பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை திமுக அரசே கைவிடுக! முதலாளிகளின் வளர்ச்சிக்காக மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதை நிறுத்திடுக!

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை திமுக அரசே கைவிடுக! முதலாளிகளின் வளர்ச்சிக்காக மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதை நிறுத்திடுக! – மே பதினேழு இயக்கம்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் விமான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் விதமாக சென்னைக்கு இரண்டாவது புதிய விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்து காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அதனை அமைக்க ஒன்றிய-மாநில அரசுகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இறுதி செய்தன. இதனால் அப்பகுதியை சேர்ந்த 13 கிராம மக்களின் வாழ்வாதாரம் அடியோடு நசுக்கப்படும். வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த திட்டத்தை கைவிட வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த சுமார் 3,000 குடும்பங்கள் இப்பகுதியில் நடைபெறும் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். மாற்று இடம் தருகிறோம், நிலத்தின் சந்தை மதிப்பை விட 3.5 மடங்கு விலை தருகிறோம் என்று கூறி அப்பகுதி மக்களை அப்புறப்படுத்தும் வேலையை அதிகாரிகளும் ஆளும் திமுகவினரும் மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை, அப்பகுதி மக்கள் தங்கள் வாழ்வாதாரம் குறித்து பேச முற்படுவதை அவர்கள் காதுகொடுத்து கேட்கும் மனநிலையில் இல்லை. ஆகையால், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 கிராம மக்களும் கடந்த 80 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய விமான நிலைய திட்டத்திற்காக 4,537 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முயற்சி நடைபெறுகிறது. இதில் ஏகனாபுரம் என்ற ஒட்டுமொத்த கிராமமுமே அழிவுக்குள்ளாகிறது. இவற்றில், புறம்போக்கு நிலம் என்று கூறப்படும் 1317 ஏக்கரில் 955 ஏக்கருக்கு மேல் ஏரி, குளம், குட்டைகள் நிறைந்த நீர்நிலை பகுதிகளாகும். 390 ஏக்கர் மேய்ச்சல் நிலப்பகுதி எனவும் மீதமுள்ள பகுதிகள் மக்கள் வசிப்பிடம் மற்றும் வேளாண்மை நிலம் என்றும் கூறப்படுகிறது. வேளாண்மையும், அதற்கான நீர்நிலைகளும், கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களும் என மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் இதில் அடங்கிப்போகின்றன.

புதிய விமான நிலையத் திட்டத்தின் மூலம் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிவதோடு, சுற்றுச்சூழலும் அழிந்துபோகும் என்பதையே இது காட்டுகிறது. ஏரி, குளங்கள் அழிவதன் மூலம் சூழலியல் பாதிக்கப்படுவதோடு, மழைக்காலங்களின் நீரை தேக்கி வைக்க இடமில்லாது அவை சென்னை நோக்கி பாய்ந்து ஒவ்வொரு மழைக்காலத்திலும் சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வழிவகுக்கும். மேலும், சென்னை பெருநகரத்திற்கான நீராதரமாக விளங்கும் ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாகவும் இப்பகுதி விளங்குகிறது. நீர்வழித்தடங்கள் அழிவதன் மூலம் வெள்ளம் ஏற்பட்டு வீணாவதோடு, கோடையில் சென்னைக்கான குடிநீர் தட்டுப்பாட்டை அதிகரிக்க இத்திட்டம் வழிவகுக்கும். ஆக, சென்னையை அழிவிலிருந்து காக்க பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்டு சுற்றுச்சூழலை காப்பாதே சிறந்த வழியாகும்.

தற்போதைய மீனம்பாக்கம் விமான நிலையம் அடையாற்றின் மீது கட்டப்பட்டதால் 2015-இல் அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் அந்த விமான நிலையத்தையே மூழ்கடித்தது என்பதை நினைவுகூர வேண்டும். அதேபோல், பரந்தூரில் விமான நிலையம் நீர்நிலைகள் மீது அமைக்கப்பட்டால், அழிக்கப்படும் நீர்நிலைகளின் நீரானது விமான நிலையத்தை சூழ்ந்து அதனை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளிவிடும். மேலும், அந்த நீர்நிலைகளை நம்பி வேளாண்மையில் ஈடுபட்டு வரும் சுற்றுவட்டாரப் பகுதிகள் அனைத்துமே பாதிப்புக்குள்ளாகும்.

மீனம்பாக்கம் விமான நிலையம் விமான போக்குவரத்து நெருக்கடியை கையாள போதாது என்று உருவாக்கப்படும் புதிய பரந்தூர் விமான நிலையம், அதற்கான நோக்கத்தை பூர்த்தி செய்யுமா என்ற கேள்வியும் எழுகிறது. ஏனெனில், மீனம்பாக்கம் விமான நிலையத்தை பயன்படுத்தும் முக்கால்வாசி தமிழர்கள் சென்னையை சேராதவர்களே. தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலிருந்து சென்னை வந்து வெளிநாடு செல்பவர்களே ஏராளம். நாளடைவில் வெளிநாடு செல்ல சென்னை விமான நிலையத்தை நோக்கி வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கவே செய்யும். அப்போது பரந்தூர் விமான நிலையமும் போதாது என்ற சூழல் உருவாகும்.

மேலும், நகரிலிருந்து வெகுதொலைவில் அமைக்கப்படும் விமான நிலையங்கள் வரிசையில் பரந்தூர் விமான நிலையம் இந்தியாவிலேயே முதன்மையாக இருக்கும். இதனால் வெளிநாடுகளுக்கு செல்லும் பெரும்பான்மை மக்கள் பரந்தூர் விமான நிலையத்தை பயன்படுத்துவதில் மேலும் சிரமம் ஏற்படும். ஒரு சில வெளிநாட்டு பெருநிறுவன முதலாளிகள் வந்து செல்வதற்கு வசதியாக உருவாக்கப்படும் இந்த புதிய விமான நிலையத்தை 80% தமிழ் நாட்டு விமானப் பயணிகள் பெரும் சிரமத்தை மேற்கொண்டு அடைய வேண்டிய சூழல் உருவாகும்.

இதற்கு தீர்வாக சென்னையை மையப்படுத்திய வளர்ச்சியை நிறுத்த வேண்டும். மாறாக, பரவலான நகரமயமாக்கலும், பிற நகரங்களை நோக்கிய தொழில் வளர்ச்சி கொள்கையும் உருவாக்கப்பட வேண்டும். இதனால் சென்னை பெருநகரமும் வளர்ச்சி வீக்கத்திலிருந்து தப்பிக்க முடியும். மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரிய விமான நிலையங்களை பன்னாட்டு விமான நிலையங்களாக தரம் உயர்த்தி உள்ளூர், வெளிநாடு விமான சேவைகளை அதிகப்படுத்தவும், ஏற்கனவே உள்ள சிறிய விமான ஓடுதளம் கொண்ட பகுதிகளில் பல புதிய சிறு விமான நிலையங்களை உருவாக்கி அதனை பன்னாட்டு விமான நிலையங்களோடு இணைக்கும் வகையில் விமான போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த தமிழ்நாடு அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் தமிழ்நாடு அரசே புதிய விமான சேவையை உருவாக்கி குறைந்த கட்டணத்தில் சாதாரண மக்களும் விமான பயணத்தை மேற்கொள்ளும் வகையில் விமான போக்குவரத்து சேவையை அளிக்க முன்வர வேண்டும்.

இந்தியாவின் பல முக்கிய விமான நிலையங்கள் அதானி போன்ற தனியார் நிறுவனங்களிடம் கையாளிக்கப்படுவதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில், புதியதாக உருவாக்கப்படும் பன்னாட்டு விமான நிலையங்கள் அனைத்தும் தனியாரிடம் அளிக்கும் விதமாகவே திட்டமிடப்படுகிறது. விமான நிலையத்தை இயக்கும் ஒன்றிய விமான நிலைய ஆணையத்திற்கு தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழித்து அளிக்கப்படும் நிலங்கள் அனைத்தும், தனியார் நிறுவனங்கள் இலாபம் சம்பாதிக்க மட்டுமே பயன்படும்.

பரந்தூர் விமான நிலையப் பகுதிலிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ள எண்ணூர் அதானி துறைமுகம் அதன் முழு கொள்ளளவில் இதுவரை பாதிகூட கையாளளதை காண்கிறோம். விமான நிலையமும் கையாளிக்கப்படும் பட்சத்தில், விமான நிலையமும் பயனற்றதாகி போய்விடும். இதற்காக 3000 தமிழ் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டுமா என்பதை தமிழ்நாடு அரசு சிந்திக்க வேண்டும்.

புதிய விமான நிலையத்திற்கான தேவையை மாற்றுவழிகளில் ஈடு செய்வதே சிறந்த வழிமுறையாக அமையும். ஆகையால், போராடும் 13 கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதே தற்போதைய சூழலில் சிறந்த தீர்வாக அமையும். பாதிக்கப்படும் மக்களின் குரலுக்கு திமுக அரசு செவிசாய்க்க வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதையும், அம்மக்கள் சுரண்டப்படுவதையும், இத்திட்டத்தினால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் ரியல் எஸ்டேட் மோசடிகளை தடுத்து நிறுத்தவும் தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், போராடும் மக்களுக்கு கட்சியினர் மூலம் நெருக்கடிகள் கொடுப்பதையும், ஆசை வார்த்தைகள் மூலம் மக்களை பிளவுபடுத்துவதையும் திமுக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். போராடும் மக்களுக்கு ஆதரவளிக்க செல்லும் அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்களை தடுத்து நிறுத்துவதையும், கைது நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். ஜனநாயக முறையில் ஆதரவளிக்க செல்வதை தடுத்து நிறுத்துவது ஜனநாயக விரோத செயலாகும்.

ஜனநாயக வழியில் போராடும் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களின் போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் தன் முழு ஆதரவை அளிக்கிறது. போராடும் மக்களுக்கு உறுதுணையாக நின்று, புதிய விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதை மே பதினேழு இயக்கம் உறுதி செய்யும் என்பதையும் இந்நேரத்தில் உறுதி அளிக்கின்றோம். போராடும் மக்கள் சாதி, மத வேறுபாடுகளை கடந்து ஒற்றுமையுடன் தொடர்ந்து போராடும் பட்சத்தில் மக்களின் வாழ்வாதாரம் உறுதிசெய்யப்படும் என்று கூறுவதோடு, போராடும் மக்களுக்கு வாழ்த்துகளை கூறிக்கொள்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010
17/10/2022

Leave a Reply