பட்டியலின மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளை எதிர்த்து மே17 இயக்கம் போராட்டம்

- in சாதி

தஞ்சை ஒரத்தநாடு தாலுகா பகுதிகளில் பட்டியலினத்தவருக்கு இரட்டைகுவளையும், முடிவெட்ட அனுமதி மறுக்கப்படுவதாகவும் தகவலறிந்து கடந்த அக் 27ம் தேதி மே 17 இயக்க தோழர்களுடன் நானும், தோழர்.அரங்க குணசேகரனும் கள ஆய்விற்கு சென்றோம். அப்பகுதியில் இருக்கும் மே 17 தோழர்களுடன் சென்று ஆய்வு செய்ததில் இரட்டைக்குவளை முறை கிளாமங்கலம் தெற்கு எனும் கிராமத்தில் வழக்கத்தில் இருப்பதும், முடிவெட்ட அனுமதி மறுப்பதையும் அந்த ஊர் மக்கள் தெரிவித்தார்கள். இதனடிப்படையில் தஞ்சை ஆட்சியாளரிடம் முறையிடுவது என்றும், இதற்கு முன் புகாரளித்து நடவடிக்கை எடுக்கப்படாத நிலையை கவனத்தில் கொண்டு செல்வது பற்றியும் முடிவெடுத்தோம்.

நவ 14ம் தேதி ஆட்சியாளரை சந்திக்க முடிவெடுத்ததை அறிந்து இரட்டைகுவளை, முடிவெட்டுதலில் ஒதுக்குதல் ஆகியவற்றை கைவிடுவதாக சம்பந்தப்பட்டவர்கள் எழுத்துபூர்வமாக ஊர்மக்களிடம் தெரியப்படுத்தியதை அறிந்தோம். இதனால் ஆட்சியாளர் சந்திப்பை தள்ளிவைத்த நிலையில் நேற்று நவ 28 காலையில் ஒடுக்குமுறையை ஏவுகிறவர்கள்.

கிராம கூட்டத்தை கூட்டுகிறோம் என்ற பெயரில் தனித்து செயல்பட்டு, பட்டியலின மக்களுக்கு ஊருக்குள் மளிகைப்பொருட்கள் உள்ளிட்டவற்றை கொடுக்கக்கூடாது என கடைகளுக்கு தடை விதித்தனர். இதை மீறுபவர்களுக்கு அபராதம் எனவும் முடிவெடுத்ததாக அறிவித்தனர்.

இதை ஊர்மக்கள் மே 17 தோழர் ராஜேந்திரனுக்கு தெரிவித்து, எனக்கும் அரங்க குணசேகரனுக்கும் தகவல் தெரிவித்தனர். பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்துவோமென சிலர் தெரிவித்ததை உடனடியாக திமுக அரசின் கவனத்திற்கும், தஞ்சை ஆட்சியாளரின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். மாலையில் பதட்டமேற்படுத்தும் சில இளைஞர்களை திரட்ட முயன்றதை காவல்துறைக்கு தெரிவித்ததையடுத்து இரவு 10 மணிக்கு காவலர்கள் கிராமத்திற்கு சென்று கூடியவர்களை கலைத்தனர்.

இது போன்ற சாதிய வன்மத்துடன் இன்றளவும் தொடரும் போக்கினை எதிர்கொள்ளும் வகையில் நேரடியாக செல்வதென முடிவெடுத்திருந்தோம். ஆட்சியாளர் அவர்கள் இன்று களஆய்விற்காக அதிகாரிகளை அனுப்பி வைத்துவிட்டு என்னை தொடர்பு கொண்டு பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார்.

ஆய்வு மேற்கொண்டிருக்கும் அதிகாரிகள் இந்த சாதிய வன்மத்தினை தொடருவதும், தூண்டுவதுமாக இருக்கும் நபர்கள் மீது உடனடியாக சட்டரீதியாக வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதும், பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதும், இரட்டைக்குவளையை கடைபிடிக்கும் கிராமங்களை கண்டறிந்து களைந்தால் மட்டுமே இதை நிரந்தரமாக தடுக்கலாம். சாதிய வன்முறையாளர்களை தனிமைப்படுத்தி சட்டத்தின் கீழ் தண்டித்திட வேண்டும்.

பட்டியல் மக்களை மேலும் சாதிய வன்மத்துடன் சாதி ஆதிக்க நபர்கள் அணுகுவார்களெனில் அதற்கு எதிராக மே17 இயக்கம் சமரசமில்லாமல் உறுதியாக போராடும். பட்டியலின மக்களுக்கு கடைகளி்ல் பொருட்கள் விற்க தடை, முடிவெட்ட தடை, இரட்டைக்குவளை ஆகியவற்றை நடைமுறைப்படுத்த முனையும் நபர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் அடிப்படையில் கைது செய்ய வேண்டுமெனும் கோரிக்கையை மே17 இயக்கம் எழுப்புகிறது.

இச்சாதிய நபர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாமல் சாதி வன்முறை மீண்டும் எழுமெனில் காவலர்கள், அதிகாரிகள், இன்று கிராமத்திற்கு சென்றவர்கள் என அனைவருமே பொறுப்பிற்குள்ளாக்கப்பட்டு துறைரீதியான நடவடிக்கைக்கு மே17 இயக்கம் தனது போராட்டத்தினை முன்னெடுக்கும்.

ஆதிக்க உணர்வோடு பட்டியலின மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளை எதிர்த்து மே17 இயக்கம் தொடர்ந்து போராடும். இச்சிக்கலை தொடர்ந்து கண்காணித்து நிரந்தர தீர்வு எட்டும் வரை மே17 இயக்கம் ஓயாது. சுயமரியாதை உணர்வின் அடிப்படையில் சாதியம் ஒழிக்க கைகோர்ப்போம்.

– மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களது பதிவு

Leave a Reply