வருமான வரி சோதனை மூலம் எஸ்.டி.பி.ஐ. கட்சியை அச்சுறுத்த நினைக்கும் ஒன்றிய பாஜக அரசினை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வருமான வரி சோதனை மூலம் எஸ்.டி.பி.ஐ. கட்சியை அச்சுறுத்த நினைக்கும் ஒன்றிய பாஜக அரசினை வன்மையாக கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம்


எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கோவை மாவட்ட அலுவலகத்தில் செப்டம்பர் 13 இரவு ஒன்றிய வருமான வரித் துறையினர் புகுந்து சோதனையிட்டுள்ளனர். எவ்வித முகாந்திரமும் இல்லாமல் ஒன்றிய பாஜக அரசின் ஏவலின் பேரில், சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல், அச்சுறுத்துவதை மட்டுமே நோக்கமாக கொண்டு இந்த சோதனையை நடத்தியுள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சி மீதான ஒன்றிய பாஜக அரசின் இந்த அத்துமீறலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

கடந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகர மாமன்ற உறுப்பினராக எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளர் தனித்து நின்று வெற்றி பெற்றுள்ளார். காவிகளின் கோட்டையாக கருதப்படும் பகுதியில் சிறுபான்மை இசுலாமியர் ஒருவர் அனைத்து தரப்பு மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்றதை பாஜகவினரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆகையால் பொதுமக்கள் மத்தியில் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் வருமான வரித்துறையினர் செயல்பட்டுள்ளனர்.

மேலும், கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் அலுவலகம் கட்சியின் அரசியல் அலுவல் பயன்பாடுகளை தாண்டி மக்கள் சேவை மையமாக செயல்படுகிறது. நாள்தோறும் பொதுமக்கள் பலர் வந்து செல்லும் இடமாக உள்ளது. இப்படியான பொது நீரோட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி அலுவலகம் செயல்படுவதை தடுக்கும் நோக்கத்திலும், இங்கு வந்து செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் ஒன்றிய பாஜக அரசினால் இந்த வருமான வரி சோதனை ஏவப்பட்டுள்ளது. மூன்று மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கைப்பற்ற ஏதுமில்லாமல் வெறுங்கையுடன் வருமான வரித்துறையினர் திரும்பி சென்றதன் மூலமே இதனை அறிந்துகொள்ள முடிகிறது.

எஸ்.டி.பி.ஐ. கட்சி ஜனநாயக ரீதியாக சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும் ஓர் அரசியல் அமைப்பு. குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழர்களின் வாழ்வாதாரப் போராட்டக் களங்கள் அனைத்திலும் முற்போக்கு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கும் அமைப்பாகவும், தமிழீழத்தில் நடைபெற்றதை இனப்படுகொலை என அங்கீகரிக்கும் அமைப்பாகவும் உள்ளது. ஆண்டுதோறும் மே மாதத்தில் நடைபெறும் தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வில் தவறாது பங்கேற்கும் அமைப்பாகும்.

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத செயற்பாடுகளை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சமரசமில்லாமல் தொடர்ந்து போராடி வருகிறது. ஒன்றிய பாஜக அரசின் பல்வேறு அடக்குமுறைகளை ஜனநாயக ரீதியாக எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஜனநாயக வெளியினை தடுத்திடவும், அதன் ஜனநாயக குரலை ஒடுக்கவும் ஒன்றிய அரசின் ஒரு நிறுவனமான மத்திய வருமான வரித்துறை மூலம் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் எஸ்.டி.பி.ஐ. கட்சியினை முடக்கிவிட முடியாது என்பதனையும், இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சி சட்டரீதியாக எதிர்கொள்ளும் என்பதனையும் மே பதினேழு இயக்கம் அறியும்.

ஒன்றிய பாஜக அரசு ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளி பாசிசத்தின் மூலம் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயலுகின்றது. அதன் ஒரு பகுதியாகவே எஸ்.டி.பி.ஐ. கட்சி போன்ற ஜனநாயக அமைப்புகளை முடக்க முயலுகிறது. இந்த சூழலில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு உறுதுணையாக மே பதினேழு இயக்கம் இருக்கும் என்பதை உறுதிபட கூறுகிறோம். ஒன்றிய பாஜக அரசின் நெருக்கடிகளை மே பதினேழு இயக்கமும் சந்தித்துள்ளது என்ற வகையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் இணைந்து ஒன்றிய பாஜக அரசின் ஜனநாயக விரோத செயல்களை மே பதினேழு இயக்கம் எதிர்கொள்ளும் என கூறிக்கொள்கிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply