ஏர்டெல் சேவையை ஏன் புறக்கணிக்க வேண்டும்? – பொருளாதார புறக்கணிப்பு
கடந்த வருடம் நடந்த இனப்படுகொலைக்கு பின்னனியில் இருந்த சதிகளை கண்டுபிடித்து மாறிவரும் உலகஒழுங்கை புரிந்து கொண்டு செயல்பட வெண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. போருக்கு பின்னனியில் செயல்பட்ட இந்திய காங்கிரஸ் அரசின் தனிப்பட்ட வெறுப்பு, அரசு அதிகாரிகளின் தமிழின எதிர்ப்புடன் சேர்ந்து மனிதநேயமற்ற முறையில் சந்தை லாபத்திற்காக இந்திய அரசு செயல்பட்டதும் அதன் துணையாக இந்தியாவின் நிறுவங்கள் வேலைசெய்ததையும்/செய்வதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இந்த தமிழினப்படுகொலைக்கு துணையாய் நின்ற அரசியல், சமூக மற்றும் பொருளாதார காரணிகளை நாம் தொடர்ச்சியாக கண்டறிந்து அதை எதிர்த்து போராடுவது நமக்கு கட்டாயமாகிறது. இந்த வழியில் நமது எதிர்வினைகள் இந்திய-சிங்கள கூட்டு திட்டங்களை முறியடிக்க கூடியதாய் இருக்க வேண்டும். நமது ஆற்றலை ஒருங்கிணைப்பதற்கு நமது தொடர்ச்சியான போராட்டங்கள் உதவும். போர்முடிந்த பிறகு நடத்தப்படும் நமது போராட்டங்களை, புரிதல்களை, குறிக்கோள்களை இந்த அரசாங்ககளுக்கு தெளிவாக உணர்த்தவேண்டி உள்ளது. நமது புரிதல்கள் இனிவரும் காலங்களில் நம்மை, நமது போரட்டஙளை தற்காத்துக்கொள்ள பெரிதும் துணை புரியும். இதன் அடிபடையிலேயே இந்த ஏர்டெல்லிற்கு எதிரான நமது போரட்டம் அமைகிறது. இது நமக்கு வருங்காலத்தில் சரியான புரிதல்களோடு போராட்டம் நடத்தும் பயிற்சியை அளிக்கவும் செய்யும்.
இலங்கையில் வர்த்தக போட்டிகளின் நடுவே தமிழீழ தமிழர்களின் உரிமை, விடுதலைப்போராட்டம் பலிகொடுக்கப்படுகிறது. இந்த சதிகளுக்கு நடுவே உரிமைகளை வென்றெடுக்கவும், எதிர்கால சமூக,அரசியல் நலனை உறுதி செய்யவும் வேண்டி இருக்கிறது. இந்த பொருளாதார புறக்கணிப்பு போராட்டத்தில் தொடர்ச்சியாகவும், உறுதியுடனும் நாம் ஒன்றுபட்டு செயல்படவேண்டிய கட்டாயத்தை இந்த இக்கட்டான சூழல் நமக்கு ஏற்படுத்தி உள்ளது. லாப நோக்கில் மட்டும் இன்றி மனித அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும் செயல்படும் நிறுவனங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும், அரசும் கார்பரேட் நிறுவங்களும் இணைந்து இன்று வேட்டையாட கிளம்புகின்ற இந்த காலகட்டத்தில் அநீதிக்கு எதிராக போராடுபவர்கள் இந்த இரண்டையும் ஒரே மாதிரியாக நடத்தவேண்டியுள்ளது. ஏர்டெல்லின் சிங்கள கூட்டணியை நாம் புரிந்து கொள்வது இம்மாதிரியான மானுட விரோதிகளை வெற்றி கொள்ள உதவும். இந்த வகையில் ஏர்டெல்லை நோக்கிய புறக்கணிப்பு போராட்டத்தின் அடிப்படை தமிழின விரோதியாக மட்டும் அல்லாமல் மானுடவிரோதியாகவும் இருக்கும் இந்த நிறுவனங்களின் பொருளாதார ஆதாரத்தை முறிப்பதே.