கும்முடிப்பூண்டி அகதி முகாமில் நிகழ்த்தப்பட்ட கொடுமை
சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி அகதி முகாமில் சுபேந்திரன் என்பவர் கடுமையாக காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்டது தொடர்பாக, தங்கள் நிலையை எடுத்துக் கூறி
அவரின் மனைவி தர்சினி; மாநில மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இக்கடிதத்தில்,’தர்சினி ஆகிய நானும் எனது கணவரும் இரண்டு பிள்ளைகளுடன் கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருகிறோம். இந்நிலையில் கடந்த 22.2.2016 அன்று எனது கணவருக்கும் எமது முகாம் தலைவருக்கும் இடையே சிறு சண்டை ஏற்பட்டது. அப்போது இப்பிரச்னைக்கு சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். அப்போது இரு தரப்பினரையும் 23.2.2016 அன்று மாலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணைக்கு அழைத்துச் சென்ற எனது கணவரை காவல் நிலையத்துக்கு உள்ளே கூட அழைத்துச் செல்லாமல் ஒரு நாயை போட்டு தெருவில் அடிப்பது போல எனது கணவரின் இரு கால்களையும் முட்டிக்கீழ் காவல்துறை இன்ஸ்பெக்டர் டில்லிபாபு தலைமையில் ஆன நான்கு அதிகாரிகள் கால்களை முறித்துவிட்டனர்.
பின்பு டில்லி பாபு தனது பூட்ஸ்காலால் எனது கணவரின் நெஞ்சில் எட்டி உதைத்தார். அதன்பின் முறிந்த காலில் பூட்ஸ்கால்களால் ஏறிகுதித்து, எழும்பி நடடா நாயே என்று கேவலமாக பேசினார். நாங்கள் அதைப்பார்த்து கதறி அழுது கேட்டபோது எங்களை திட்டி
அனுப்பிவிட்டார். அய்யா எனது கணவர் தினமும் கூலி வேலைக்கு செல்பவர். எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் இருவரும் படிக்கிறார்கள். நானும் உடல்நிலை
சரியில்லாதவர். எங்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. இந்நிலையில் எனது கணவரின் இரண்டு கால்களையும் உடைத்து அவரை படுத்தபடுக்கையாக்கி விட்டனர். இந்த காவல்துறையினர் நாங்கள் இலங்கை அகதிகள் என்பதால் பெரிதும் துன்புறுத்துகின்றனர்.
எனது கணவருக்கு ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு பிரிவில் சிகிச்சை அளித்து வருகிறோம். அவருக்கு இரண்டு காலும் முறிந்துவிட்டதால் அவர் எழுந்து நடப்பது எப்போது என்றே தெரியவில்லை.
நான் எனது குழந்தையுடன் சிரமப்படுகிறேன். காவல்துறையினரால் எனது குடும்பத்திற்கும் எங்களின் உயிருக்கும் ஆபத்து உள்ளது தயவு கூர்ந்து காப்பாற்றுங்கள் ! இப்பிரச்சினைக்கு மனிதநேயத்தோடு எதிர்கொண்டு எனது கணவரின் மருத்துவ உதவிக்காகவும், எனது குழந்தைகளின் படிப்பு செலவிற்காகவும் உரிய இழப்பீடு தொகை பெற்று தந்து இப்பிரச்சினைக்கு தீர்வு காணும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது