ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் ஒன்றிய பாஜக அரசு! பீட்டா மற்றும் மோடி அரசின் சதியினை முறியடிப்போம்! – மே பதினேழு இயக்கம்

- in மாநாடு

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் ஒன்றிய பாஜக அரசு! பீட்டா மற்றும் மோடி அரசின் சதியினை முறியடிப்போம்! – மே பதினேழு இயக்கம்

தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க மோடியின் தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு கடந்த காலங்களில் முயற்சித்தது. மெரினா புரட்சியின் மூலம் மோடி அரசுக்கு எதிராக தமிழர்கள் ஒன்றுதிரண்டு போராடி ஜல்லிக்கட்டு உரிமையை வென்றெடுத்தனர். தற்போது நீதிமன்றம் மூலம் மீண்டும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க ஒன்றிய பாஜக அரசின் விலங்குகள் நல வாரியம், பீட்டா அமைப்புடன் இணைந்து முயற்சித்து வருகிறது. மோடி அரசின் இந்த தொடர் தமிழர் விரோத போக்கை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

காளையை காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகளில் பட்டியலில் இணைக்கப்பட்டதை காரணம் காட்டி முன்பு ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க ஒன்றிய அரசு முயற்சித்தது. பின்னர் விதிமுறைக்குட்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டவுடன், காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் இணைத்தது. இதனை சுட்டிக்காட்டி ஒன்றிய அரசின் விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா இணைந்து உச்சநீதிமன்றத்தின் மூலம் 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கியது.

அதன் பின் இரண்டு ஆண்டுகள் சட்டரீதியாக போராடி ஜல்லிக்கட்டு நடத்த முயற்சித்தும், மோடி தலைமையிலான ஒன்றிய அரசு முட்டுக்கட்டை இட்டுவந்தது. இந்நிலையில், இது தமிழர்களின் பண்பாட்டை அழிக்கும் முயற்சி என்பதை புரிந்த தமிழர்கள் வெகுண்டெழுந்தனர். 2017-ம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான தமிழர்கள் ஒன்றுதிரண்டு போராடினர். தமிழர்களின் எழுச்சி தமிழ்நாடு முழுவதும் பரவியது. மெரினா புரட்சியின் காரணமாக, ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்யும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது. தமிழர்கள் வென்றனர்.

அதேவேளை, தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து பீட்டா மற்றும் ஒன்றிய அரசின் விலங்குகள் நல வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகிறது. அந்த வழக்கில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு தற்போது அது உச்ச நிலையை அடைந்துள்ளது. நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய் மற்றும் சி.டி. ரவிக்குமார் ஆகிய 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு இந்த வழக்கை நாள்தோறும் விசாரித்து வந்தது.

கலாச்சார பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு அரசின் சட்டம் தவறானது என்றும், காளைகள் துன்புறுத்தப்பப்படுகின்றன, ஜல்லிக்கட்டு போட்டியின் போது மனிதர்கள் உயிரிழக்கிறார்கள், விதிமுறைகள் ஒழுங்காக பின்பற்றப்படுவதில்லை என பல்வேறு காரணங்களை கூறி ஒன்றிய பாஜக அரசின் விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டு நடத்த தடை கோரியுள்ளது. கடந்த டிசம்பர் 9ம் தேதி உச்சநீதிமன்றம் இதன் மீதான விசாரணையை முடித்து தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

ஒருபுறம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிக்கொண்டே மறுபுறம் தனது அரசின் கீழ் இயங்கும் விலங்குகள் நல வாரியம் மூலம் உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க பாஜக முயற்சிக்கிறது. மேலும் பீட்டா அமைப்பிற்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது. இதன் மூலம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழர் விரோத பாஜக இரட்டை வேடம் போடுவது அம்பலமாகியுள்ளது. மெரினா புரட்சியின் மூலம் தமிழர்கள் போராடி பெற்ற உரிமை மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது பாஜக.

தமிழர் பண்பாட்டை அழிக்க வேண்டும், ஒற்றை இந்துத்துவ ஆரிய கலாச்சாரத்தை தமிழர்கள் மீது திணிக்க வேண்டும் என அத்தனை முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வருகிறது. தமிழர்களுக்கு எதிரான பாஜகவின் இந்த சதியை முறியடிக்க தமிழர்கள் அணியமாவோம். ஒன்றிய அரசிற்கு எதிராக தமிழர்கள் உரிமைக் குரலை எழுப்புவோம். மீண்டும் மெரினா புரட்சிக்கு தயாராவோம்!

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply