இராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள முருகன் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தொடர் உண்ணாவிரதம்! அரசே உடனடியாக பரோல் வழங்கிடு!

இராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள முருகன் உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தொடர் உண்ணாவிரதம்! அரசே உடனடியாக பரோல் வழங்கிடு! – மே பதினேழு இயக்கம்

இராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் சிறைவாசம் அனுபவித்து வரும் ஏழு அப்பாவி தமிழர்களில் ஒருவர் முருகன். நீண்டகாலமாக சிறையில் வசித்து வரும் முருகன் அவர்கள், சிறை விடுப்பு (பரோல்) கேட்டு பலமுறை மனு அளித்தும் அவரது மனு நிராகரிக்கப்படுகிறது. இதனால் தனக்கு பரோல் வழங்கக் கோரி கடந்த மே 1 முதல் வேலூர் சிறையில் தொடர் உண்ணாநோன்பு இருந்து வருகிறார். இந்நிலையில் 16 நாட்களை கடந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது.

முருகன் உள்ளிட்ட எழுவர் மீது முன்பு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு தற்போது ஆயுள் சிறைவாசிகளாக உள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு அரசின் உரிமையான அரசியலமைப்பு உறுப்பு 161-ன் கீழ் முருகன் உள்ளிட்ட எழுவரையும் தமிழ்நாடு அமைச்சரவை விடுவிக்க தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பியது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட வேண்டிய ஆளுநர், அதனை நீண்ட காலம் கிடப்பில் வைத்திருந்து பின்னர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். குடியரசுத் தலைவரும் அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் முருகன் உள்ளிட்ட எழுவரின் விடுதலை தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது.

30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் முருகன் அவர்கள், 6 நாட்கள் சிறை விடுப்பு கோரி சிறை நிர்வாகத்திடம் பல முறை விண்ணப்பித்துள்ளார். ஆனால், இதற்கு முன்னர் பாகாயம் காவல்நிலையத்தில் பொய்யாக அவர் மீது புனையப்பட்ட இரண்டு வழக்குகளை காரணம் காட்டி முருகன் அவர்களின் விண்ணப்பத்தை பல முறை சிறை நிர்வாகம் தொடர்ந்து நிராகரித்து வருகிறது. தமிழ்நாடு அரசு விடுவித்தும், விடுவிப்பதற்கான அதிகாரம் யாரிடம் உள்ளது என்ற அரசியலமைப்புச் சட்ட சிக்கலில் சிறைபட்டிருக்கும் முருகன் அவர்களுக்கு 6 நாட்கள் சிறை விடுப்பு கூட அளிக்க அரசு முன்வராததால், வேலூர் சிறையிலேயே தொடர் உண்ணாநோன்பு இருக்க முடிவு செய்து கடந்த 16 நாட்களாக தொடர் உண்ணாநோன்பில் உள்ளார்.

இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்து சிறையிலே மயக்கமடைந்து படுத்த படுக்கையாக உள்ளதாக அவரது வழக்கறிஞர் தோழர் புகழேந்தி அவர்கள் தெரிவித்துள்ளார். முருகன் அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், சிறை அதிகாரிகள் அவரது ஆபத்தான உடல் நிலையை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும், உடனே தலையிட்டு முருகனின் உயிரை காப்பாற்ற வேண்டுமென வழக்கறிஞர் தோழர் புகழேந்தி அவர்கள் சிறை கைதிகள் உரிமை மையத்துக்கு விண்ணப்பம் வைத்துள்ளார்.

விடுதலை என்று அறிவித்துவிட்டு 6 நாட்கள் சிறைவிடுப்பு கூட வழங்காமல் இருப்பது அரசின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. பேரறிவாளன், முருகன் அவர்களின் மனைவி நளினி, இரவிச்சந்திரன் போன்றோருக்கு தமிழ்நாடு அரசு சிறை விடுப்பு அளித்துள்ளது போன்று முருகன் அவர்களின் உயிருக்கு ஆபத்தான நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு உடனடியாக நீண்டகால சிறைவிடுப்பு வழங்க வேண்டுமென திமுக அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. செய்யாத குற்றத்திற்காக யாரும் அனுபவிக்காத 30 ஆண்டுகளுக்கும் மேலான இருண்ட சிறைவாசத்தை அனுபவித்து வரும் முருகன் அவர்களின் நியாயமான, மனிதாபிமானமிக்க சிறைவிடுப்பு கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply