சாதி ஒழிப்பு போராளி தோழர் சந்திரபோஸ் அவர்கள் மறைவு! மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்!

சாதி ஒழிப்பு போராளி தோழர் சந்திரபோஸ் அவர்கள் மறைவு! மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்!

தமிழ்நாட்டின் சாதி ஒழிப்பு போராட்டக்களத்தில் நீண்டகாலமாக போராடி வந்த சாதி ஒழிப்பு போராளியும் தியாகி இம்மானுவேல் பேரவையின் நிறுவனத் தலைவருமான தோழர் பூ.சந்திரபோஸ் அவர்களின் மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சாதி ஒழிப்பு போராட்டக் களம் மாபெரும் தோழரை இழந்துள்ளது. தோழர் சந்திரபோஸ் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது.

சாதி ஒழிப்பு போராளி தியாகி இம்மானுவேல் அவர்கள் பெயரில் அமைப்பை துவங்கி, சாதி ஒழிப்புப் போராட்டத்தில் நீண்டகாலம் அதிதீவிரமாக செயல்பட்டு வந்தவர் தோழர் சந்திரபோஸ். ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர். பட்டியல் சமூகங்களிடையே ஒற்றுமையும் அவர்களின் விடுதலைக்காகவும் தொடர்ந்து போராடி வந்ததவர்.

தன்னலம் கருதாது தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல்கொடுத்து வந்தவர் தோழர் சந்திரபோஸ் அவர்கள். தமிழ்நாட்டின் அனைத்து முற்போக்கு சனநாயக அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வந்தவர். பரமக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு நீதி கேட்டது உட்பட பல்வேறு ஜனநாயகப் போராட்டங்களிலும் முனநின்றவர். கொண்ட கொள்கையில் உறுதியுடன் இறுதிவரை நிற்பவர்.

சாதி ஒழிந்த தமிழின விடுதலையே தமிழ்த்தேசியம் என்று கருதியவர் தோழர் சந்திரபோஸ் அவர்கள். சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, சமூகநீதி, இடஒதுக்கீடு, தமிழ்த்தேசியம், தமிழீழ விடுதலை என பல்வேறு தளங்களில் பங்களித்தவர்.

தோழருடன் இணைந்து பணியாற்றியது எங்களுக்கு மறக்க இயலா நிகழ்வுகளாகும். எம் தோழர்களுடனான அவரது கருத்தியல் பகிர்வுகள் எங்கள் தோழர்களுக்கு பல வரலாற்றுச் செய்திகளையும், போராட்ட உணர்வையும் கொடுத்தது என்பதனை இச்சமயத்தில் நினைவு கூர்கிறோம்.

இடஒதுக்கீடு உரிமையில் ‘பட்டியலின வெளியேற்றம்’ என்று பார்ப்பன பாஜக சதிவலையில் பட்டியலின மக்கள் வீழ்ந்துவிடாமல் இருக்க தோழர். சந்தரபோஸ் அவர்கள் மேற்கொண்ட கடும் பிரச்சாரம், போராட்டம் ஆகியன தமிழினம் முடியாத சமகால போராட்ட களங்களாகும். சனாதன ஆற்றல்களுக்கு சவால்விடும் தோழராக மக்களை அணிதிரட்டிய அவரது உழைப்பு போற்றுதலுக்குரியது.

தோழர் சந்திரபோஸ் அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவுடன் போராட்டக்களத்தில் தொடர்ந்து செயல்பட்டு வந்திருந்தார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக 21-01-2023 சனிக்கிழமை அன்று மறைந்தார். தோழரின் இழப்பு தமிழினத்திற்கு மாபெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைத்து தோழர்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் மே பதினேழு இயக்கம் ஆறுதல்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. தோழர் சந்திரபோஸ் அவர்களுக்கு வீரவணக்கம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply