தமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை

- in மே 17

இந்தோனேசியா கடலில் தவிக்கும் தமிழீழ அகதிகள் குறித்தும், தமிழகத்தின் சிறப்பு வதை முகாம்கள் குறித்தும் 23/6/16 அன்று மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் செய்த பதிவின் தமிழாக்கம்.

வணக்கம்

இந்தோனேசியா கடல் பகுதியில் சிக்கித் தவிக்கும் தமிழீழ அகதிகளின் நிலை மீது உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகின்றோம். அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கையில் கையெழுத்திட்டு அதை அமல்படுத்தியுள்ள ஆஸ்திரேலியாவிற்கு 44 ஈழத் தமிழ் அகதிகள் பயணப்பட்டு இருந்தனர். அதில் நிறை மாத கர்பிணிப் பெண் ஒருவரும் நான்கு குழந்தைகளும் அடங்குவர். அவர்கள் மோசமான வானிலை காரணமாகவும் படகில் ஏற்பட்ட பழுதின் காரணமாகவும் சுமத்திரா தீவின் கடற்கரையில் ஒதுங்க நேரிட்டது. மோசமான வானிலையில் பழுதடைந்த படகில் செல்வது அந்த பெண்கள் குழந்தைகள் என அனைவருக்குமே ஆபத்தானது. இலங்கை அரசாங்கத்தின் அடைக்குமுறைக்கு உள்ளாகி தஞ்சம் தேடும் இந்த ஈழத் தமிழ் அகதிகளுக்கு உலகச் சமூகமும் ஆஸ்திரேலிய அரசும் உதவ முன் வர வேண்டும் என்று வேண்டிக் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்தியாவில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகளும் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகுகின்றனர். ஈழத் தமிழ் அகதிகள் இந்தியாவில் மனிதத்தன்மையற்ற முறையில் நடத்தப்படுவதன் காரணமாக மே 9 அன்று திருச்சி சிறப்பு முகாமில் இருந்த ஈழத்தமிழ் அகதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சிறப்பு முகாமானது சட்டத்திற்குப் புறம்பாக ஈழத்தமிழ் அகதிகளை தடுப்புக் காவலில் வைப்பதற்காக இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒன்று. சட்டத்திற்குப் புறம்பான இந்த அமைப்பு ஒட்டுமொத்தமாக ஈழத்தமிழ் அகதிகளை குறிவைக்கின்றது.

இதே போல் இரவீந்திரன் என்ற ஈழத் தமிழ் அகதி ஒருவர் தன் மகனுடைய மருத்துவச் செலவிற்காக அடிக்கடி வெளியில் செல்லவேண்டி இருந்த காரணத்தால் அவர் தங்கி இருந்த முகாமில் வருகைப் பதிவேட்டில் அவரால் சரிவர கையெழுத்திட முடியவில்லை. இதன் காரணமாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முகாமின் பட்டியலில் இருந்து அவரின் பெயரை எடுத்துவிடுவதாக அச்சுறுத்தினர். மேலும் பலமுறை அவரை அவமானப் படுத்தினர். இதன் காரணமாக மார்ச் 2016 அன்று 45 வயதே ஆன இரவீன்ந்திரன் மின்கம்பத்தில் தூக்குமாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இலங்கை அரசாங்கத்தின் தொடரும் புறக்கணிப்பின் காரணமாக இலங்கையை விட்டு வெளியேறி வருகின்றனர். தொடர்சியாக ஈழத்தமிழர்கள் இலங்கையை விட்டு வெளியேறுவது, ஆட்சி மாறிய போதும் தமிழர்களை ஒடுக்கும் இலங்கை அரசாங்கத்தின் செயல்பாட்டில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்பதையே காட்டுகின்றது.

இந்தோனேசியா கடல் பகுதியில் சிக்கித் தவிக்கும் 9 குழந்தைகள் மற்றும் கர்பிணிப் பெண் உட்பட 44 ஈழத்தமிழர் அகதிகளின் நிலைமையை UNHRC உடனடியாக கவனிக்க வேண்டும் என்றும் அவர்கள் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்ப முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றும், இந்தியாவில் வாழும் ஈழத்த் தமிழ் அகதிகள் அகதிகள் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உறிமைகளை பெற வழிவகை செய்ய வேண்டும் என்றும் கேட்டுகொள்கின்றோம்.

நன்றி

Leave a Reply