திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்! சிறப்பு முகாம்களை இழுத்து மூடு!

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்! சிறப்பு முகாம்களை இழுத்து மூடு! – மே பதினேழு இயக்கம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் என்னும் ஈழத்தமிழர்களுக்கான தனி சிறையில் உள்ள ஈழத் தமிழர்கள் தங்களை விடுவிக்க வேண்டுமென கடந்த 20-05-2022 முதல் தொடர் உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் சிலரின் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மேலும் சிலர் உண்ணாநோன்பு இருக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களது ஒரே கோரிக்கை, அவர்கள் மீதான வழக்குகளை விரைந்து முடித்து விடுவிக்க வேண்டும் என்பதே.

சிங்கள அரசின் அடக்குமுறையினால் ஈழத்தில் வாழ வழியில்லாமல் பெண்கள் குழந்தைகள் என 30 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்தோடு தமிழ்நாட்டிற்குள் தஞ்சம் அடைந்தவர்கள் தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் அடைக்கப்பட்டு வருகின்றனர். அதில் சிறப்பு முகாம் என்ற பெயரில் உள்ள சிறைச்சாலையில் சிலர் அடைக்கப்படுகின்றனர். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம் அதில் ஒன்று.

சிறப்பு முகாம் என்றாலே சித்திரவதை முகாம் என்று சொல்லப்படுகிறது. சிறப்பு முகாம்களை மூட வேண்டும் என்று ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். மனித உரிமை அமைப்புகளும், மே பதினேழு இயக்கம் உள்ளிட்ட அரசியல் அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. இதனிடையே செங்கல்பட்டு, பூந்தமல்லியில் இருந்த சிறப்பு முகாம்கள் மூடப்பட்டு, அங்கிருந்தவர்கள் திருச்சி சிறப்பு முகாமிற்கு மாற்றப்பட்டனர்.

இந்த திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் கொடுங்குற்றவாளிகளைப் போல் நடத்தப்படுகின்றனர். அங்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என்று நீண்டகாலமாக போராடி வருகின்றனர். இதற்கு முன்பு பல முறை உண்ணாநோன்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், எல்லா மனிதர்களையும் போல ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள தங்கள் குடும்பத்தினருடன் வாழ வேண்டி தற்போது உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களது கோரிக்கையை திமுக அரசு கவனத்தில் கொண்டு அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், மேலும் சிறப்பு முகாம்கள் அனைத்தையும் இழுத்து மூட வேண்டுமெனவும் மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஈழத்தமிழர்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் விதமாக 27-05-22 அன்று முதலமைச்சருக்கு வேண்டுகோள் வைத்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையினை இங்கு இணைத்துள்ளோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

சிறப்பு முகாமில் இருக்கும் ஈழத்தமிழர்களின் கோரிக்கை:

மதிப்புக்குரிய முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு எங்கள் ரத்த உறவுகளான தமிழ் மக்களுக்கும் எங்கள் வேதனை கலந்த வணக்கங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். நேற்றைய தினம் இருபத்தி ஆறாம் திகதி உண்ணாவிரதம் இருந்த 10 பேரில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக இருந்த காரணத்தினால் நாங்கள் அவர்களை வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைத்தோம் தற்போது அவர்களின் நிலை கவலைக்கிடமாக நிலையில்தான் உள்ளது மேலும் அவர்கள் சென்ற பிறகு தற்போது இருந்து மிகுதி இருந்த 4 பேருடன் புதிதாக 6 சிறப்பு முகாமை சேர்ந்த 6 இலங்கை தமிழர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். இங்கிருக்கும் தமிழர்களுடைய ஒரே ஒரு கோரிக்கை விடுதலை மாத்திரமே இங்கு இருக்கும் நாட்கள் கழித்து கொடுக்கப்படவேண்டும் விரைவாக வழக்குகளை முடிக்க வேண்டும் விரைவாக வழக்கை முடித்து அனுப்பி வைக்க வேண்டும் எவ்வளவு விரைவாக விடுதலை பெற வேண்டும் அவ்வளவு விரைவாக விடுதலை கொடுக்கவேண்டும் என்பதே அனைவருடைய கோரிக்கையாக உள்ளது. நாங்கள் முதலமைச்சர் ஐயாவுக்கும் உலகத் தமிழர்களுக்கும் எம் இரத்த உறவுகளை தொப்புள் கொடியை இந்திய தமிழர்களுக்கும் நாங்கள் கொடுக்கும் மிகத் தாழ்மையான வேண்டுகோள் எங்களுக்காக குரல் கொடுத்து தங்கள் விடுதலையைப் பெற்றுக் கொடுங்கள் எங்களது ஈழத்தமிழர்கள் வைத்தியசாலைகளிலும் உண்ணாமல் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் இங்கிருப்பவர்கள் உடல் நிலைமை ரொம்ப மோசமாக சென்றுகொண்டிருக்கிறது நாங்கள் எங்கள் குடும்பங்களை விட்டு பிரிந்து இறப்பதற்கு முன் தயவு செய்து எங்களுக்காக ஒரு முறை குரல் கொடுத்து விடுதலை பெற்றுக் கொடுங்கள்

மே பதினேழு இயக்கம்

Leave a Reply