தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை வன்மையாக கண்டிக்கின்றோம்! தமிழக மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கடற்படையினரை கண்டறிந்து நீதிமன்றத்தில் நிறுத்துக! காவல் காக்க வேண்டிய கடற்படையினர் சொந்த நாட்டு மீனவர்களை தாக்கியது தமிழின விரோத செயலே!

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதை வன்மையாக கண்டிக்கின்றோம்! தமிழக மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கடற்படையினரை கண்டறிந்து நீதிமன்றத்தில் நிறுத்துக! காவல் காக்க வேண்டிய கடற்படையினர் சொந்த நாட்டு மீனவர்களை தாக்கியது தமிழின விரோத செயலே! – மே பதினேழு இயக்கம்

மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ் மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி தாக்கியுள்ளனர். இதில் ஒரு மீனவர் மீது குண்டு பாய்ந்து கடுமையான காயங்களுடன் மருத்துவ சிகிச்சையில் உள்ளார். சொந்த நாட்டு மீனவர்களையே கடற்படையினர் தாக்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இந்திய கடற்படையினரின் இந்த தாக்குதலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

மயிலாடுதுறையை சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 3 மீனவர்கள் இணைந்து 21-10-2022 வெள்ளி அன்று இராமநாதபுரம் பகுதியை அடுத்த தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் தங்கள் விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தான் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையை சேர்ந்த ஐ.என்.எஸ். பங்காரம் என்ற கப்பல் தமிழக மீனவர்கள் மீதான இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தியுள்ளது.

மயிலாடுதுறையை சேர்ந்த வீரவேல் என்ற மீனவர் இந்திய கடற்படையினர் நடத்திய இந்த தாக்குதலில் துப்பாக்கி குண்டு உடலில் பாய்ந்து கடுமையாக காயமடைந்துள்ளார். இவர் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருகிறார்.

மீனவர்களை பாதுகாக்க வேண்டிய கடற்படையினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது மீனவர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இலங்கை கடற்படையினர் நம் மீனவர்களை தாக்கி கொலை செய்வதும் படகுகளை, வலைகளை சேதப்படுத்துவதும் கைது செய்வதுமான செயல்களில் ஈடுபட்டு வந்தது. அதற்கான ஒரு தீர்வை வழங்கக்கோரி ஒவ்வொரு முறையை இந்திய ஒன்றிய அரசை தமிழ் நாடு அரசை நாடி வந்த நிலையில், இந்திய கடற்படையே அது போன்ற ஒரு செயலில் தற்போது ஈடுபட்டுள்ளது.

இலங்கை அரசிற்கு இருக்கும் தமிழின விரோத மனப்பான்மையே தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு காரணமாக இருந்தது. அப்போதெல்லாம் தமிழக மீனவர்களை காக்கவும் பாதுகாப்பு வழங்கவும் இந்திய கடற்படை தவறியது, அவர்களிடையே அதே மனப்பான்மை நிலவுவதையே காட்டியது. இன்று இலங்கையை போன்று தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளது, இந்திய கடற்படையினருக்கும் தமிழர் விரோத மனப்பான்மை இருப்பதை உறுதி செய்கிறது.

தமிழக மீனவர்களை, இந்திய கொடி கட்டிய அவர்களது படகுகளை அடையாளம் காண முடியாமல் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கடற்படையினர் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. சொந்த நாட்டு மீனவர்கள் மீதான இந்த தாக்குதலை எளிமையாக கடந்து விட முடியாது. தமிழக கடற்பகுதியிலிருந்து தமிழக மீனவர்களை அப்புறப்படுத்தும் இந்திய ஒன்றிய அரசியன் சூழ்ச்சியாகவே இதனை பார்க்க வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட இந்திய கடற்படையினர் மீது தமிழ் நாடு அரசு உடனடியாக கொலை முயற்சி வழக்கை பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது இந்திய கடற்படையினரின் கடமை. பாதுகாப்பு தர வேண்டிய கடற்படையினர் சொந்த நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவது, அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கான தகுதியை இழந்துவிட்டதையே காட்டுகிறது. அவர்கள் உடனடியாக தமிழக கடற்பகுதியை விட்டு வெளியேற்றப்பட வேண்டுமெனவும், மாற்று பாதுகாப்பு வழிமுறைகளை தமிழ் நாடு அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம். இலங்கை மற்றும் இந்திய கடற்படையினரிடமிருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க தமிழ் நாடு அரசு அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்; தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டுமென கோருகிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010
22/10/2022

Leave a Reply