இந்திய ஒன்றிய அரசு நிறுவனங்களில் கட்டாய இந்தி! அமித்சா தலைமையிலான குழுவின் பரிந்துரை முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும்! இந்தித் திணிப்பு ஆதிக்கத்தை எதிர்த்திடுவோம்! பாஜக இந்துத்துவ இந்திய அரசின் இந்தித் திணிப்பு ஆதிக்கத்தை விரட்டியடிக்க ஒன்றிணைவோம்!

இந்திய ஒன்றிய அரசு நிறுவனங்களில் கட்டாய இந்தி! அமித்சா தலைமையிலான குழுவின் பரிந்துரை முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும்! இந்தித் திணிப்பு ஆதிக்கத்தை எதிர்த்திடுவோம்! பாஜக இந்துத்துவ இந்திய அரசின் இந்தித் திணிப்பு ஆதிக்கத்தை விரட்டியடிக்க ஒன்றிணைவோம்! – மே பதினேழு இயக்கம்

இந்திய ஒன்றிய அரசின் தொழிற்நுட்ப உயர்கல்வி நிறுவனங்களிலும், பள்ளிக்கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழியாக இந்தி கட்டாயம் இருக்க வேண்டும், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி இருக்க வேண்டும் போன்ற பல்வேறு நிலைகளில் இந்தியை கட்டாயமாக்கும் பரிந்துரைகளை அமித்சா தலைமையிலான குழு அளித்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த கட்டாய இந்தி திணிப்பு முயற்சியை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்ற குழு கடந்த 1976-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 20 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் அடங்கிய இந்த குழு 1963 அலுவல் மொழிகள் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. தற்போதைய உள்துறை அமைச்சர் அமித்சா தலையமையிலான இந்த குழு, கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தனது 11-வது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் அளித்துள்ளது.

இந்த அறிக்கையில், இந்திய ஒன்றிய அரசின் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற தொழிற்நுட்ப உயர்கல்வி நிறுவங்களிலும், கேந்திர வித்யாலயா, நவோதயா வித்யாலயா போன்ற பள்ளிக்கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழியாக ஆங்கிலத்திற்கு பதில் இந்தி கட்டாயமாக்கப்பட வேண்டுமென பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் வேலைவாய்ப்புக்கான எழுத்துத் தேர்வுகளில் கேள்வித்தாளை ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியில் மட்டும் வழங்க வேண்டுமெனவும் பரிந்துரைத்துள்ளது. அத்தியாவசிய இடங்களில் மட்டும் ஆங்கிலப் பயன்பாடு இருக்கலாம், அதுவும் படிப்படியாக இந்தியைக் கொண்டு முழுமையாக மாற்றப்பட வேண்டும் என பரிந்துரைக்கிறது.

இந்தி பேசும் மாநிலங்களில், அரசு அலுவல்கள் அனைத்தும் முற்றுமுழுதாக இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும், அரசு நிகழ்வுகள் இந்தியில் மட்டுமே நடைபெற வேண்டுமெனவும் இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது. ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டால், விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதற்கான பதில் வருடாந்திர பணி செயல்திறன் அறிக்கையில் இணைக்கப்படும் என்றும் கூறுகிறது. வேலைவாய்ப்பு நேர்காணலில் போது தகுதியான நபர்கள் இந்தி தெரிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறுகிறது.

இத்தகைய பரிந்துரைகள், இந்திய ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகள் முழுக்க இந்தி மொழி பேசுபவர்களுக்கே என்ற நிலையை உருவாக்கும். இந்த மொழி அடிப்படையிலான பாகுபாடு இந்தியர்கள் அனைவரும் சமம் என்னும் அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானதாகும். இந்திய ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிற்று மொழி இந்தி மட்டுமே என்பது, இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் மட்டுமே பயில முடியும், இந்தி தெரியாதவர்கள் ஒன்றிய அரசு நிறுவனங்களில் பயில தகுதியற்றவர்கள் என்கிறது. இந்திய ஒன்றிய அரசே இந்தியர்களை இத்தகைய பாரபட்சத்துடன் அணுகுவது கடும் கண்டனத்திற்குறியது.

ஐநா-வின் அலுவல் மொழியாக இந்தியை கொண்டுவர வேண்டும், அரசின் விளம்பரங்களுக்கான பட்ஜெட்டில் 50 சதவீதத்திற்கும் மேல் இந்தி மொழி விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்பட வேண்டும், இந்தி மொழியின் காரணமாக பணியிடங்கள் 3 ஆண்டுகள் காலியாக இருந்தால் உயர் அதிகாரிகள் பொறுப்புதாரிகளாவார்கள், இந்தி மொழியை பயன்படுத்தும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை அதிகரிப்பது, பணிபுரியும் கணினிகளை இந்திமயப்படுத்துவது உள்ளிட்ட மேலும் பல பரிந்துரைகளை இந்த அறிக்கை அளித்துள்ளது.

இந்தியாவின் அலுவல் மொழிகளாக 22 மொழிகள் இருக்கும் போது, அனைத்தையும் சமமாக நடத்த வேண்டிய ஒன்றிய அரசு இந்தியை மட்டும் ஊக்குவித்துக்கொண்டு பிற மொழிகளை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபவதை இந்த அறிக்கை அப்பட்டமாக காட்டுகிறது. இந்தியை தாய்மொழியாக கொண்டிராத, இந்தி மொழி பேசாத மக்களை நாட்டின் இரண்டாம்தர குடிமக்களாக கருதப்பட வேண்டும் என்பதை இந்த அறிக்கை மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது. இந்திய ஒன்றிய அரசு என்பது தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களையும் உள்ளடக்கியதாகும். பெரும்பான்மை இந்தி பேசாத மாநிலத்தவர்களிடம் வரியை பெற்றுக்கொன்று, இந்தி மொழிக்கும், இந்தி பேசுபவர்களுக்கும் மட்டும் கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க முடிவெடுத்துள்ளது ஒருதலைபட்சமானது மற்றும் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயலாகும்.

இந்தியை முன்னிலைப்படுத்தி நாட்டு மக்களிடையே பாகுபாட்டை ஊக்குவிக்கும், இந்தி பேசாதவர்கள் இரண்டாம்தர குடிமக்களாக மாற்றும் இந்திய ஒன்றிய அரசின் இந்த பரிந்துரைகளை மே பதினேழு இயக்கம் முற்றிலும் நிராகரிக்கிறது. ஒன்றிய அரசின் இந்த பாரபட்ச தன்மை அரசியலமைப்புச் சட்டத்திற்கே முரணானதாகும். இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களைக் கண்ட தமிழினம் இதனை தந்தை பெரியார் வழியில் துணிந்து எதிர்த்துப் போராடும். இந்த மொழிவழி மேலாதிக்கத்தை கண்டிக்க சனநாயக ஆற்றல்கள் அனைத்தும் முன்வர வேண்டுமென மே பதினேழு இயக்கம் அறைகூவல் விடுக்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply