சர்வாதிகார ஆட்சியில் காணாமல் போனவர்கள் கொலை செய்யப்பட்டு இறந்தவர்களாகவே கருதப்பட்டனர். அப்படி இறந்தவர்களுக்கு அவர்களின் நினைவாக ஒன்றுகூடியவர்களை அங்குள்ள காவல்துறையினர் விரட்டி அப்புறப்படுத்திய பொழுது அங்கு நின்ற ஒரு சிறுமி மிக தைரியமாக அவர்களை நேருக்கு நேர் எதிர்கொண்ட காட்சிதான் இந்த புகைப்படம்.

சிலியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்ததோடு மட்டுமல்லாமல் அமெரிக்க ஏகாதிபத்தியம் பல்வேறு நாடுகளில் அதன் ஜனநாயக தன்மையை குலைத்துள்ளது. அமெரிக்காவின் முந்தைய அதிபர் ஒபாமாவின் ஆட்சி காலத்தில் கூட 2009இல் ஹோண்டுராஸ் (Honduras) நாட்டிலும் 2014ம் ஆண்டில் உக்ரைனிலும் (Ukraine) அங்கு செயல்பட்ட ஜனநாயக ஆட்சியை கவிழ்த்தது அமெரிக்கா. அதே முறையில் 2011 ம் ஆண்டில் லிபியாவிலும் ( Libya) இராணுவத்தின் தலைமையில் அங்கு நடந்த ஆட்சியை கவிழ்த்தது , 2102ம் ஆண்டில் மாலத்தீவில் ( Maldives) இதே யுக்தியை கையாண்டு அங்கும் ஆட்சியை கவிழ்த்தது அமெரிக்கா. மேலும் சமீபத்தில் கண்டறிந்த தகவல்கள் மூலம் பிரான்சில் ( France) 2012ம் ஆண்டில் நடந்த பிரான்ஸ் அதிபர் தேர்தலில் அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ ( C.I.A ) மறைமுகமாக பெரிய பங்காற்றியதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் ஏகாதிபத்தியம் என்பது அதன் கொள்கையல்ல அதுவே அவர்களின் நடைமுறை மற்றும் குணாதிசியங்களாகவே இருக்கிறது. அங்கு குடியரசு மற்றும் சுதந்திர கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்திருந்தாலும் அவர்கள் தங்களுடைய ஏகாதிபத்தியம் என்பதை கைவிடமாட்டார்கள். மில்ட்டன் பிரீட்மன் (Milton Friedman) அவரின் திறந்த சந்தை பொருளாதாரக் கொள்கையை உலகெங்கும் எடுத்து சென்று நடைமுறை படுத்தவே செய்கிறார்கள். மில்ட்டன் பிரீட்மனின் திறந்த சந்தை பொருளாதாரக் கொள்கையின் சில முக்கிய குறிப்புக்களாவது

# அரசுப்பங்களிப்பு மிகக்குறைவாகவும், தனியாரின் சுதந்திரம் விரிவாகவும் அமையவேண்டும்..

# உற்பத்தியாளருக்கு வழங்கப்படும் பணஉதவி முற்றாக நிறுத்தப்படவேண்டும். குறிப்பாக அரசுகள் தமது விவசாயிகளுக்கு வழங்கும் பண உதவிகள் முற்றாக நிறுத்தவேண்டும்.

# போதையையும், விபசாரத்தையும் குற்றச்செயல்களாகக் கருதக்கூடாது.

# கல்வியை திறந்த சந்தையில் விட வேண்டும். வேண்டுமானால் அரசு மாணவர்களுக்கு உதவித்தொகை கொடுத்து, கல்வி நிலையத் தெரிவை அவர்களிடம் விட்டுவிட வேண்டும்.

# எல்லாவிதமான தொழிலாளர் ஒன்றியங்களும் தேவையில்லை. குறிப்பாக ஆசிரியர் ஒன்றியம் ஏனெனில் அரசியல் தெளிவுபெற்ற கல்விச் செல்வாக்கு கூடியது.

மேலே குறிப்பிட்ட சில கொள்கைகளை கவனிக்கும் பொழுதும் இங்கும் விரிவடையும் நீட் தேர்வுகள் , தண்ணீர் தனியார்மயம், மீத்தேன் திட்டம், ரேஷன் கடைகளை படிப்படியாக மூடுதல் என்று நீளும் மக்கள் விரோத திட்டங்களால் ,அவர்கள் தன்னுடைய திறந்த பொருளாதார கொள்கையை இங்கும் திணித்து விட்டார்கள் என்றே கருதவேண்டும்.

“கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.”

Leave a Reply