தமிழ் நாடு தாயக நாளில் தமிழின உரிமைகளை மீட்டெடுப்போம் என்று உறுதி ஏற்போம் – நவம்பர் 1, 2022

தமிழ் நாடு தாயக நாளில் தமிழின உரிமைகளை மீட்டெடுப்போம் என்று உறுதி ஏற்போம் – நவம்பர் 1, 2022

நன்று தமிழ் வளர்க! – தமிழ்
நாட்டினில் எங்கணும் பல்குக! பல்குக!
என்றும் தமிழ் வளர்க! – கலை
யாவும் தமிழ்மொழியால் விளைந்து ஓங்குக!
இன்பம் எனப்படுதல் – தமிழ்
இன்பம் எனத்தமிழ் நாட்டினர் எண்ணுக!
– பாவேந்தர் பாரதிதாசன்

ஒரு இனம் வரையறை செய்யப்படுவதும், வரலாற்றில் பதிவாகுவதும் அவ்வினம் பேசும் மொழி மற்றும் அந்த இனம் வாழும் நிலத்தின் அடிப்படியிலேதான். சங்க காலத்தில் இருந்தே தமிழ் நாட்டின் எல்லைகள் பலவாக வரையறுக்கப்பட்டன. அனைத்து இலக்கியங்களும் தென் எல்லையாக குமரியையும், வட எல்லையாக வேங்கட மலையும் கூறப்பட்டிருக்கின்றன.

வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து (தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:1-3)

என்று தொல்காப்பிய சிறப்புப்பாயிரமும்,

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு (சிலப்பதிகாரம்,வேனிற்காதை:1-2)

என்றும் சிலப்பதிகாரமும்,

தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா எல்லை (புறநானூறு,17:1-2)

என்று புறநானூறும் கூறும் தமிழ் இன நில எல்லையானது இந்திய ஒன்றியத்தின் மொழிவாரி மாநிலங்களின் பிரிவினைக்கு பின்னும், தமிழர்களின் மரபுவழி நில எல்லைகளை காக்க வடக்கெல்லை மற்றும் தெற்கெல்லை போராட்டங்கள் நடைபெற்று, ஈகியர் சங்கரலிங்கனார் அவர்களின் உண்ணாநிலை உயிர் ஈகத்திற்கு விடையாக அறிஞர் அண்ணா அவர்களால் சட்டமன்ற தீர்மானம் கொண்டுவரப்பட்ட பின்னரே இன்று ‘தமிழ்நாடு’ என்ற பெயர் கொண்ட நிலப்பரப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாடு தாயக நாள் என்பது அடையாள கொண்டாட்ட நாளில்லை. இது தமிழ் நாட்டின் இன உரிமை மீட்பை மனதில் நிறுத்த வேண்டிய நாளாகும். இந்திய ஒன்றியம் என்ற ‘ஆரிய – பார்ப்பன’ அரசியல் அதிகார வர்க்கத்திடம் இருந்தும், ‘இந்திய – ஏகாத்திபதிய – முதலாளித்துவ – பனியா’ பொருளாதார வர்க்கத்திடம் இருந்தும் தமிழர்களின் அரசியல், பண்பாடு, பொருளாதார உரிமைகளை மீட்டெடுக்க உறுதி ஏற்கும் நாளாகவே முன்நிறுத்தப்படுகிறது. இந்தி திணிப்பு தொடங்கி, தமிழ் நாட்டு நிலப்பரப்பை அதானி, அம்பானி, அகர்வால் போன்ற குஜராத் பனியாக்களின் வேட்டைக்காடாக மாற்ற நடக்கும் முயற்சிகள் வரை அனைத்தையும் தடுத்த நிறுத்த அணியமாக வேண்டியதன் இன்றியமையாமையை உணர்தலே, தமிழ் நாடு தாயகநாளில் இம்மண்ணினை பாதுகாக்க உழைத்த தமிழினப்போராளிகளுக்கு நாம் தரும் பெருமையாகும்.

தமிழ் நாடு தாயகநாளில் தமிழின உரிமைகளை மீட்டெடுப்போம் என்று மே பதினேழு இயக்கம் உறுதி ஏற்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply