ஏன் இந்த மாநாடு? இதன் வரலாற்று பின்னனி என்ன? இம்மாநாட்டிற்கு எதற்காக அனைவரும் கட்சி கடந்து, மதம் கடந்து, சாதி கடந்து வரவேண்டுமென்கிறோம்?

ஏன் இந்த மாநாடு? இதன் வரலாற்று பின்னனி என்ன? இம்மாநாட்டிற்கு எதற்காக அனைவரும் கட்சி கடந்து, மதம் கடந்து, சாதி கடந்து வரவேண்டுமென்கிறோம்?

கி.பி 1800ல் கோவையிலிருந்த கோட்டை வெள்ளையர்களின் ஆதிக்கத்தில் நின்றிருந்தது. இதன் மூலமாக தமிழ்நாடு, கேரளம், கர்நாடக என அனைத்து பகுதிகளிலும் எழுந்த எதிர்ப்பை உளவு பார்த்து அழித்து வந்தார்கள். அன்றய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் வெள்ளையர் எதிர்ப்பு வலுவாக இருந்தது. வரிவிதித்து நம்மை நாசப்படுத்தும் வெள்ளையர்களை விரட்ட தமிழர்கள் உயிரைக்கொடுக்கவும் தயாராக இருந்தனர். தமிழகம் மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகத்தில் இருந்த வெள்ளையர் எதிர்ப்பு புரட்சியாளர்களும் கோவையை கைப்பற்றினால் அனைவரும் ஒன்று சேர்ந்து பெரும்படையாகிவிட முடியும் என திட்டம் தீட்டி இருந்தனர். இந்த பெரும் போர்த்திட்டமே இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இவையெல்லாம் முடிந்து 60 ஆண்டுகள் கழித்து வடநாட்டில் நடந்த போரே இந்தியாவின் முதல் சுதந்திரப்போர் என இன்றளவும் வடநாட்டாரால் எழுதப்படுகிறது. புறக்கணிக்கப்பட்ட இந்த வீரமிகுப் போர் கோவை நகரை மையம் கொண்டு சூறாவளியாக எழுந்த வரலாறு கோவை நகர மக்களுக்கும் சொல்லப்படாத செய்தியாகியது. இந்த மறக்கடிக்கப்பட்ட வரலாறை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவதன் மூலம் மறக்ககடிக்கப்பட்ட நம் வீரர்களின் தியாகத்தை போற்றுதலுக்குரியதாக்குவதே மே பதினேழு இயக்கத்தின் நோக்கம். மறக்கடிக்கப்பட்ட வரலாறை உங்களுக்குச் சொல்கிறோம். நம் போராட்ட வரலாறை ஊரேங்கும் கொண்டு செல்லுங்கள். தமிழர் ஒற்றுமையை நிலைநாட்டுங்கள்.

கோவையில் இருந்து அட்டூழியம் செய்யும் வெள்ளையர் தலையை கொய்து, தமிழர் ஆட்சியை நிலைநிறுத்த உயிரை விலையாகக் கொடுக்க உறுதி பூண்டனர் தமிழ்ப் புரட்சியாளர்கள். கோவை கோட்டையின் மீதேறி தமிழர் கொடியை பறக்கவிடும் திட்டத்தை தமிழகம் முழுவதும் இருந்த வெள்ளையருக்கு எதிரான புரட்சியாளர்கள் ஒன்றிணைந்து திட்டம் தீட்டினர். தமிழ்நாட்டில் பல்வேறு சாதி, மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் வேறுபாடு இல்லாமல் தமிழர் எனும் அடையாளத்தின் கீழாக போர் புரிய உறுதிபூண்டனர். கோவை மீதான தாக்குதலை வகுப்பதில் முக்கிய பணியை மருது சகோதரர்கள் மேற்கொண்டார்கள். தமிழ்நாட்டின் பிற பகுதியில் இருந்த புரட்சியாளர்களை மருது சகோதரர்கள் ஒன்றிணைத்து கூட்டமைப்பை உருவாக்கினார்கள். தமிழ்நாடு மட்டுமல்லாது பிற பகுதியிலிருந்து வரும் புரட்சியாளர்கள் வெள்ளையர்களுக்கு தெரியாமல் மறைந்து பயிற்சி எடுக்கும் பணியை பழனி விருப்பாச்சி பாளையத்தின் கோபால் நாயக்கர் பொறுப்பெடுத்தார். வீரபாண்டிய கட்டபொம்மன், திப்பு சுல்தான் ஆகியோர் கொல்லப்பட்ட பின்னர் அவர்களுடன் இணைந்து நின்று போரிட்ட புரட்சியாளர்களை மருது பாண்டியர்களும், விருப்பாச்சி கோபால்நாயக்கரும் வெள்ளையர்களிடமிருந்து பாதுகாத்தனர். இவர்களும் பெரும்புரட்சிக்கூட்டணியில் இணைந்தனர். விருப்பாச்சியிலிருந்து தமிழகமெங்கும் ஓலைகள் சென்றன. கர்நாடகத்தில் வெள்ளையரை எதிர்த்து பெரும்போர் புரிந்து கொண்டிருந்த தூந்தாஜிவாக் எனும் புரட்சியாளரை தமிழகத்தின் புரட்சிக்குழுவோடு இணைத்தால் பெரும் பலத்துடன் வெள்ளையரை அழிக்கலாமென முடிவெடுத்தார்கள். அவரை சந்தித்து கூட்டமைப்பினை உருவாக்க தூதுக்குழு விருப்பாச்சியிலிருந்து சென்றது. இக்குழுவை வெள்ளையர் கண்களில் சிக்காமல் முன்னின்று தலைமை தாங்கிச் சென்றவர் தீரன் சின்னமலை. அவருடன் புத்தேமுகம்மது, ரமனுல்லாகான், முகம்மதுஹாசம் ஆகிய தளபதிகளும் சென்றனர். இவர்கள் திப்புவின் தளபதியாக இருந்த தூந்தாஜிவாக்கை சந்தித்து அவரை இக்கூட்டணிக்குள் கொண்டு வந்தனர். `இப்படியாக இணைக்கப்பட்ட வலிமையான கூட்டணி கோவை கோட்டையை தாக்கி அழிப்பதால் கர்நாடகம், கேரளம் ஆகியப்பகுதியோடு இணைந்து தென்னிந்தியாவிலிருந்து வெள்ளையரை அழித்திடமுடியும் என துல்லியமாக திட்டமிட்டனர். கேரளாவில் இருந்த பழசி அரசர் கேரளவர்மன் வெள்ளையரை எதிர்த்து திப்பு சுல்தானோடு இணைந்து வெள்ளையரை போரிட்டவர். இவரையும் கூட்டணிக்குள் கொண்டுவந்தனர். இப்படியாக எழுந்த கூட்டணியில் திருநெல்வேலி, பாஞ்சாலங்குறிச்சி, இராமநாதபுரம், சிவகங்கை, சிவகிரி, திண்டுக்கல், விருப்பாச்சி, கரூர், தாராபுரம், காங்கேயம், பொள்ளாச்சி-தளி, கொழுமம், பெருந்துறை, சத்தியமங்கலம், சேலம், ஒசூர், சங்ககிரி, என பல பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கில் புரட்சிப்படையில் தமிழர்கள் இணைந்தார்கள். இவ்வாறான எழுச்சிக்கு வித்திட்ட மருதுபாண்டியர்களும், தீரன்சின்னமலையும் சாமானிய குடும்பத்திலிருந்து உயர்ந்தவர்கள். திப்பு சுல்தானும், கேரள வர்மனும் சாமானிய போர் வீரர்களாக உயர்ந்து எழுச்சியை அவர்களது நாடுகளில் நடத்தியவர்கள். இத்தளபதிகளுடன் சரிசமமாக நின்று போரிட்ட பாஞ்சாலங்குறிச்சியின் பொட்டிப்பகடை, சுந்தரலிங்கம், முத்தன் பகடை, தானாபதிபிள்ளை, கட்டனகருப்பணன், வெள்ளையன், கந்தன் பகடை போன்றோர், தீரன்சின்னமலையுடன் போரிட்ட கருப்பையாசேர்வை, பொல்லான், குணாளன் நாடார் மற்றும் ராமநாதபுரத்தின் முத்துராமலிங்க சேதுபதி, முத்துக்கருப்பத்தேவர், மேலப்பன், தஞ்சையின் ஞானமுத்து என அனைத்து சாதியை சேர்ந்தவர்களும் தங்கள் சாதியை தூக்கி எறிந்துவிட்டு தமிழர்களாய் எழுந்து நின்றனர். வீரமங்கை வேலுநாச்சியாருக்கு துணையாக படையை அனுப்பி சிவகங்கையை மீட்க உதவிய ஹைதர் அலி, அவருக்கு பின்னர் திப்பு சுல்தான் ஆகியோரும், தமிழகத்தின் இசுலாமியர்களும் இதர புரட்சியாளர்களுடன் ஒன்றிணைந்து நின்று போரிட்டனர். இக்கூட்டணி அமைவதற்கு முன்பே இக்களத்தில் போராடி உயிர்துறந்த பூலித்தேவர், அழகுமுத்து கோன், ஒண்டி வீரன், கான்சாகிப் முகம்மது யூசப்கான், வேலு நாச்சியார், குயிலி எனும் வீரப்பாரம்பரியம் தொடர்ந்தது. சாதி, மத வேறுபாடின்றி எழுந்த தமிழர் படை 220 வருடங்களுக்கு முன் ஆங்கிலேய வெள்ளையரை தூங்கிவிடாமல் விரட்டிக்கொண்டே இருந்தது.

இப்படி இந்தியாவிலேயே முதன்முறையாக வெள்ளையர்களுக்கு எதிராக ஒரு புரட்சிக்கூட்டணியை கொண்டுவந்தவர்கள் தமிழர்கள். இந்த வரலாறு மறைக்கப்பட்டது. தமிழகத்தில் இந்த வரலாற்று நாயகர்கள் சாதித்தலைவர்களாக திட்டமிட்டு மாற்றப்பட்டு தமிழர் ஒற்றுமையை பின்னுக்கு தள்ளுகிறார்கள். இந்த சாதிய பிளவுகள் தமிழகத்தின் வளர்ச்சியையும், வளத்தையும் பின்னுக்கு தள்ளுவதை அன்றே உணர்ந்த தமிழ்த்தலைவர்கள் ஒற்றுமையை கட்டி எழுப்பி போர் புரிந்து வீரமரணமடைந்தனர்.

கோவை கோட்டையை கைப்பற்ற கர்நாடகத்தின் தூந்தாஜிவாக் தளபதியாக கனிஜாகானை அனுப்பினார். கனிஜாகான் 4000 குதிரை வீரர்களுடன் கோவைமீது தாக்குதல் நடத்தவும், இவர் வந்த செய்தியறிந்து மருது பாண்டியர்கள் சிவகங்கைப்பகுதியில் போர் துவக்கவும் திட்டமிடப்பட்டது. கோவையருகே மலைகளில் படையணிகளை மறைத்து கோவை மீது தாக்குதல் நடத்த ஷேக்ஹுசேன் தலைமையில் திட்டமிடப்பட்டது. திப்பு சுல்தானின் படைவீரர்களோடு இணைந்த போர் படை உருவாக்கப்பட்டது. அரவக்குறிச்சி கவுர்க்ககவுடண்டரும், ஓசூரின் புட்டேமுகம்மதுவும் தாராபுரத்தை நோக்கி படையை நகர்த்தினார்கள். ரோனுல்லாகான் காங்கேயத்தை கைப்பற்ற படையை நகர்த்தினார். கோவை நகரத்தை நோக்கி முகம்மது ஹாசம், அப்பாஜி, ஷாமியா ஆகியோர் படை நகர்த்தினார்கள். அனைத்துப்பகுதிகளின் படை நகர்வினை கண்காணித்து ஒருங்கிணைக்கும் பொறுப்பேற்றார் தீரன் சின்னமலை. கோவையில் புரட்சியாளர்களுக்கு தங்குவதற்கு இடமும், உணவும் அளிக்கும் வேலையை நரசிங்கப்பா மேற்கொண்டார். கேரளவர்மனும் தனது பங்கிற்கு புரட்சியாளர்களை அனுப்பினார். கோவை தாக்குதல் ஜூன் 3ம் தேதி முகர்ரம் பண்டிகை கொண்டாட்டங்களின் போது கூட்டத்துடன் கூட்டமாக மக்களுடன் கலந்து தாக்குதலை நடத்துவதென திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் புரட்சியாளர்களை பற்றிய உளவுச்செய்தியை ஆங்கிலேயருக்கு கோவையின் தாசில்தார் தெரியப்படுத்தியதால் ஆங்கிலேய அதிகாரிகள், ரஜபுத்திர சிப்பாய்களை லெப்டினெண்ட் கர்னல் மக்காலிஸ்டர் தயார் செய்திருந்தார். மதுரைப்படை உரிய சமிக்கை கிடைக்காததால் புரட்சியை மேற்கொள்ள இயலாமல் தவித்தது. இதற்குள்ளாக ஆங்கிலேயர் கோவையில் தாக்குதலுக்காக காத்திருந்த நரசிங்கபாவை கைது செய்தார்கள். இதையறிந்த புரட்சியாளர்கள், கோவையின் காடுகளுக்குள் பின்வாங்கினார்கள். ஆங்கிலேயரை திசைதிருப்ப சத்தியமங்கலம், தளமல்லா, தாராபுரம் பகுதிகளில் தாக்குதலில் புரட்சியாளர்கள் இறங்கினார்கள். இப்பகுதிகளுக்கு ஆங்கிலேயப்படை அனுப்பப்பட்டு போர் நடத்தப்பட்டது. இதில் தளமல்லா போரில் முகம்மது ஹாசிம் உட்பட பல புரட்சியாளர்கள் சிறைப்படுத்தப்பட்டார்கள். முகம்மது ஹாசிம் தாக்குதலின் முக்கிய தளகர்த்தர் ஆவார். இவரிடம் புரட்சியாளர்களின் கடிதங்கள் பல இருந்தன. ஆங்கிலேயரிடம் சிக்குவதற்கு முன்பாக தம்மிடமிருந்த கடிதங்களை எரித்தார். அவரை சிறைப்படுத்தி இரும்பு வலையங்களில் மாட்டி சித்தரவதை செய்து தகவல்களை அறிந்து கொள்ள ஆங்கிலேயர் முயன்றனர். சகபுரட்சியாளர்களை காட்டிக்கொடுக்காமல் போராடிய முகம்மது ஹாசிம் கி.பி1800 ஜீன் 8ம் தேதி தனது கழுத்தினை அறுத்துக்கொண்டு உயிரைப் போக்கி பெரும் ஈகத்தை செய்தார். இதனையடுத்து ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்ட அப்பாஜி மற்றும் 42 பேருக்கு மரணதண்டனை ஆங்கிலேயரால் விதிக்கப்பட்டது.

