‘திராவிடம்’, ‘தமிழன்’ என்ற சொல்லாடல்களுக்கு உரிய அரசியலை முன்னிறுத்தியவரும், பூர்வ பௌத்த மரபை முன்னிறுத்தி இத்துத்துவ எதிர்ப்பு அரசியலை தொடக்கி வைத்தவரும், தமிழே திராவிடம் என்று முழங்கியவருமான பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் நினைவுநாளில் மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது

‘திராவிடம்’, ‘தமிழன்’ என்ற சொல்லாடல்களுக்கு உரிய அரசியலை முன்னிறுத்தியவரும், பூர்வ பௌத்த மரபை முன்னிறுத்தி இத்துத்துவ எதிர்ப்பு அரசியலை தொடக்கி வைத்தவரும், தமிழே திராவிடம் என்று முழங்கியவருமான பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் நினைவுநாளில் மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது – (மே 5, 1914)

இந்திய ஒன்றியத்தில் வலுவானதொரு ஆரிய பார்ப்பன எதிர்ப்பு தென்பகுதியில் தென்படுவதற்கு முகாமையான காரணமாக இருந்த அயோத்திதாசர் அவர்களின் அரசியல் போராட்டம் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும். குறிப்பாக தனது எழுத்துக்கள் இடையே அவர் இடையறாது கூறிவந்த ‘சாதி பேதமற்ற திராவிடன்’ என்ற சொல்லாடல் அதிக ஆழம் உடையதும், கவனிக்கத்தக்கதுமாய் இருந்துள்ளது.

அயோத்திதாச பண்டிதர் அவர்களின் இயல்பை குறிப்பிட வேண்டுமென்றால் அவரை சாதி ஒழிப்பு போராளி என்றும், சமூக நீதியின் முன்னோடி என்றும், ஆரிய இந்துத்துவ எதிர்ப்பின் தலைமகன் என்றும், பௌத்த தம்ம சிந்தனையாளர் என்றும், தமிழர் மரபுவழி மருத்துவ நிபுணர் என்றும், பார்ப்பன பத்திரிக்கைகள் மலிந்திருந்த காலத்திலேயே பார்ப்பன எதிர்ப்பு பத்திரிக்கைலான ‘ஒருபைசா தமிழன்’, ‘பறையன்’ ஆகிய இதழ்களை நடத்திய செயல் வீரர் என்றும் கூறிக் கொண்டே போகலாம். பண்டிதர் அவர்களின் சமூகப்பணி அத்தகைய பெரும் பணி ஆகும்.

குறிப்பாக இன்று பட்டியல் சமூகத்தினர் என்று பொதுவாக அழைக்கப்படும் இந்து மத சாதி கட்டமைப்பினால் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், உரிமைகளுக்காகவும் தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்த பண்டிதர் அவர்கள் இந்திய ஒன்றியம் ஒருபொழுதும் இந்து சாதிய கட்டமைப்பை ஆதரிக்கும் கயவர்கள் கையில் போய்விடக்கூடாது என்று உறுதியாக இருந்தார். 1909 ஜனவரி 2ல் அவர் எழுதியபோது “சொல்ல முடியாத அளவிற்கு சாதிகள் நிறைந்த இந்த தேசத்தில் அனைத்து சாதியினருக்கும் அளித்துள்ள சுதந்திரமே சுயராஜ்யம் ஆகும். அதைவிடுத்து வேறு மாதிரியான சுயராஜ்யம் வேண்டும் என்று கேட்பது உமி குத்தி மணி தேடுவதற்கு இணையானது” என்று எள்ளி நகையாடினார்.

தென்னிந்திய திராவிட சமூகத்தில் முதன்முதலில் இட ஒதுக்கீடு அடிப்படையில் வேலைகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற குரலும் பண்டிதர் அவர்களிடமிருந்தே புறப்பட்டுள்ளது. 1909 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ம் தேதி செய்தியில் “ஆங்கிலேய அரசின் ஆலோசனை சங்கத்தில் 100 பேர் நியமனம் செய்ய வேண்டும் என்றால் சாதி பேதமற்ற திராவிடர்கள் 25 பேரையும், சாதிபேதம் உள்ள இந்தியர்கள் 25 பேரையும், இஸ்லாமியர்கள் 25 பெயரையும், ஐரோப்பியர்கள் 13 பேரையும், இந்நாட்டை சேர்ந்த கிருத்துவர்கள் 12 பேரையும் நியமித்து ஆலோசனை பெறுவதே அனைவருக்கும் நலன் பயக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்தவர்களே இங்கு சாதிய படிநிலையில் கீழே வைக்கப்பட்டனர் என்பதை மிகவும் உறுதியாக பண்டிதர்கள் நம்பியிருந்தார். “ சாதி பேதம் இல்லாத திராவிடன் ஒருவனைப் பார்த்து ‘நீ என்ன சாதி?’ என்றால் அவன் ஒரு சாதியும் ஏற்றுக் கொள்ள விருப்பம் இல்லாமல் வெறுமனே மறுமொழி கூறாமல் இருப்பானாகில் அவனை தாழ்ந்த சாதி என்று கூறி நசித்து வருவதே சாதிபேதம் பார்ப்போரின் பண்பு” என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது இந்து மதத்தில் எல்லோருக்கும் ஏதாவது ஒரு சாதிய அடையாளத்தை கொடுத்துவிட முயல்வது என்பதையும், அவ்வாறு சாதி அடையாளத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் இழிவானவர்களாக கருதப்பட்டார்கள் என்பதையும் அவர் முன்னிறுத்தினார். “ இந்த தேசத்தில் உள்ளவர்களின் செவிகளில் இடைவிடாது நுழைந்து வரும் செய்தி என்னவென்றால் ‘ நீ என்ன சாதி? அவன் என்ன சாதி? நான் உயர்ந்த சாதி, அவன் தாழ்ந்த சாதி’ என்பது போன்ற செய்திகள்தான்” என்று கூறினார்.

பண்டிதர் அவர்களின் பார்ப்பன எதிர்ப்பு அலாதியானது. பார்ப்பனர்களின் சாதிய முறையை கேலி செய்தும், கடுமையாக விமர்சித்தும் தொடர்ச்சியாக எழுதி வந்தவர் அயோத்திதாச பண்டிதர் அவர்கள். ஆங்கிலேய அரசில் முக்கிய பணிகளுக்கு பார்ப்பனர்களை தனிப்பட்ட முறையில் நியமிக்கக் கோரி இந்து சாதி ஆதரவாளர்கள் விரும்பியபோது “ பிராமணன் என்பவர்களில் ஒருவருக்கு இப்படிப்பட்ட அலுவலை கொடுப்பதால் அந்த வகுப்பினரின் தர்மங்கள் எப்படி நடத்தப்படுகிறதோ அப்படித்தான் வேலைகளும் நடக்கும். எடுத்துக்காட்டாக அவர்களுடைய சாதிய படிநிலை ஏற்றுக் கொண்டவன்கூட இரண்டு நாள் பசியோடு ஒரு பிராமணரின் வீட்டிற்கு சென்று உதவி கேட்பானானால் அவனை அடித்து துரத்தி விடுவார்கள். அவர்களை ஒத்த பிராமணர்களுக்கு தானம் செய்து கொள்வது அவர்களுடைய பண்பு” என்று பார்ப்பனர்களின் பண்பியல்புகள் பற்றி விளக்கினார்.

மேலும் ஆங்கிலேயே அரசு பழைய சமூக நீதிக்கு எதிரான பார்ப்பன சட்டங்களை நீக்கிவிட்டு அனைத்து குடிமக்களுக்கும் பொதுவானதொரு சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார். “நீதி இல்லாத சட்டம் நிலைத்துப் போகுமானால் இந்த தேசத்திற்கு ஒரு ஆங்கிலேயரோ, ஒரு இஸ்லாமியரோ தங்கள் பணி தொடர்பாக நீதி செய்ய முயற்சித்தால் அவர்கள் மீது பொறாமை கொண்டு பிராமணர்கள் கொலைத் தொழிலை அஞ்சாது செய்வார்கள்” என்று எச்சரித்தார். இது எவ்வளவு உண்மையானது என்பதை ஆங்கிலேயே கலெக்டர் ஆஷ் துரை படுகொலையையும், காந்தியடிகளின் படுகொலையையும், செயல்வீரர் காமராசர் அவர்களை கொலை செய்ய ஆர்எஸ்எஸ் கும்பல் முயற்சி செய்ததையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது.

பார்ப்பனர்களின் சமூக சுரண்டலை எதிர்த்த அதே கணத்தில் மார்வாடிகளின் பொருளாதார சுரண்டலையும் அப்பொழுது இருந்தே எதிர்த்து வந்தவர் பண்டிதர் அயோத்திதாசர் ஆவார். மார்வாடிகள் என்போர் வட தேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் தென் தேசத்திற்கு தொடர்பற்றவர்கள் என்றும் கூறும் பண்டிதர் அவர்கள், உழைக்கும் ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களின் பொருள்களை அபகரிக்கும் கும்பல்தான் இந்த மார்வாடிகள் என்று கடுமையாக சாடி “மாறுவாடிகள் மோசம்! மாறுவாடிகள் மோசம்” என்று 1910ஆம் ஆண்டு எழுதியுள்ளார்.

இந்து மதத்தில் மட்டுமல்லாமல் கிறித்தவ மதத்தில் சாதித்தன்மை புகுவதை கடுமையாக எதிர்த்தவர் பண்டிதர் ஆவார். “கிறித்தவ அரங்கங்களில் சாதிபேதம் எனும் பொய் போர்வையை நீக்கி சகோதரத்துவம் பாராட்ட வேண்டிய கிருத்தவர்கள் ‘நான் சாதி கிருத்தவன், அவன் சாதி இல்லா கிருத்தவன், நான் தமிழ் கிருத்தவன், அவன் வலங்கை கிருத்தவன்’ என்று பேதம் பிரித்து வழிபடுவதன் மூலம் ஏதேனும் பயன் உண்டா? இத்தகைய பொறாமை குணம் உடையவர்கள் செய்யும் வழிபாட்டினை கிறிஸ்து ஏற்றுக்கொள்வாரா?” என்று கேள்வி எழுப்பினார். “திட்டமிட்ட தீய எண்ணத்தால் ஒரு பெரும் கூட்டத்தினரை தீண்டத்தகாதவர்கள் என்றும், தாழ்ந்த சாதியோர் என்றும் கூறி மன வலியை உருவாக்கும் கொடும் செயலுக்கு இவ்வுலகத்தில் மட்டுமல்ல எவ்வுலகிலும் மன்னிப்பு கிடையாது” என்றும் கூறினார்.

இந்துத்துவ கும்பலின் சட்ட நூலாக விளங்குகின்ற மனு தர்மத்தைப் பற்றியும், ராமாயணத்தை பற்றியும் மிக ஆய்வு செய்து அவற்றின் பொய் பிம்பங்களை உருவாக்கியிருந்தார். “புத்த தன்மம் என்றும், சத்திய தன்மம் என்றும், மெய்யறம் என்றும் வாழ்ந்து வந்த தேசத்தில், அந்நிய தேசத்திலிருந்து குடியேறி பிச்சை இரந்து வந்த ஒரு வகையான கூட்டத்தினர் தங்கள் சூழ்ச்சியாலும், வஞ்சகத்தாலும், கருணை என்பது கனவில் கூட கிட்டாத சதித்திட்டங்களினாலும், சாதி வேடங்களினாலும், மத வேடங்களினாலும் மூட்டிய பிரிவினைகளை அடிப்படையாகக் கொண்டு தேசத்தையும், தேசத்தின் மக்களையும் பாழ்படுத்தி தங்கள் சுய ஜீவனத்திற்காக உருவாக்கிக்கொண்ட மனு அதர்ம சாஸ்திரங்களை ‘மனுதர்ம சாஸ்திரங்கள்’ என்று பெயர் கொடுத்து வருகின்றனர். அது சுயநலம் கருதி எழுதிய நூலே அன்றி பொது நலம் கருதி எழுதியது இல்லை” என்று மனுவை பற்றி குறிப்பிடுகிறார்.

மேலும் புத்தருக்கு முன்பே ராமாயணம் நடைபெற்றது என்ற பொய்க் கதையை ராமாயணத்தில் இருந்த வால்மீகியின் வரிகளை வைத்து உடைத்தெறிந்தார் பண்டிதர் அவர்கள். “ராமாயணத்தின் மூலநூலான வால்மீகி ராமாயணத்தில் ‘அனுமன் இலங்கைக்கு சென்று சீதையை தேடும் பொழுது ஒரு கோபுரத்தின் உச்சியில் அமர்ந்து இது பௌத்தர்களின் கோபுரமாக இருக்குமோ என்று சிந்தித்த வண்ணம் இருந்தான்’ என்பதாக வால்மீகியே எழுதி வைத்திருப்பதை மறுக்கிறீர்களா?” என்று வினா எழுப்பினார். மேலும் வால்மீகி ராமாயணத்தில் ராமனுக்கு கல்வி கற்று கொடுக்கும் போது ‘ உன் தந்தை புத்தரைப் போல் உத்திர முகம் நோக்கி தாமரை போன்ற சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்கிறார். அதுபோல் நீயும் செய்வாயாக’ என்று கூறிய வால்மீகியின் வரிகளை மேற்கோள் காட்டி புத்தருக்கு முன்பே ராமாயணம் நடந்தது என்றும், ராமாயணமே இந்நாட்டின் வரலாறு என்றும் கூறும் இந்துத்துவவாதிகளின் முகத்திரையை கிழித்தெறிந்தார்.

தமிழின் மீது பெரும் பற்று கொண்ட பண்டிதர் அவர்கள் திருக்குறள் ( அதனை அவர் திரிக்குறள் என்று குறிப்பிடுவது வழக்கம்) மீதும், திருவள்ளுவர் மீதும் பெருமதிப்பு கொண்டிருந்தார். பார்ப்பனர்கள் திருவள்ளுவரை பார்ப்பனத் தந்தைக்கும் பிறந்தவர் என்பதாகும், திருக்குறளை மனுவின் நீட்சி அல்லது வேதத்தின் மறுபதிப்பு என்பது போன்ற கட்டுக்கதைகளை கூறுவதையும் சான்றுகளோடு தன் காலத்திலேயே மறுத்தவர் பண்டிதர் அயோத்திதாசர் ஆவார். மேலும் தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒன்றே என்பதில் உறுதியாக இருந்த பண்டிதர் அவர்கள் தாயுமானவர் பாடல்களையும், ஞான நீதி வரிகளையும் சுட்டிக்காட்டி திராவிடத்தை தமிழ் என்றும் தமிழையே திராவிடம் என்றும் கூறியுள்ளதை வலியுறுத்துகிறார்.

கிருஷ்ணர் என்ற கதாபாத்திரமே பொய்யானது என்று கூறும் பண்டிதர் அவர்கள் “ இத்தேசத்தில் கண்ணபிரான் என்று ஒருவர் பிறந்தார் என்னும் சரித்திர ஆதாரங்கள் எனும் செப்பேடுகளிலும் சாசனங்கள் எனும் ஒன்றும் கிடையாது” என்று கூறுகிறார். விஷ்ணு என்ற இந்து கடவுளின் அவதாரமே புத்தர் என்று சொல்லும் பொய்யை மறுப்பது மட்டுமல்லாமல் ‘விஷ்ணு என்ற ஒரு கடவுள் இருக்கிறாரா என்பதே ஆதாரமற்றவை’ என்றும் கூறுகிறார்.

புத்தரின் போதனைகளை பெருமளவில் முன்னெடுத்துச் சென்ற பண்டிதர் அயோத்திதாசர் அவர்கள் வணங்குவதற்குரிய நபர் புத்தரா, கிருஷ்ணரா என்று வாதிடுகிறார். “பொய் கூறாதே என்று சொன்ன புத்தரை வணங்குவதா? அல்லது பொய் பேசுவதையே வழக்கமாக கொண்டிருந்த கிருஷ்ணனை வணங்குவதா? உயிரை இம்சிக்காதீர்கள், கொலை செய்யாதீர்கள் என்று கூறிய புத்தரை வணங்குவதா? அல்லது கோடி கோடியான மக்களை கொலை செய்ய துணை இருந்த கிருஷ்ணனை வணங்குவதா? திருடாதே என்று அறிவுறுத்தியும், பிறர் பொருள் மீது ஆசை படாதே என்று அறிவுறுத்தியும் வந்த புத்தரை வணங்குவதா? அல்லது வீடு வீடாக திருடிச்சென்ற கிருஷ்ணனை வணங்குவதா?” என்று வினா எழுப்பினார்.

இன்று நாம் சமகாலத்தில் முன்வைக்கும் அனைத்து இந்துத்துவ எதிர்ப்பையும் தன் காலத்திலேயே தொடங்கி வைத்த பெருமை பண்டிதர் அயோத்திதாசர் சாரும். அவர் முன்னெடுத்த திராவிடம் என்ற அரசியல் சொல்லாடலே பிற்காலத்தில் ஆரிய பார்ப்பனர்களின் சமூக அரசியல் அதிகாரத்தை தகர்த்தெறிய உதவியது என்பதும், அவர் தொடங்கி வைத்த தமிழர் என்ற அடையாளமே இந்திய ஒன்றியத்தில் தமிழர் ஓர் தனி தேசிய இனம் என்கின்ற கருத்து உருவாக்கத்திற்கு தொடக்கமாக அமைந்தது என்பதும் நினைவுகூறத்தக்கது. இவ்வகையில் இயக்க அரசியல்களுக்கு முன்னோடியாகவும், திராவிட- தமிழர் அரசியலை முன்னெடுத்த செயல்வீரராகவும், சாதி ஒழிப்பு முதலிய முற்போக்கு செயல்திட்டங்களை வெகு காலத்திற்கு முன்பே பேசத் தொடங்கிய சாதி ஒழிப்பு போராளியாகவும் விளங்கிய பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் நினைவுநாளில் மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply