கோவையில் தந்தை பெரியார் பெயரில் திறக்கப்படவிருந்த உணவகத்தை தாக்கிய இந்துத்துவ பயங்கரவாத செயலை வன்மையாக கண்டிக்கிறோம்!

கோவையில் தந்தை பெரியார் பெயரில் திறக்கப்படவிருந்த உணவகத்தை தாக்கிய இந்துத்துவ பயங்கரவாத செயலை வன்மையாக கண்டிக்கிறோம்! – மே பதினேழு இயக்கம்

கோவை மாவட்டம் காரமடை அருகிலுள்ள கண்ணார்பாளையத்தை சேர்ந்த பெரியாரிய தோழர் பிரபாகரன் அவர்கள் தந்தை பெரியார் பெயரில் ஓர் உணவகத்தை அப்பகுதியில் இன்று (14-09-2022) திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். இந்நிலையில், நேற்று இந்து முன்னணியை சேர்ந்த இந்துத்துவ பயங்கரவாத கும்பல் கடைக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்து முன்னணியினரின் இந்த அராஜக செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

நேற்று மாலை 6 மணியளவில் 10-க்கும் மேற்பட்ட இந்துத்துவ ரவுடிகள் கடைக்குள் புகுந்து, “இது எங்கள் கோட்டை! இங்கு எப்படி ஈவெரா பெயரில் கடையை திறப்பாய்?” என்று கூறி தகராறு செய்துள்ளனர். அப்போது கடையில் இருந்த தோழர் பிரபாகரனின் மனைவியை ஆபாசமாக திட்டி, மிரட்டியுள்ளனர். தொடர்ந்து கடையில் இருந்து பொருட்கள் அனைத்தையும் தாக்கி உடைத்துள்ளனர். தடுக்க முயன்ற கடை ஊழியர்களையும் தாக்கியுள்ளது அந்த இந்துத்துவ ரவுடி கூட்டம்.

தந்தை பெரியாரின் பெயரில் ஓர் உணவகத்தை திறப்பதை கூட இந்துத்துவ கும்பல் தடுத்து நிறுத்த முயற்சிப்பது, காவி பயங்கரவாதம் தமிழ்நாட்டில் பரவுவதையே காட்டுகிறது. தந்தை பெரியாரின் வழி வந்த திமுகவின் ஆட்சியில் இத்தகைய அராஜக செயல் நடந்தேறுவது, தந்தை பெரியாரின் சமூகநீதி கொள்கைகள் பரவுவதை தடுத்து நிறுத்த காவி கும்பல் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதையே காட்டுகிறது.

ஆர்எஸ்எஸ்-பாஜக ஆளும் உத்திரபிரதேசம் உள்ளிட்ட வடஇந்திய மாநில இந்துத்துவ கலாச்சாரத்தை தமிழ்நாட்டில் இறக்கும் வேலையை இந்த கும்பல் செய்கிறது. இது முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். திமுக தலைமையிலான புதிய ஆட்சி அமைந்த பின்னரும் இந்துத்துவாவினர் மீது காவல்துறை மென்மையான போக்கை கடைபிடிப்பதே இன்று இத்தகைய சூழலுக்கு வழிவகுத்துள்ளது.

தந்தை பெரியாரின் பெயரிலான உணவகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், தந்தை பெரியாரின் கொள்கைகளை தாங்கி நிற்கும் திமுக தலைமையிலான அரசின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். தந்தை பெரியாரின் சிலை மீது இதே கும்பல் கைவைத்த போது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இன்று இந்த சூழல் ஏற்பட்டிருக்காது.

இந்த தாக்குதலில் சிலரை கைது செய்ததோடு நின்றுவிடாமல், இது போன்ற சம்பவம் மீண்டும் நடந்திடாத வகையில், ஒரு முன்னுதராணமாக அமைந்திட, அவர்களை கடுமையாக தண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. தந்தை பெரியாரின் பெயரிலான உணவகம் தகுந்த பாதுகாப்புடன் திட்டமிட்டபடி நடத்தப்படுவதை திமுக அரசு உறுதி செய்ய வேண்டுமென கோருகிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010 

Leave a Reply