தமிழர் கடல் சென்னை மெரினாவில் ஆண்டுதோறும் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு மே 21 அன்று மே பதினேழு இயக்கம் ஒருங்கிணைத்தது. அதற்கு தடை விதித்த பாஜகவின் பினாமி தமிழக எடப்பாடி அரசின் காவல் துறை, நினைவேந்தல் நிகழ்விற்கு ஒன்றுகூடிய பல்வேறு இயக்கத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் மீது வன்முறையை ஏவி அதில் 400க்கும் மேற்பட்டோரை கைது செய்து, அதில் மே பதினேழு இயக்கம், தமிழர் விடியல் கட்சி மற்றும் காஞ்சி மக்கள் மன்றம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த 17 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் தள்ளியது.
இந்நிலையில் இன்று (29-05-17) கைது செய்யப்பட்டோரில் தமிழர் விடியல் கட்சியை சேர்ந்த தோழர்கள் டைசன், இளமாறன், அருண்குமார் மற்றும் மே 17 இயக்கத்தை சேர்ந்த தோழர் திருமுருகன் காந்தி ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.
ரேசன் கடைகளை மூடுப்படுவது, பண மதிப்பிழப்பு, ஜல்லிக்கட்டு, ஹைட்ரோகார்பன் என்று பாஜக அரசின் பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை மே 17 இயக்கம் தொடர்ந்து அம்பலப்படுத்தியது. மேலும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் முடிவில் கலவரம் நிகழ்த்திய காவல்துறையினர் மீது பாதிக்கப்பட்டோர் சார்பாக வழக்குகள் பதிவு செய்ய முயற்சி எடுத்தும் வருகிறது.
மேலும் தமிழக மீனவர்கள் கொலை, காவிரி பிரச்சனை, ஆணவக்கொலைகள், ஆந்திராவில் 20 தமிழர்கள் கொலை தொடர்பாக மத்திய மாநில அரசுகளின் செயலற்றத்தன்மையை மே 17 இயக்கம் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் பதிவு செய்தது.
மே 17 இயக்கத்தின் இத்தகைய செயல்பாட்டை கட்டுப்படுத்தற்கு பயமுறுத்தும் விதமாக இது போன்று சட்டவிரோதமாக குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செய்கிறது. மே பதினேழு இயக்கம் இதனை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளும். மேலும் இது போன்ற வழக்குகள் மே 17 இயக்கத்தையோ அதன் செயல்பாடுகளையோ எந்த விதத்திலும் மட்டுப்படுத்தாது. பாஜக பினாமி அரசு காவல்துறையை ஏவி குண்டர் சட்டத்தின் கீழ் பொய் வழக்கு பதிந்துள்ளதை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.