தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தலுக்கு அனுமதி மறுப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தடையை மீறி நினைவேந்துவோம். இது எம் அடிப்படை உரிமை

தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தலுக்கு அனுமதி மறுப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தடையை மீறி நினைவேந்துவோம். இது எம் அடிப்படை உரிமை. – மே பதினேழு இயக்கம்

அமைதியான முறையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடி ஆண்டுதோறும் நடத்தி வந்த நினைவேந்தல் நிகழ்வு 2017ல் தடுக்கப்பட்டது. தொடர்ந்து வழக்குகள் பதியப்பட்டு 17 தோழர்கள் சிறைப்பட்டனர். நான்கு தோழர்கள் குண்டர்சட்டத்தில் அடைக்கப்பட்டனர். தொடர்ச்சியாக 2018, 2019-லும் தடையை மீறி நினைவேந்த சென்ற காரணத்தினால் வழக்குகள் பதியப்பட்டன.

இந்நிலையில் கடந்த மே 2-ம் தேதி காவல்துறை உயர் அதிகாரிகளிடத்தில் நினைவேந்தல் நடத்த மெரினா, பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களில் நடத்த அனுமதி கோரினோம். நீண்ட ஆலோசனைக்கு பின் கடந்த வாரம் காவல்துறையே நினைவேந்தல் நடத்த பெசன்ட் நகர் கடற்கரையை தேர்ந்தெடுத்து ஒதுக்கிக் கொடுத்தது.

அனைத்துக் கட்சி தலைவர்கள், ஆளுமைகள் பங்கேற்பதாக அறிவித்த பின்னர், நேற்று மே 21 2022 பின்னிரவில் அனுமதி கொடுப்பது இயலாது என காவல்துறை அறிவித்தது. இதற்கான அனுமதி மறுப்பு கடிதத்தை பின்பு அளித்தனர்.

இறந்தவர்களுக்கு நினைவேந்துவது அடிப்படை உரிமை. இதை எந்த சட்டத்தின் மூலமாகவும் தடுக்க இயலாது. இந்நிலையில் இப்பண்பாட்டு நிகழ்வை நடப்பதற்கு அனுமதி மறுப்பது சனநாயக விரோதம் மட்டுமல்ல, தமிழின விரோத அடக்குமுறையாகும்.

மெரினா கடற்கரையில் மட்டுமல்லாமல் அனைத்து நீர் நிலைகளில் தமிழர்கள் இறந்தோருக்கு நினைவேந்துவது இன்றளவும் நடக்கும் நிலையில் எவ்வித அடிப்படையுமின்றி இந்நிகழ்வினை தடுப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

திமுக அரசு இதற்கு முந்தைய அதிமுக அரசின் நிலையையே தொடர்வது சனநாயகவிரோதமாகும். ஒன்றிய அரசின் உள்துறை, ஒன்றிய உளவுத்துறையின் அழுத்தத்தின் காரணமாகவும் நிகழ்வு தடை செய்யப்பட்டதாகவும் எமக்கு சொல்லப்பட்டது. எக்காரணமாயினும், தமிழீழ இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்விற்கான உரிமையை தமிழக திமுக அரசு உறுதி செய்யாதது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழீழ இனப்படுகொலை மற்றும் அதற்கான நினைவேந்தல் நடத்துவது தொடர்பாக திமுக அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

அடக்குமுறையை மீறி தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வை மே பதினேழு இயக்கம் முன்னெடுக்கும். எந்நிலையிலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம் என உறுதிபட தெரிவிக்கிறோம். அடக்குமுறையை சனநாயக ரீதியில் எதிர்கொண்டு அம்பலப்படுத்த அனைத்து சனநாயக ஆற்றல்களையும் அழைக்கிறோம். *பெசன்ட் நகர் பேருந்து நிலையம் முன்பு மாலை 4 மணிக்கு அனைவரும் ஒன்றுகூடி, கடற்கரையை நோக்கி நினைவேந்த செல்வோம்!*

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply