200-வது நாளை எட்டியுள்ள பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்! மக்கள்திரள் போராட்டத்திற்கு ஆதரவாக துணைநிற்போம்!

200-வது நாளை எட்டியுள்ள பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்! மக்கள்திரள் போராட்டத்திற்கு ஆதரவாக துணைநிற்போம்! – மே பதினேழு இயக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் அமைக்கபோவதாக கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் ஒன்றிய-மாநில அரசுகள் அறிவித்து அதற்கான நிலங்களை கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த 13 கிராம மக்களின் வாழ்வாதாரம் அடியோடு நசுக்கப்படும் என்பதனால் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து அம்மக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டம் இன்றுடன் (11-02-2023 சனிக்கிழமை) 200-வது நாளை எட்டியுள்ளது. மக்களின் இந்த தொடர் போராட்டம் வெல்ல மே பதினேழு இயக்கம் தனது ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

விமான நிலைய அறிவிப்பு வெளியானது முதல் அரசு எதேச்சதிகாரமாக செயல்பட்டு மக்களின் விருப்பத்திற்கு மாறாக நிலங்களை பல்வேறு வழிமுறைகளில் முறைகேடாக கையகப்படுத்தி வருகிறது. அப்போதே, முதலாளிகளின் வளர்ச்சிக்காக மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதை நிறுத்திட, விமான நிலையத் திட்டத்தை கைவிட மே பதினேழு இயக்கம் வலியுறுத்தியது. சுமார் 20,000 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கிட்டத்தட்ட 5000 ஏக்கர் நிலப்பரப்பில் கொண்டுவரப்படும் இந்த திட்டத்தினால், ஏகனாபுரம் கிராமம் உள்ளிட்ட 13 கிராம மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் நசுக்கப்படுவதோடு, சுற்றுச்சூழலில் ஏற்படும் சீர்கேடு மற்றும் சென்னை நகருக்கு ஏற்படும் வெள்ள அபாயம் உள்ளிட்டவற்றை விளக்கி மே பதினேழு இயக்கம் எச்சரித்துள்ளது.

பரந்தூர் விமான நிலையம் சென்னையின் விமான நெரிசலுக்கு தீர்வாக அமையாது என்ற நிலையில் அதற்காக 13 கிராம மக்கள் கொடுக்கப் போகும் விலை மிக அதிகம் என்பதை உணர்ந்த அம்மக்கள், தீர்வு வழங்க முன்வராத அரசை கண்டித்தும், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடக் கோரியும் போராட்டத்தை துவங்கினர். இதற்காக, பரந்தூர் பசுமை விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டக் குழு மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர்-விவசாயிகள் நலக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 200 நாட்களாக போராடி வருகின்றனர்.

போராட்டம் துவங்கியது முதல் அப்பகுதி திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க முயன்ற அரசியல் கட்சிகள்-அமைப்புகளின் தலைவர்களை, செயற்பாட்டாளர்களை காவல்துறை தடுத்துநிறுத்தி கைது செய்தது. போராட்டக்களத்திற்கு செல்ல முயன்ற மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டார். அரசின் இந்த ஜனநாயக விரோதச் செயலை மே பதினேழு இயக்கம் அப்போதே கண்டித்தது. இப்போது வரை ஏகனாபுரம் பகுதியில் அத்தகைய சூழல் தான் நிலவுகிறது.

விமான நிலைய திட்டத்திற்கு எதிராக ஏகனாபுரம் கிராம சபை இதுவரை 4 முறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சுற்றுவட்டார கிராமங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் உள்ளிட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இத்திட்டத்தை கைவிட வேண்டி தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். பெரும்பான்மை மக்கள் ஒத்துக்கொண்டால் மட்டுமே திட்டம் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்த திமுக அரசு, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நிலங்களை முறைகேடாக கையகப்படுத்தும் வேலையிலும், தொழிற்துறை அமைச்சகம் திட்டப்பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

பாதிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு தீர்வு வழங்காமல் போராடும் மக்களின் விருப்பத்திற்கு எதிராக பரந்தூர் விமான நிலையத் திட்டப் பணிகளை திமுக அரசு தொடர்ந்து முன்னெடுப்பது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. 200 நாட்களாக போராடி வரும் மக்களின் கோரிக்கைக்கு திமுக அரசு செவிசாய்க்க வேண்டும். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை திமுக அரசு உடனடியாக கைவிட வேண்டுமென 200 நாட்களாக போராடி வரும் மக்களின் சார்பாக மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

ஜனநாயக வழியில் 200 நாட்களாக போராடி வரும் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களின் போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் தன் முழு ஆதரவை அளிக்கிறது. இந்நாளில், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தோழர் வேல்முருகன் மற்றும் பூவுலகின் நண்பர்கள் தோழர் வெற்றிச்செல்வன் ஆகியோர் பங்கேற்கும் 200-வது நாள் பொதுக்கூட்டத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். 200 நாட்களாக மன உறுதியோடு தொடர்ந்து போராடி வரும் மக்களின் போராட்டம் வெல்ல முற்போக்கு ஜனநாயக அமைப்புகள், பொதுமக்கள் என அனைவரும் ஆதரவளித்து துணைநிற்போம் என மே பதினேழு இயக்கம் அறைகூவல் விடுக்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010 

Leave a Reply