இந்த புரட்சியாளர்களில் பெரும்பாலோனோர் இசுலாமியர்கள். ஆங்கிலேயரின் அரசு பதிவுகளில் தீரன் சின்னமலை, முகம்மதுஹாசம் ஆகியோரோடு காணமுடிகிற புரட்சியாளர்கள் பெயர்களாக ஹைதர்கான், சுமாஷ்கான் அலிசாகிப், மான்கான், ஷேக் அலி, செலர்கான், அலிசெயிப், உசேன்செயிப் யூனூஸ்கான், மொஹியுதீன்கான், சையது இமாம், பீர்செயுப், மொகீர்தீன்கான், செய்யது மொகியுதீன், சூலிமலை அமில்தார், இட்ச்சப்புலி அமில்தார், ஷேக்மதர் சேக்யுசேன், குலாம்உசேன் சேக்அலி, பீர்முகம்மது, அப்துல்காதர் ஷமஸ்கான், செலார்கான், சோட்டா அப்துல்காதர், முகம்மது ஷெரிப், ஷேக் மீரா, ஷேக்மீரான், ஷேக் முகம்மது தெலர்வார், புனா, பீர்முங்கப்பா அலி, பெஷாயர், முல்லப்பா குனிமூர்த்தி, சுப்பாராவ், பீனாஷேக்மியான், மொகிர்தீன்கான், சையது மொஹிர்தீன் என எண்ணற்றவர்கள் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப்பட்டியலில் இசுலாமியர்கள் பெருமளவில் புரட்சிக்கான திட்டமிடல், செயல்படுத்தல் பணிகளில் ஈடுபட்டதை நாம் காணமுடிகிறது. வெள்ளையரால் கைது செய்யப்பட்ட முகையதீன் கான், ஷம்னஸ்கான், மொகியூதீன், ஷேக்கமீன், ஹைதர்கான், மேலும் தூந்தாஜிவாகினால் அனுப்பபட்ட அப்பாஜி, மற்றும் இதர ஐந்து பிரதிநிதிகள் ஆகியோர், இதர 30க்கும் அதிகமான இசுலாமிய வீரர்கள் உட்பட 42 பேர் வெள்ளையரளால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

தமிழ்நாட்டின் முக்கிய படைத்தளத்தை தமிழர் வசமாக்க நடத்தப்பட்ட போரில் ஈடுபட்ட இந்த வீரர்களில் எட்டு பேர் தாராபுரத்திலும், ஏழுவர் சத்தியமங்கலத்திலும், ஆறு பேர் கோவையிலும் மற்றவர்கள் புரட்சி நடந்த இடங்களிலும் வைத்து படுகொலை செய்யப்பட்டார்கள்.

இந்த 42 வீரர்களின் ஈகத்தினை போற்றும் விதத்தில் 222 வருடம் கழித்து கோவை நகர மக்கள் ஒன்று திரண்டு வீரவணக்கம் செலுத்த முன்வர வேண்டுமென மே பதினேழு இயக்கம் உரிமையுடன் கோரிக்கை வைக்கிறது. பெரும்பகுதி இசுலாமியரும், எளிய உழைக்கும் மக்களும் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிராக அணிவகுத்து, சாதி, மதம் கடந்து போராடிய வீரவரலாற்றினை நினைவு கூர்வோம். இப்புரட்சியாளர்கள் சாதி கடந்து ஒன்றாக போராடினார்கள். மதம் இவர்களது உறுதியை பிரிக்கவில்லை. சாதியும், மதமும் இவர்களது தியாகத்தின் முன் வீழ்ந்து போனது. இவ்வாறு தமிழர்களாய் ஒன்றுபட்டு போராடியதை நம் தலைமுறை உணர்வோம். அடுத்த தலைமுறைக்கு இதைச் சொல்வோம்.

புகழ்மிக்க நம் வரலாற்றின் வழியாக நமது ஒற்றுமையை பறைசாற்றிட, தமிழின எழுச்சியை உலகிற்கு உணர்த்திட ஒன்றுபட்டு வீரவணக்கம் செலுத்த வாருங்கள் என அழைக்கிறோம். தமிழ்நாட்டின் அனைத்து கட்சி, இயக்கத் தோழர்களை அழைத்திருக்கிறோம். நம் எளிய சாமானிய தமிழரின் வரலாறை உயர்த்திப்பிடிக்க வாருங்கள்.

12 ஜுன், ஞாயிறு மாலையில் கோவையில் சந்திப்போம்

தோழர் திருமுருகன் காந்தி
ஒருங்கிணைப்பாளர்
மே பதினேழு இயக்கம்

Leave a Reply