அன்னை முத்துலட்சுமி அம்மையார் அவர்களின் நினைவுநாளில் (ஜூலை 22, 1968) மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது!

ஆங்கிலேய இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும், பெண் குழந்தைகளை சீரழிக்கும் இந்து மத சாதிக்கொடுமையான தேவதாசி முறையை ஒழிக்க பாடுபட்டவரும், சென்னை மாகாணத்தின் முதல் சட்டமன்ற பெண் உறுப்பினருமான அன்னை முத்துலட்சுமி அம்மையார் அவர்களின் நினைவுநாளில் (ஜூலை 22, 1968) மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது!

இந்துத்துவ சனாதன ஆட்சி காலம் தொடங்கி, முகலாயர் ஆட்சி கடந்து, ஆங்கிலேயர் ஆட்சியிலும் கூட இந்து மதம் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் மக்களின் வீட்டுப் பெண்கள் படிப்பதற்கோ, வேலைக்கு செல்வதற்கோ, சொத்துரிமை கோருவதற்கோ அனுமதி மறுக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் இந்தியாவிலேயே முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையை போராடி வென்று காட்டியவர் அன்னை முத்துலட்சுமி அம்மையார் ஆவார்.

அன்னை முத்துலட்சுமி அம்மையார் அவர்களின் வாழ்க்கை பெரும் போராட்டம் நிறைந்தது. அவரது பள்ளிப் படிப்பு முடித்து, மருத்துவக் கல்லூரியில் சேர முற்பட்டபோது இந்து சனாதன சமூகத்தை சேர்ந்த பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். ஆயினும் பல தடைகளைத் தாண்டி அவர் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து தருணத்தில், அவ்வகுப்பில் படித்து ஒரே மாணவியாக அவர் மட்டுமே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு கேலிப்பேச்சுகளுக்கும் செவி கொடுக்காமல் மருத்துவ பட்டத்தை பெற்று அன்றைய ஆங்கிலேய ஆட்சிக்குட்பட்ட இந்திய நிலப்பரப்பில் மருத்துவ பட்டம் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை வென்று காட்டினார். அத்தோடு இல்லாமல் இங்கிலாந்து லண்டன் மாநகரில் மருத்துவமனையில் பயிற்சிகளும் மேற்கொண்டார்.

அன்னை முத்துலட்சுமி அம்மையார் சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றிய ஒரே பெண் மருத்துவராகவும் விளங்கினார். அக்காலகட்டத்தில் அம்மருத்துவமனையில் குழந்தைகளுக்கு என்று ‘தனி வார்டு’ அமைக்க கோரிக்கை விடுத்து அதை வென்று காட்டினார். அதுமட்டுமல்லாமல் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமையும் இவரையே சாரும்.

அவரது மருத்துவ சேவைகள் ஒருபுறமிருக்க, பெண் விடுதலைக்காக அவர் முன்னெடுத்த செயல்பாடுகள் இன்றளவும் அவர் புகழ் பாடிக் கொண்டிருக்கின்றன. இளம் வயதில் ஆண், பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதை கடுமையாக எதிர்த்து சட்டமன்றத்தில் குரல் எழுப்பினார். தன் சமகாலத்தில் இயங்கிவந்த பல்வேறு பெண் மருத்துவர்களின் கருத்துக்களை தொகுத்து சட்டமன்றத்தில் உரையாற்றிய அன்னை முத்துலட்சுமி அம்மையார், “ஒரு இளம்பெண், குழந்தையின் கள்ளம் கபடம் அற்ற இயல்பை இழக்கிறாள். வெட்கப்பட்டு பேசாது ஒதுங்கி நிற்கிறாள். வீட்டிலுள்ள வயதான பெண்களின் வழிமுறைகளை பின்பற்ற தொடங்குகிறாள். வீட்டில் உள்ள பெண்களுக்கு வெளியில் இருந்த பொழுது போக்கும் இல்லாததால், இந்த பெண்ணின் மூளையில் முற்றிய பெண்களின் பாலுறவு கருத்துக்களை அவர்கள் புகுத்துக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு அப்பெண் மாப்பிள்ளையின் பெற்றோர்கள் சொத்து ஆகிறாள். அவளது இயல்பான செயல்பாடுகளுக்கு தடைகள் விதிக்கப்படுகின்றன. அவள் மாமியார், மற்றும் அயலார் முன் ஓடி விளையாடவோ, சத்தமாக பேசவோ, உரக்க சிரிக்கவோ கூடாது. இவ்வாறு அவளது மிக ஒளி வாய்ந்த பருவமாயக்கிய இளம்பெண் பருவம், அவளிடமிருந்து பறிக்கப்படுகிறது. அவளுக்கு குழந்தை பருவமும், முதிர்ந்த பெண்ணின் பருவமும் மட்டுமே தெரியும்.” என்று சிறு குழந்தையாக இருக்கும்பொழுது கட்டாய திருமணம் செய்து வைக்கப்படும் பெண் குழந்தைகளின் மனநிலையைப் பற்றி தெளிவாக விளக்கிச் சொன்னார். மேலும் பல போராட்டங்களுக்கு பிறகு குழந்தை திருமணத்தை தடை செய்யும் ‘சாரதா சட்டம்’ என்ற சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு முன்னோடியான போராட்டங்களை முன்னெடுத்தவர் அன்னை முத்துலட்சுமி அவர்களில் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றளவும் அன்னை முத்துலட்சுமி அம்மையாரின் புகழ் ஓங்கி ஒலிக்கச் செய்யும் அவரது பெருமுயற்சி, இந்து சனாதன மதத்தில் இளம் பெண்களை பொட்டு கட்டி தேவதாசி என்ற பட்டத்தை சுமத்தி இழிவுக்கு உள்ளாக்கும் மூடப் பழக்கத்தை ஒழித்துக் கட்டியது ஆகும். தந்தை பெரியார் அவர்களின் பேராதரவு பெற்ற இப்போராட்டத்தில் சட்டசபையின் கேள்வி நேரத்தில் அன்றைய காங்கிரஸ் உறுப்பினராக இருந்த சத்தியமூர்த்தி என்ற பார்ப்பனர், “தேவதாசி முறை என்பது கடவுளுக்கு சேவை செய்வது. அது புனிதமானது” என்று கருத்து தெரிவித்த பொழுது, அன்னை முத்துலட்சுமி அம்மையார் அவர்கள் “அப்படி என்றால் உங்கள் வீட்டுப் பெண்களை அப்புனித செயலில் ஈடுபடுத்தலாமே. ஏன் ஒவ்வொரு முறையும் பிறர் வீட்டுப் பெண்களையே ஈடுபடுத்துகிறார்கள்?” என்று எதிர் கேள்வி எழுப்பியது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நிகழ்வாகும்.

இதுமட்டுமல்லாது, இன்று இந்திய ஒன்றியம் எங்கும் ஓர் எடுத்துக்காட்டாய் விளங்கும் சென்னை அடையாறு பகுதியில் இருக்கும் புற்றுநோய் மருத்துவமனை அன்னை முத்துலட்சுமி அம்மையார் அவர்களின் பெருமுயற்சியால் தொடங்கப்பட்டதே ஆகும். தன் ஒரே தங்கையை புற்றுநோய்க்கு பலி கொடுத்த அம்மையார் அவர்கள் புற்றுநோக்கான ஆய்வுகூடத்தை உருவாக்க போராடி பின்பு அரசு உதவியோடு செயல்படுத்தியும் காட்டினர். இன்று பல்வேறு ஏழை எளிய மக்களின் உயிர்காக்கும் அருமருந்தாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இவ்வாறு உருவானதே.

பெண்களின் உயர்வுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் அன்னை முத்துலட்சுமி அம்மையார் ஆவார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் ரிட்ரேட் என்ற கட்டிடத்தில் ஆதரவற்ற இளம் பெண்களுக்கு பாதுகாப்பும் ஆதரவும் தரும் விடுதி ஒன்றை தொடங்கி நடத்தி வந்தவர். அதுமட்டுமல்லாமல் கல்லூரியில் படிக்கும் முன் வந்த பெண்களுக்கு அக்கல்லூரி விடுதியில் இடம் கொடுக்க மறுத்து அவர்களின் கல்வி நிலையை கேள்விக்குள்ளாக்கிய காலத்தில், தனது சொந்த வீட்டையே அவர்களுக்கு விடுதியாக மாற்றி கொடுத்து அப்பெண்களின் கனவை நனவாக்கியவர். இம்முயற்சியே பிற்காலத்தில் சென்னையில் புகழ்பெற்ற ‘அவ்வை இல்லம்’ என்ற பெண்கள் விடுதியாக உருவெடுத்தது.

இவ்வாறு ‘தன் சொல்லும், செயலும் பெண்களின் விடுதலைக்காகவே’ என்று பாடுபட்ட அன்னை முத்துலட்சுமி அம்மையார் அவர்களின் நினைவுநாளாகிய இன்று அவர்தம் வழியில் பெண்ணுரிமைக்காகவும், பெண்விடுதலைக்காகவும் பாடுபடுவோம் என்று உறுதி ஏற்று மே பதினேழு புகழ் புகழ் வணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply