தமிழரை சுட்டுக்கொன்ற கர்நாடகா! கர்நாடக வனத்துறையினரின் கொடூர செயலை வன்மையாக கண்டிக்கின்றோம்! குற்றவாளி கர்நாடக வனத்துறையினரை உடனடியாக கைது செய்!

தமிழரை சுட்டுக்கொன்ற கர்நாடகா! கர்நாடக வனத்துறையினரின் கொடூர செயலை வன்மையாக கண்டிக்கின்றோம்! குற்றவாளி கர்நாடக வனத்துறையினரை உடனடியாக கைது செய்! – மே பதினேழு இயக்கம்

சேலம் மாவட்டத்தின் கர்நாடக எல்லை அருகே ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ராஜா என்பவர் உயிரிழந்துள்ளார். மீன்பிடித்ததற்காக தமிழர்களை சுட்டுக்கொல்லும் அளவிற்கு கர்நாடக அதிகாரிகளிடம் இனவெறி போக்கு அதிகரித்துள்ளது வருந்தத்தக்கது. தமிழர்கள் மீது வன்மத்துடன் துப்பாக்கி சூடு நடத்தி தமிழரை கொலை செய்த கர்நாடகாவின் இந்த காட்டுமிராண்டி செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு-கர்நாடக எல்லைப்பகுதியதாக உள்ளது பாலாறு. இந்த பாலாறு காவிரியில் கலக்கும் நீர்ப்பகுதியில் மேட்டூரை அடுத்த கொளத்தூர் பகுதியை சேர்ந்த தமிழ்நாட்டு மீனவர்கள் காலங்காலமாக பரிசலில் மீன்பிடித்து வருவது வழக்கம். அப்படியாக கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இரவு கொளத்தூர் கோவிந்தப்பாடியை சேர்ந்த காரவடையான் என்ற ராஜா உள்ளிட்ட 7 பேர் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது அவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் அனைவரும் தப்பி ஓடியுள்ளனர். அதில் ராஜா மட்டும் திரும்பவில்லை. இந்நிலையில், 16-ம் தேதி அவரது உடல் பாலாற்றங்கரையில் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பாரம்பரியமாக மீன்பிடிக்கும் எல்லை வனப்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டு மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதும் அதில் ராஜா என்பவர் உயிரிழந்துள்ளதும் அதிர்ச்சிக்குரியதாக உள்ளது. கர்நாடக பகுதிக்குள் மீன்பிடிக்க தடையுத்தரவு உள்ள நிலையில், தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி செல்வதில்லை. இருந்தும் தமிழர்கள் மீது எல்லைப்பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்துள்ளது கர்நாடக வனத்துறையினரின் தமிழர்கள் மீதான வன்மத்தையே காட்டுகிறது. எல்லை தாண்டி மீன்பிடித்திருந்தாலும் கொலை செய்யுமளவிற்கு கொடிய குற்றமல்லவே. மேலும், கர்நாடக வனத்துறையினர் இதற்கு முன்னரும் இதுபோல் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் என்ற தகவல், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடுஞ்செயல் என்பதையே காட்டுகிறது.

காவிரி நீர் பிரச்சனையில் தமிழர்கள் மீது கர்நாடகா நீண்டகாலமாகவே வன்மத்துடன் தாக்குதல் நடத்திவந்துள்ளது. காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் பெய்யும் அதிகப்படியான மழை காரணமாக இப்பிரச்சனை சில ஆண்டுகளாக இல்லாத நிலையில், தமிழ்நாடு-கர்நாடக இடையே புதியதொரு பிரச்சனையை ஆளும் கர்நாடக பாஜக அரசின் மூலம் ஒன்றிய பாஜக அரசு உருவாக்க முனைகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. அண்டை மாநிலங்களுடன் மோதல் போக்கை வளர்ப்பதன் மூலம் மாநிலங்களிடையே ஒற்றுமையை தடுத்து, மாநிலங்கள் மீது ஒன்றிய அரசு அதிகாரத்தை செலுத்த முனைகிறது.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்வதை வேடிக்கை பார்க்கும் இந்திய ஒன்றிய அரசு, சமீபத்தில் தனது கடற்படையை கொண்டே தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது கர்நாடக வனத்துறையினர் மூலம் தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி, கர்நாடக எல்லைப்பகுதியில் மீண்டும் பதற்றத்தை உருவாக்க நினைக்கிறது. தமிழர்கள் மீதான வெறுப்பை வளர்த்தெடுப்பதன் மூலம் கர்நாடகாவில் பாஜக அரசியல் லாபம் அடைய முயற்சிக்கிறது. இந்திய ஒற்றுமை பேசும் பாஜக அரசு, தமிழர்கள்-தமிழ்நாட்டுடன் மட்டும் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டிய அவசியம் என்ன, தமிழர்களை இந்தியர்களாக கருதுவதில்லையா, தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு பகுதியாக கருதுவதில்லையா என்ற கேள்வி எழுகிறது.

கர்நாடக வனத்துறையினரின் இந்த போக்கு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இந்த தாக்குதலில் உயிரிழந்த ராஜா குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறோம். உயிரிழந்த குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம். தமிழர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்த கர்நாடக வனத்துறையினரை தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். தமிழ்நாட்டு வனப்பகுதி நீர்நிலைகளில் தமிழர்கள் பாதுகாப்புடன் மீன்பிடிப்பதை உறுதி செய்திட வேண்டும். எல்லைப்பகுதிகளில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தடுக்க நிரந்தரத் தீர்வை கண்டறிய வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply