பார்ப்பனர்களின் குலக்கல்வித் திட்டத்தை தகர்த்தெறிந்த செயல் வீரர் ஐயா காமராசர் அவர்களின் 119-வது பிறந்தநாளில் (ஜூலை 15, 1903) மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது!

பார்ப்பனர்களின் குலக்கல்வித் திட்டத்தை தகர்த்தெறிந்த செயல் வீரர் ஐயா காமராசர் அவர்களின் 119-வது பிறந்தநாளில் (ஜூலை 15, 1903) மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது!

“இன்றைய காமராஜ் ஆட்சியில் நமது நாடு அடைந்த முன்னேற்றம் இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்தது இல்லை. நமது மூவேந்தர்கள், அடுத்து நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லீம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் எல்லாம் நமது கல்விக்கு வகை செய்யப்படவில்லை.” – தந்தை பெரியார் அவர்கள்

மூன்றுமுறை தமிழ்நாட்டின் முதல்வராக, அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக, அரசியலில் எளிமையானவராக வாழ்ந்து காட்டிய செயல் வீரர் ஐயா காமராசர் அவர்களின் பெரும் பணி தமிழகத்தின் கல்வி மற்றும் உட்கட்டமைப்பு துறைகளில் இன்றும் குன்றின் மேல் இட்ட விளக்காய் ஒளிர்கிறது.

1952-ம் ஆண்டு ராஜாஜியால் முன்மொழியப்பட்ட கல்வித் திட்டம் வேத-மனுதர்ம காலத்து சாதி-வருண-குல வழியிலான வேலைகளை பரம்பரை பரம்பரையாக செய்ய கூறும் குலக்கல்வித் திட்டத்தை ஒத்து இருந்தது. மாணவர்கள் காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லவும், மாலை நேரத்தில் அவர்கள் குடும்பம் முன்னெடுக்கும் குடும்ப வேலையையும் கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் என்று ராஜாஜி அறிவித்தார். மேலும் பணப்பற்றாக்குறை என்று கூறி 6,000 பள்ளிகளை மூடினார். ஆனால் அப்பற்றாக்குறை புதிய சமஸ்கிருத பள்ளிகளை திறப்பதை தடுக்கவில்லை.

இதை தந்தை பெரியார் மிகக் கடுமையாக எதிர்த்தார். இது சூத்திரர்கள் என்று அவர்களால் பிரித்து வைக்கப்பட்டிருக்கும் மக்களின் முன்னேற்றத்தை தடுப்பதற்காக பார்ப்பனர்களால் செய்யப்படுகின்ற சதி என்று முழங்கினார். இக்குலக்கல்வி திட்டத்தை திரும்பப் பெறும்வரை போராட்டங்கள் முடியாது என்று தொடர் போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கினார். அதேவேளையில் இதற்கு இணையாக ‘குலக்கல்வித் திட்டத்தை எதிர்க்கும் குரல்’ காங்கிரசிலும் கேட்கத் தொடங்கியது. அக்குரல் செயல் வீரர் ஐயா காமராஜர் அவர்களுடையது.

சிறுவயதிலேயே மிகக் குறைந்த பள்ளிக்கல்வி மட்டுமே கற்கும் வாய்ப்புப் பெற்ற ஐயா காமராஜர் அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் மிக நன்றாக தெரிந்திருந்தது. கல்வி அறிவே ஏழை மக்களையும், சாதி மதத்தால் ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களையும் அடுத்த படிக்கு முன்னேற்றும் என்பதை முழுமையாக நம்பிய செயல்வீரர் ஐயா காமராசர் அவர்கள், ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை வெகுவாக எதிர்த்தார். தந்தை பெரியாரின் தொடர் போராட்டத்தின் விளைவாக ராஜாஜி பதவி விலக நேர்ந்தது பெரியாரின் முழு ஆதரவும் அறிவுரையும் பெற்ற ஐயா காமராஜர் அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். பதவி ஏற்றதும் ராஜாஜி மூடிய 6,000 பள்ளிகளையும் மீண்டும் திறந்தார். அதுதவிர மேலும் 14,000 பள்ளிகளை திறக்க உத்தரவிட்டார்.

தனது ஆட்சிக்காலத்தில் முதல் ஐந்தாண்டு திட்டத்தில் 21,500 பள்ளிகளையும், இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் 26,500 பள்ளிகளையும் திறக்க முடிவெடுத்தார். அவரது ஆட்சி காலத்தில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை 25 லட்சத்தில் இருந்து 41 லட்சமாக உயர்ந்தது. மேலும் குழந்தைகள் பள்ளி செல்ல அவர்களது குடும்ப பொருளாதாரம் தடையாக இருப்பதை கண்டு நீதிக்கட்சி காலத்தில் ‘திராவிட இயக்க முன்னோடி’ ஐயா பிட்டி தியாகராயர் அவர்கள் முன்னெடுத்து செயல்படுத்திய மதிய உணவுத்திட்டத்தை தமிழக அரசு பள்ளிகள் முழுவதும் செயல்படுத்த உத்தரவிட்டார். இத்திட்டம் தமிழகத்தின் கல்விகற்போர் எண்ணிக்கையை எதிர்ப்பார்க்கா வண்ணம் உயர்த்தியது. அதுமட்டுமல்லாமல் பள்ளி சீருடை திட்டத்தையும் அறிமுகப்படுத்தியவர் அவரே. சீருடை மட்டுமல்லாமல் புத்தகங்கள், நோட்டுகள் முதலியவையும் இலவயமாக தரப்பட்டன.

ஐயா காமராசர் அவர்கள் முன்னெடுத்த இத்தகைய கல்வி திட்டங்களே தமிழகத்தின் அடிப்படைக் கல்வித்தரம் அதிகரிப்பதற்கு காரணாக இருந்தது. தந்தை பெரியார் அவர்களின் கல்விக் கனவை செயல்படுத்திக் காட்டிய ஐயா காமராசர் தான் இறுதி காலம் வரை பெரியாரின் மேல் பெருமதிப்பு வைத்திருந்தார். தன் தாயாரின் மரணத்தின் போது கூட கலங்காமல் நின்றிருந்த ஐயா காமராசர் அவர்கள், தந்தை பெரியாரின் மரணத்தின் போது உடைந்து போய் அமர்ந்திருந்ததை வரலாறு பதிவு செய்துள்ளது. “எல்லாமே பெரியாரால் நடந்தது” என்று தன் அதிகாரிகளிடம் கூறும் ஐயா காமராசர் அவர்களுக்கு பெரியாரின் இழப்பு பேரிழப்பாகத்தான் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

தந்தை பெரியாரின் பெருமதிப்புக்குறியவரும், பார்ப்பன குலக்கல்வி திட்டத்தை முறியடித்து தமிழகத்தின் கல்வி எதிர்காலத்தை காத்தவருமான செயல் வீரர் ஐயா காமராசர் அவர்களின் 119-வது பிறந்தநாளில் மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply