ஐநா தீர்மானம்: ஈழத் தமிழர்களை மீண்டும் ஏமாற்றிய சர்வதேச சமூகம்!

ஐநா தீர்மானம்: ஈழத் தமிழர்களை மீண்டும் ஏமாற்றிய சர்வதேச சமூகம்! – மே பதினேழு இயக்கம்

இலங்கைத் தீவு காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது முதல் 60 ஆண்டுகளுக்கு மேலாக, சிறுபான்மை தேசிய இனமான தமிழீழத் தமிழர்கள் மீது பெரும்பான்மை சிங்கள-பௌத்த பேரினவாதம் தொடர்ந்து கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை நிகழ்த்தி வருகிறது. அதன் உச்சகட்டமாக 2009-ம் ஆண்டு தமிழர்கள் மீது நடத்தப்பட்ட போரில் 1,46,679 பேரை இலங்கை இனப்படுகொலை செய்தது.

இந்த இனப்படுகொலை போரில் சிங்கள-பௌத்த பேரினவாதத்திற்கு ஆதரவாக அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் துணை நின்றன. தமிழீழ இனப்படுகொலைக்காக நீதி வேண்டி சர்வதேச சமூகத்திடம் தமிழினினம் மன்றாடி வந்த போது, போரில் சூழ்ச்சி செய்து தமிழர்களை வீழ்த்தியதை போல, ஐநா மனித உரிமை அவையிலும் தமிழர்களை வீழ்த்தும் வேலையை மேற்குலக நாடுகள் மேற்கொண்டன; இன்றும் மேற்கொண்டிருக்கிறது.

தமிழர்களுக்கெதிரான போர் முடிந்த சில தினங்களில் மே 26, 2009 அன்று நடந்த ஐநா மனித உரிமைகள் கூட்டத்தில் அப்போதைய அதன் ஆணையர் நவநீதம் பிள்ளை இலங்கை மீது சர்வதேச விசாரணை வேண்டுமென்று சொன்னார். இதனை தொடர்ந்து ஜூன் 23, 2009-இல் நடந்த ஐநா மனித உரிமை கூட்டத்தில் ஐநா-வின் பொதுச் செயலாளர் திரு.பான் கீ மூன், மனித உரிமை செயற்பாட்டாளர்களான திரு.மார்சுகி தருஸ்மன், திருமிகு.யாஸ்மின் சூகா, திரு.ஸ்டீவ் ராட்னர் அடங்கிய மூவர் குழுவை அமைத்தார். அந்த குழு தனது அறிக்கையினை ஏப்ரல் 12, 2011 அன்று ஐநா மனித உரிமை மன்றத்தில் வழங்கியது. அதில் முதல் பரிந்துரையே இலங்கை மீது சர்வதேச விசாரணை வேண்டுமென்பது தான்.

இப்படி ஐநா மட்டத்தில் சர்வதேச விசாரணை என்று இருந்ததை மறுத்து, இலங்கையின் வழிமுறையையே அமெரிக்கா 2012-இல் ஐநா மனித உரிமை அவையில் ஒரு தீர்மானமாக கொண்டுவந்து நிறைவேற்றியது. திரு.தருஸ்மன் குழு போர்க்குற்றத்திற்காக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றது. இராஜபக்சேவின் LLRC உள்நாட்டு விசாரணையை விடுதலைப்புலிகள் மீது மட்டுமே நடத்த வேண்டுமென்றது. ஐநா மனித உரிமை ஆணையத்தில். இதுபற்றிய விவாதம் வந்த பொழுது அமெரிக்காவும், இங்கிலாந்தும் தருஸ்மன் கமிட்டி அறிக்கையை நிராகரித்து, இராஜாக்சேவின் LLRC அறிக்கையின் பரிந்துரைகளை ஏற்றது. இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் ஐநா மனித உரிமை அவையில் அமெரிக்காவின் தலைமையில் மேற்குலகம் ஒரு தீர்மானத்தை கொண்டுவந்தது. இதில் இனப்படுகொலை பற்றியோ, போர்க்குற்றம் குறித்தோ, சர்வதேச விசாரணை குறித்தோ தீர்மான வரைவை அமெரிக்காவும், இங்கிலாந்தும் உருவாக்கவில்லை. தமிழர்கள் எனும் வார்த்தையும் பின்னாளில் நீக்கப்பட்டது.

இந்த வஞ்சகத்தினை இந்திய அரசும் மேற்குலகோடு இணைந்து மேற்கொண்டது. இவ்வாறாக திசைதிருப்பப்பட்ட தீர்மானங்களே ஐநா மனித உரிமை அவையில் முன்மொழியப்பட்டது. இறுதியில் இத்தீர்மானத்தை முன்வைத்து இலங்கைக்குள் தனக்கு சாதகமான ஆட்சி மாற்றத்தை அமெரிக்கா செய்த்து. அப்போதே, இத்தீர்மானம் வஞ்சகமானது, தமிழர் விரோதமானது என மே 17 இயக்கம் அம்பலப்படுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்தியது. இதனடிப்படையில் சென்னை. மெரினாவில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரட்டப்பட்டு, ஐநா-வால் கொண்டவரப்பட்ட தீர்மானம் எரிக்கப்பட்டது.

2014-இல் இலங்கை அதிபர் இராசபக்சேவின் தீவிர சீன சார்பை தடுக்க இனப்படுகொலைக்கு பதிலாக போர்குற்றங்களுக்கான விசாரணை என்று பாதிக்கப்பட்ட விடுதலை புலிகளையும் விசாரிக்க வேண்டுமென்று இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா ஐநா மனித உரிமை அவையில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது. 2015-இல் இலங்கையில் இராசபக்சே ஆட்சியை இழந்து, அமெரிக்க சார்பு சிறிசேனா தலைமையிலான ஆட்சி வந்தவுடன் 2014-ஆம் ஆண்டின் விசாரணை அறிக்கையை ஆறு மாதகாலம் தள்ளிவைத்தது. மேலும், தமிழர்கள் என்ற வார்த்தையே இல்லாமலும், தமிழர்களை மதச்சிறுபான்மையினர் என்று சுருக்கியும் இலங்கை அரசே முன்வைத்த ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு அதனை அமெரிக்காவும் இந்தியாவும் வெற்றிபெறச்செய்தது.

பின் 2017-இல் மேலும் ஒன்றரை ஆண்டுகள் விசாரணை அறிக்கையை தள்ளிவைத்ததோடு, Hybrid Mechanism என்ற பெயரில், அனைத்துலக மேற்பார்வையோடு உள்ளக விசாரணை என்ற ஒரு தீர்மானத்தை அமெரிக்கா முன்வைத்து வெற்றிபெறச்செய்தது. 2019-இல் மேலும் இரண்டு ஆண்டுகள் தள்ளிவைத்தது. இப்படி தொடர்ச்சியாக தமிழீழ இனப்படுகொலையை மூடி மறைக்கும் வேலையிலும், இனப்படுகொலை குற்றவாளிகளை தப்புவிக்கும் வேலையையும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் செய்து வருகிறது. இதனை அப்போதே ஐநா அரங்கு உள்ளிட்ட எல்லா இடங்களிலும் மே17 இயக்கம் அம்பலப்படுத்தி போராட்டத்தை தீவீரப்படுத்தியது. இதன் தொடர்ச்சிதான் தற்போது ஐநா மனித உரிமை அவையின் 51-ஆம் அமர்விலும் நடந்திருக்கிறது.

இலங்கையில் தமிழர்களுக்கெதிராக இன்றும் நடைபெற்றுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான விசாரணை ஆணையம், தமிழர்களின் மீள்குடியேற்றம், தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலம், தமிழர்களின் கோவில்கள் இடிப்பு உள்ளிட்ட எந்த பிரச்சனையையும் கணக்கில் எடுக்காமல் தற்போதைய அமர்வில் அமெரிக்கா, இங்கிலாந்து கொண்டு வந்த தீர்மானம் 20 நாடுகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. முதல் இரண்டு வரைவு தீர்மானத்தையும் மிகக்கடுமையாக எதிர்த்த இலங்கையே இறுதி வாக்கெடுப்பில் தீர்மானத்தை ஏற்றுக்கொள்கிறோமென்று அறிவித்து விட்டது.

இந்த தீர்மானம் 2010-லிருந்து தொடர்ச்சியாக ஐநா மனித உரிமை அவையில் இலங்கை குறித்து விவாதிக்கப்படும் செயல்பாடுகளின் தொடர்ச்சி. 2010-லிருந்து தொடர்ச்சியாக கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் வழியாக சிறிது சிறிதாக ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கான நீதி துடைத்தெறியப்பட்டன.

குறிப்பாக,

* தற்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானத்தில், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்று எதனையும் உறுதியாக முன்வைக்காமல், இலங்கை அரசு கவனத்தில் கொள்ளவேண்டுமென்ற வகையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

* இனப்படுகொலைக்குள்ளான தமிழீழத் தமிழர்களுக்கெதிரான இலங்கை அரசின் குற்றங்கள் என்பது மறைக்கப்பட்டு, இலங்கையின் பொருளாதார பிரச்சனைகள், தொழிலாளார்களின் கூலி உயர்வு பிரச்சனை, சமீபத்தில் இலங்கையில் மக்கள் போரட்டத்தின் போது நடந்த மனித உரிமைகள் மீறல் என முற்றிலும் மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பான தமிழீழ விடுதலைப் புலிகளையும் விசாரிக்க வேண்டுமென இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.

* ஐநா மற்றும் மனித உரிமை அமைப்புகளின் மேற்பார்வையில் குற்றங்கள் குறித்தான தகவல் சேகரிக்கப்படும் என்பது நீக்கப்பட்டு, அந்த பணிகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டுமெனவும், ஐநா அதற்கான வசதிகளை இலங்கைக்கு செய்திகொடுக்கும் என்று மாற்றப்பட்டுள்ளது.

* இனப்படுகொலை நடைபெற்று 13 ஆண்டுகள் முடிந்த பிறகும், இலங்கையை காப்பாற்றும் விதமாக இலங்கை அரசுக்கு மேலும் மூன்று ஆண்டுகள் கால அவகாசத்தை இந்த தீர்மானம் அளித்திருக்கிறது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் 57-ஆவது அமர்வில், அதாவது 2025-இல் நடத்தப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இனப்படுகொலை செய்த இலங்கையை காக்கும் வகையில் இப்படியான ஒரு தீர்மானத்தை மீண்டும் ஒரு முறை அமெரிக்காவும் இங்கிலாந்தும் கொண்டு வந்துள்ளது. அது இலங்கை அரசே ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்கின்றது என்றால், அது எந்தளவிற்கு தமிழர் தரப்பிற்கு எதிரானதாக உள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த தீர்மானத்தின் மீதான இந்தியாவின் நிலைப்பாடு வழக்கம்போல தமிழர்களுக்கு துரோகமிழைப்பதாக உள்ளது. பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி ஐநா அவையில் இந்தியா ஒரு தீர்மானத்தை கொண்டுவரவேண்டுமென்ற தமிழர்களின் கோரிக்கையை வழக்கம்போல புறக்கணித்து, ஒன்றுமில்லாத இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கூட கலந்துகொள்ளாமல் மறைமுகமாக இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டிருக்கிறது.

தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி வேண்டிய தமிழர்கள் வழக்கம்போல இந்த புதிய தீர்மானத்தின் மூலம் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளனர். சர்வதேச சமூகத்தின் மீது தமிழர்கள் நம்பிக்கை வைக்கும் ஒவ்வொரு முறையும் இது போன்ற துரோகத்தால் ஏமாற்றப்படுகின்றனர். தமிழர்கள் அனைவரும் இது குறித்த ஒரு மீளாய்வினை நடத்தி, சர்வதேச சமூகத்தை எதிர்கொள்ள வேண்டும்.

இனப்படுகொலையில் ஈடுபட்ட அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளே தமிழர்களுக்கு நீதியை பெற்றுத் தரும் என்று எதிர்பார்ப்பது சரியான நிலைப்பாடாக இருக்காது. வல்லரசு நாடுகள் தமது புவிசார் அரசியல் நலனுக்காக இலங்கை அரசை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இதுபோன்ற தீர்மானங்களை கொண்டுவருகின்றனவே தவிர, அதில் தமிழர்களுக்கு நீதியை பெற்றுத்தர வேண்டும் என்ற நோக்கம் ஒரு போதும் இருந்ததில்லை.

தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வல்லரசுகளின் இந்த அரசியல் விளையாட்டை அம்பலப்படுத்துவதன் மூலம் ஒரு நெருக்கடியை உண்டாக்கி சர்வதேச சமூகத்தை தமிழர்களுக்கான நீதியை பெற்றுத்தருவதை நோக்கி தள்ள முடியும். அதற்கான அரசியல் திட்டத்தினை வகுக்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் விரும்புகிறது. தமிழன் இல்லாத நாடில்லை. அந்தந்த நாடுகளிலெல்லாம் நம் இன அரசியலை முன்னெடுப்போம். ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளை கூண்டிலேற்றுவோம். தமிழீழம் காண்போம்.

தமிழர்களின் தாகம், தமிழீழத்தாயகம்!

மே பதினேழு இயக்கம்
9884864010
14/10/2022

Leave a Reply