செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் கொலை! குற்றவாளிகளையும் மூடி மறைக்க முயன்ற அதிகாரிகளையும் உடனடியாக கைது செய்!

செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் கொலை! குற்றவாளிகளையும் மூடி மறைக்க முயன்ற அதிகாரிகளையும் உடனடியாக கைது செய்! – மே பதினேழு இயக்கம்

செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த சிறுவன் கோகுல்ஸ்ரீ கடுமையாக தாக்கபட்டு உடல் முழுவதும் காயங்களுடன் இறந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். சிறுவனது தாயாரையும் மிரட்டியதோடு, குற்றச் செயலை மறைக்க அதிகாரிகள் முயன்றுள்ளனர். குற்றத்தில் ஈடுபட்டவர்களை மட்டுமல்லாது குற்றச்செயலை மறைக்க முயன்ற அனைவரையும் கைது செய்ய வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

தாம்பரம் கன்னடப்பாளையம் குப்பைமேடு பகுதியை சேர்ந்த 6 குழந்தைகளுக்கு தாயாரான கணவரை இழந்த பிரியா என்பவது மூத்த மகன் 17 வயது கோகுல்ஸ்ரீ என்பவரை கடந்த டிசம்பர் 30 அன்று தாம்பரம் ரயில்வே போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்துள்ளனர். அவரது தாயாருக்கு அழைப்பு வந்து சென்று பார்த்த போது கோகுல்ஸ்ரீ நன்றாகவே பேசியுள்ளார். பின்னர் கோகுல்ஸ்ரீ செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட நிலையில், 31-ம் தேதி மாலையில் அவர் உடல்நிலை சரியில்லை என்று செங்கல்பட்டு அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாகவும் பின்னர் இறந்துவிட்டதாகவும் அவர் தாயாருக்கு தகவல் கூறியுள்ளனர்.

மருத்துவமனையில் அவர் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளதை அவரது தாயார் பார்த்துள்ளார். பின்னர் செல்போனை பிடுங்கிக்கொண்டு அவரது தாயாரையும் சிறுவர் கூர்நோக்கு இல்ல அதிகாரிகள் அங்கு பணிபுரியும் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் அடைத்து வைத்துள்ளனர். ஜனவரி 2 அன்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் நேரடியாக வந்து அவரை மிரட்டியுள்ளார். சூழலை பயன்படுத்தி அப்போது தப்பிய அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று புகார் அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்.

சிறுவன் கோகுல்ஸ்ரீ திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவே அவரது தாயார் கருதுகிறார். கோகுல்ஸ்ரீ உடல் மீது இருந்த காயங்கள் அதனை உறுதிபடுத்துகிறது. செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அவர் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சூழலில் சிறுவர் கூர்நோக்கு இல்ல அதிகாரிகள் குற்றச் செயலை மூடி மறைக்க முயன்றுள்ளனர். DCPO சிவகுமார் பிரியாவின் மற்ற குழந்தைகள் படிப்பை தடுத்து தெருவுக்கு கொண்டுவந்துவிடுவேன் மிரட்டலும் விடுத்துள்ளார். இச்செயல் அப்பட்டமான அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி குற்றச் செயலுக்கு துணைபோவதாகும்.

இது தொடர்பாக இதுவரை செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்ல ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் குற்றத்தில் ஈடுபட்ட அதிகாரிகளும், குற்றத்தை மறைக்க முயன்ற சிறுவர் கூர்நோக்கு இல்ல அதிகாரிகள், DCPO சிவகுமார் உள்ளிட்டோர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இவர்கள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

எக்காரணம் என்றாலும் சிறுவனை தாக்கி கொலை செய்வது என்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். சிறைச்சாலை கொலைகள் வரிசையில் சிறுவர் கூர்நோக்கு இல்லத்திலும் கொலை நடைபெற்றுள்ளது அதிர்ச்சிக்குரியது. இத்தகைய செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அதற்கு அரசு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply