விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அக்டோபர் 2 சமூக நல்லிணக்க பேரணி வெற்றி பெற வாழ்த்துகள்! பாசிசத்திற்கு எதிரான இப்பேரணியில் மே பதினேழு இயக்கம் பங்கேற்கிறது!

- in சமூகநீதி, பேரணி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அக்டோபர் 2 சமூக நல்லிணக்க பேரணி வெற்றி பெற வாழ்த்துகள்! பாசிசத்திற்கு எதிரான இப்பேரணியில் மே பதினேழு இயக்கம் பங்கேற்கிறது! – மே பதினேழு இயக்கம்

காந்தியாரின் பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் பேரணி நடத்த இந்துத்துவ பயங்கரவாத ஆஎஸ்எஸ் கும்பலுக்கு காவல்துறை அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், காவல்துறை அதற்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டுமெனவும் மே பதினேழு இயக்கம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட ஜனநாயக முற்போக்கு அமைப்புகள் அனைத்தும் கோரிக்கை விடுத்துள்ளன.

அதே வேளை, அக்டோபர் 2 அன்று தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சமூக நல்லிணக்கப் பேரணி நடைபெறும் என அதன் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் அறிவித்திருந்தார். அதன்படி 25-09-2022 அன்று தமிழ் நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு அவர்களை நேரில் சந்தித்து பேரணிக்கு அனுமதி வழங்க கோரிக்கை வைத்திருந்தார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக 26-09-2022 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், கட்சி வேறுபாடு பார்க்காமல் ஜனநாயக சக்திகள் அனைவரும் சமூக நல்லிணக்கப் பேரணியில் பங்கேற்க வேண்டுமென தோழர் தொல்.திருமாவளவன் அவர்கள் அறைகூவல் விடுத்திருந்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பாசிசத்திற்கு எதிரான இந்த முன்னெடுப்பை மே பதினேழு இயக்கம் வரவேற்கிறது. இந்துத்துவ பயங்கரவாத ஆஎஸ்எஸ்-பாஜக கும்பலின் தமிழ் நாட்டை சீர்குலைக்கும் சதி முறியடிக்கப்பட சமூக நல்லிணக்கப் பேரணி வெற்றி பெற வேண்டுமென வாழ்த்துகிறோம்.

அமைதிப் பூங்காவாக திகழ்ந்த தமிழ் நாட்டில் நாள்தோறும் வன்முறைகள் அரங்கேற்றும் நிலைக்கு பாரதிய ஜனதா கட்சி சென்றுள்ளது. ஆர்எஸ்எஸ்-பாஜக செல்வாக்கு மிகுந்த இடங்கள் அனைத்தும் இன்று பதட்டத்திற்குரிய இடமாக மாறியுள்ளது. ஆர்எஸ்எஸ்-பாஜக வட இந்திய மாநிலங்களில் மேற்கொள்ளும் வன்முறை கலாச்சாரத்தை சமூக நல்லிணக்க மாநிலமாக திகழும் தமிழ் நாட்டில் இறக்குமதி செய்வதே காரணமாகும். இதன் மூலம் சாதி மத அடிப்படையில் சமூகத்தை பிளவுபடுத்தி தமிழர் விரோத அந்நிய இந்துத்துவ கருத்தியலை தமிழ் நாட்டில் திணிக்கும் வேலையை ஆர்எஸ்எஸ்-பாஜக முன்னெடுக்கிறது.

அதன் ஒரு பகுதியாக காந்தி பிறந்த நாளில் காந்தியை கொன்ற கூட்டம் தமிழ் நாடு முழுவதும் பேரணி நடத்த முயலுகிறது. காந்தியை கொன்றதை கொண்டாடும் வன்ம மனநிலையே இந்துத்துவ பயங்கரவாத ஆர்எஸ்எஸ்-பாஜகவிடம் தெரிகிறது. இதனை முறியடிக்கும் நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சமூக நல்லிணக்கப் பேரணி முன்னெடுக்கப்படுகிறது. தமிழ் நாட்டின் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயலும் இந்துத்துவ பயங்கரவாத ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலுக்கு எதிராக தமிழ் நாட்டின் முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றிணையும் வகையில் சமூக நல்லிணக்கப் பேரணி அமையும் என மே பதினேழு இயக்கம் கருதுகிறது.

அந்த வகையில், தமிழ் நாடு முழுவதும் நடைபெறும் சமூக நல்லிணக்கப் பேரணியில் பங்கெடுப்பதென மே பதினேழு இயக்கம் முடிவு செய்துள்ளது. ஆகையால், சமூக நல்லிணக்கப் பேரணி எங்கெங்கு நடைபெறுகிறதோ அப்பகுதிகளை சேர்ந்த மே பதினேழு இயக்கத் தோழர்கள், ஆதரவாளர்கள் என அனைவரும் அப்பேரணியில் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், சமூக நல்லிணக்கப் பேரணி வெற்றி பெற அனைத்து உதவிகளையும் அளிக்க முன்வர வேண்டுமென மே பதினேழு இயக்கத் தோழர்கள், ஆதரவாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பாசிச பயங்கரவாத ஆர்எஸ்எஸ் பேரணிக்கு எதிரான சமூக நல்லிணக்கப் பேரணியில், தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளும் கட்சி வேறுபாடுகள் கடந்து ஓரணியில் பெருந்திரளாக பங்கேற்று, பேரணியை வெற்றிபெற செய்ய வேண்டுமென மே பதினேழு இயக்கம் அறைகூவல் விடுக்கிறது.

மே பதினேழு இயக்கம்
988464010

Leave a Reply