ஐ.நா அறிக்கையும் தமிழீழ விடுதலையும்
சர்வதேச சமூகத்திற்கும், தமிழினத்திற்கும் மே பதினேழு இயக்கத்தின் கோரிக்கையும் வேண்டுகோளும்.
சர்வதேச சமூகத்திற்கும், தமிழினத்திற்கும் மே பதினேழு இயக்கத்தின் கோரிக்கையும் வேண்டுகோளும்.
மே பதினேழு இயக்கம் ஐ. நா வினுடைய நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழீழ இனப்படுகொலையில் ஒரு குறைந்தபட்ச ஒரு ஆரம்ப முயற்சியாக வரவேற்கிறது. இந்த அறிக்கை போர் பற்றிய இலங்கை அரசின் குற்றங்களை பதிவு செய்யும் முக்கிய ஒரு அறிக்கையாக பார்த்தாலும் ஒரு முழுமையடையாத ஒன்றாக பார்க்கிறது. தமிழீழத்தில் நடைபெற்ற போர் எனப்படுவது ஒரு இனப்படுகொலை அடிப்படையிலான போர் மற்றும் இதன் பின்னனியாக 60 ஆண்டுகால விடுதலை போராட்டம் உள்ளது என்பதை அங்கீகரிக்க வேண்டும். போரில் 1,46,000தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது என்பது மட்டுமன்றி 1,00,000 தமிழர்கள் கடந்த 30 ஆண்டுகளாக இந்த விடுதலை கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசால் படுகொலைக்கு உள்ளாயினர். ஆக 2,50,000க்கும் மேலாக தமிழர்களை படுகொலை செய்த அரசின் முக்கிய நோக்கமானது தமிழீழத்தமிழர்களின் விடுதலை கோரிக்கையை முடக்கவே என்பதை ஐ. நா மன்றம் அங்கீகரித்தல் அவசியம். தந்தை செல்வா அவர்களின் தலைமையில் தமிழீழ மக்கள் இலங்கையிலிருந்து பிரிந்து தனது சுதந்திர நாடாக தமிழீழம் அடைய வேண்டி அளித்த ”வட்டுகோட்டை தீர்மான” வாக்கெடுப்பை ஐ. நா கவனத்தில் எடுக்க வேண்டும். இதன் அடிப்படையிலேயே பின்னர் நடந்த ஆயுதப்போராட்டத்திற்கு தமிழர்கள் அங்கு துணை நின்றார்கள் என்பதை ஐ.நா அங்கீரிக்க வேண்டும்.
வெகுகாலத்திற்கு முன்பே நடத்தி இருக்கவேண்டிய கருத்து வாக்கெடுப்பாய் வட்டுகோட்டை தீர்மானத்தையே ஐ. நா அங்கீகரிக்க வேண்டும். இந்த நிபுணர் குழு இந்த விவரங்களை அதன் விசாரனை வரையரையில் கொண்டு வராவிட்டாலும் , இனி வரும் விவாதங்கள் இந்த கருதுகோளின் அடிப்படையிலேயே இருக்க வேண்டும். இந்த வாதங்களை புறந்தள்ளி அல்லது கணக்கில் எடுக்காமல் ஐ. நா (அ) சர்வதேசச் சமூகம் செயல்படுமானால் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் உரிமை தமிழர் சமூகத்திற்கு உண்டு என்பதை உறுதியுடன் தெரிவிக்கின்றோம்.
இராசபக்சே மட்டுமன்று அதற்கு முன்னதாக இருந்த அரசான ரனில் விக்கிரமசிங்கே, சந்திரிகா குமாரதுங்கா, பிரேமதாசா, ஜெயவர்த்தனா, மற்றும் முன்னதைய இலங்கை அரசுகள் தொடர்சியாக இனப்படுகொலைகளை செய்து வந்து இருக்கிறார்கள். இவர்களும் விசாரனைக்கு உட்படுத்தாமல் செயல்படும் ஒரு விசாரனை முழுமையானது மட்டுமன்றி தமிழர்களுக்கான நீதியை புறந்தள்ளுவதாகவே தமிழ் சமூகம் கருதும். ஆகவே இவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துகின்ற வகையில் ஐ. நா மற்றும் சர்வதேசச் சமூகம் நடந்துகொள்ளும் என்று நம்புகிறோம். மேலும் இலங்கை அரசில் நடக்கும் ஒரு ஆட்சி மாற்றமோ அல்லது தனி நபர் தண்டித்தலோ இந்த குற்றத்திற்கான தீர்வாகாது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். மேலும்தமிழர்களுக்கான வாழ்வு, சுயமரியாதை, பாதுகாப்பு, பண்பாட்டு சுதந்திரம், மொழியுரிமை, நிலப்பாதுகாப்பு, கடல் மற்றும் இயற்கை ஆதரங்களின் பாதுகாப்பு என்பது ஒன்றுபட்ட இலங்கையில் சாத்தியம் கிடையாது என்பதை உலகிற்கு நாங்கள் உணர்த்த விரும்புகிறோம். அங்கு நடந்த்து ஒரு இனக்கலவரமோ, இன முரண்களோ மட்டுமல்ல அதையும் தாண்டி நடைபெற்ற விடுதலைப்போர் என்பது சர்வதேசச் சமூகத்தால் உணரப்பட்டு, இந்த படுகொலைகளை நடத்தியது சர்வாதிகாரிகளால் அல்லாமல் சிங்கள பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசே என்பதை நாங்கள் உலகிற்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.
தமிழர்களின் மறுவாழ்வு, தாய் நிலமீட்சி, புதியக் கட்டுமானங்கள் என்பது சுதந்திரத் தமிழீழத்தில் தமிழர்களாலேயே நடத்தப்படும். அதற்கு சர்வதேச சமூகம் துணை நிற்க வேண்டும். இப்படியான நிரந்தர பாதுகாப்பு, சுயமரியாதை உறுதி செய்யப்படும் ஒரு ’சுதந்திர தமிழீழமே’ சர்வதேசம் தமிழர்களின் பால் நியாயமாக நடந்து கொண்டது என்பதற்கான ஆதாரமாக அமையும்.
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையினை ஒட்டி உலக அரங்கில் வர இருக்கும் அரசியல் தீர்வு பற்றிய விவாதங்களில், தமிழர்களின் தலையாய கோரிக்கைகளாகத் தமிழர்கள் வலியுறுத்த வேண்டிய பின்வருவனவற்றை தமிழ் சமூகத்தின் முன் வைக்கிறோம்.
· போர் குற்றவிசாரணையானது, இலங்கை அரசின் போரே இனப்படுகொலையின் அடிப்படையிலான போர் எனக் கணக்கில் கொண்டு நடத்தப்பட வேண்டும். இந்த இனப்படுகொலையின் பின்னனியில் இலங்கை அரசு இருக்கிற காரணத்தால், இலங்கை அரசு முழுமையும் குற்றவாளி அரசாகவே நடத்தப்பட வேண்டும். இலங்கை அரசே குற்றவாளி எனில் அது இராசபக்சே அரசுடன் முடியாமல் வரலாற்று ரீதியாக அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகள் இனப்படுகொலையை செய்கிறது என்பது தீரவிசாரிக்கப்படல் வேண்டும்.
· வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையிலும் 60 ஆண்டுகளாக நடைபெரும் தமிழீழவிடுதலை போரட்டத்தின் அடிப்படையிலும் சுதந்திரத் தமிழீழத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.
o அவசியமெனில் அதற்கான வாக்கெடுப்பை ஐ. நா நடத்திடல் வேண்டும். அவ்வாறான ஒரு வாக்கெடுப்பை நடத்தும் முன் தமிழீழத்திலுள்ள சிங்கள ஆக்கிரமிப்புப் படைகள் வெளியேற்றப்படல் வேண்டும்.
· இலங்கையில் உள்ள முள்வேலி முகாம்கள் ஐ. நா வசம் ஒப்படைத்தல் பட வேண்டும். தேவைப்படில் ஐ. நாவினுடைய அமைதி காப்புப் படைகள், இந்திய–பாகிஸ்தானிய–அமெரிக்கப் தலைமை மற்றும் படைவீரர்கள் அற்ற ஒரு ஐ. நா படையே அங்கு அனுப்பப்படல் வேண்டும்.
· போர்–இனப்படுகொலை சிதைவுகளில் இருந்து மீளப்பெற சுதந்திர தமிழீழத்திற்கான இழப்பீட்டுத் தொகையை இலங்கை அரசிடம் இருந்து சர்வதேசச் சமூகம் பெற்றுத்தர வேண்டும்.
· உயிருடன் இருக்கும் இலங்கையின் முன்னால் அரச அதிபர்களான சந்திரிகா குமரத்துங்கா, ரணில் விக்கிரமசிங்கே போன்றவர்களையும் இராசபக்சேவுடன் சேர்த்து சர்வதேசச் சமூகம் இனப்ப்படுகொலைக்கான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
· தமிழர் பகுதிகளில் செயல்படும் ஒட்டுக்குழுக்கள் முழுமையாக கலைக்கப்பட்டு அதன் குற்றவாளித் தலைமைகள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.
· வெள்ளைவேன் கடத்தலின் பின்புலம் விசாரிக்கப்படல் வேண்டும்.
நாம் வெல்வோம்
மே பதினேழு இயக்கம்