காவல் நிலைய விசாரணையில் உயிரிழந்த விக்னேஷூக்கு நீதி வழங்கு! காவல் மரணங்களை தடுத்து நிறுத்து!

காவல் நிலைய விசாரணையில் உயிரிழந்த விக்னேஷூக்கு நீதி வழங்கு! காவல் மரணங்களை தடுத்து நிறுத்து! – மே பதினேழு இயக்கம்

சென்னை மெரினா கடற்கரையில் குதிரை ஓட்டுபவராக இருந்து வந்த விக்னேஷ் என்னும் இளைஞர் காவல்துறை விசாரணையில் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என்பதும், அதனை மூடி மறைக்கும் விதமாக காவல்துறையினர் செயல்பட்டுள்ளனர் என்ற செய்தியும் அதிர்ச்சியளிக்கிறது. அந்த இளைஞரை கைது செய்ததிலிருந்து உடலை அடக்கம் செய்தது வரை காவல்துறையினர் எவ்வித சட்ட நடைமுறையையும் பின்பற்றவில்லை என்று தெரிய வருகிறது. சென்னை காவல்துறையின் இந்த சட்டவிரோத செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

சென்னை பட்டினப்பாக்கம் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் விக்னேஷ். இவர் மெரினா கடற்கரையில் குதிரை ஓட்டுபவராக இருந்து வந்தார். கடந்த 18-ம் தேதி இரவு சுரேஷ் என்னும் தனது நண்பருடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது, கெல்லிஸ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு G5 தலைமைச்செயலக குடியிருப்பு காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இருவரும் குடித்திருந்ததாகவும், கத்தி வைத்திருந்ததாகவும் பின்னர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதில், வாகன சோதனையின் போதே ஒரு போலீஸ் தலைகவசத்தால் விக்னேஷ் தலையில் தாக்கியதாகவும், காவல் நிலையத்தில் விசாரணையின் போது கடுமையாக தாக்கப்பட்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர். காலையில் மயக்கம் வருவதாக கூறிய விக்னேஷை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு, வரும் வழியில் இறந்துவிட்டதாக தெரிவிக்கவே, அதன் பின்னர் அவரது தம்பியை கட்டுபாட்டில் வைத்து உடற்கூராய்வு செய்து உடலை எரிக்க முயன்றுள்ளனர்.

விக்னேஷை கைது செய்ததும் காவலர்கள் அவரது கைப்பேசியை பிடுங்கிவிட்டு அவரது உறவினர்களுக்கு தகவல் சொல்லாமல் இருந்துள்ளனர். அவர் இறந்த பிறகே அவரது தம்பியை தேடிப் பிடித்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து அனைத்து செயல்களை மறைக்க முயன்றுள்ளனர். உடன் கைது செய்யப்பட்ட அவரது நண்பருக்கு கூட எந்த விசயமும் தெரியாமல் மறைத்துள்ளனர். உடற்கூராய்வின் போது விக்னேஷின் முகம் மற்றும் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளதை அவரது தம்பி கவனித்துள்ளார். காவல்துறையின் உயர் அதிகாரிகள் முதற்கொண்டு அனைவரும் ஒன்றுகூடி அவர் உறவினர்கள் பத்திரிக்கையாளர்களிடம் பேசிவிடாதபடி கட்டுப்பாட்டில் வைத்து, உடற்கூராய்வு செய்து முடித்த கையோடு பிணத்தை எரிக்க முயற்சிக்க, நீதிபதியின் உத்தரவிற்கு பின்பு உடலை புதைத்துள்ளனர்.

ஒருவரை கைது செய்தால் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் எதனையும் காவல்துறையினர் பின்பற்றாததோடு, உடற்கூராய்வு செய்து பிணத்தை உறவினர்களிடம் கூட ஒப்படைக்காமல், விக்னேஷ் முகத்தை கூட பார்க்க விடாமல் சட்டவிரோதமாக பிணத்தை எரிக்கவும் முயன்றுள்ளனர். மேலும், விக்னேஷ் குதிரையின் உரிமையாளர் மூலம் விக்னேஷ் குடும்பத்தாருக்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து விசயத்தை மூடி மறைக்கவும் முயன்றுள்ளனர். உடற்கூராய்விற்கான மாற்றுக்கருத்து கேட்கவும், மறு உடற்கூராய்வு செய்ய முடிவெடுப்பதற்கு போதிய அவகாசம் வழங்கவும் மறுத்துள்ளனர். நீதிபதியும் இது குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை.

காவல்நிலைய மரணம் தமிழ்நாட்டில் அதிகளவில் நடைபெறும் சூழலில் இச்சம்பவம் அது குறைந்தபாடில்லை என்பதையே காட்டுகிறது. சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ், சேந்தமங்கலம் மாற்றுத்திறனாளி என காவல்நிலையக் கொலைகள் தமிழ்நாட்டையே உலுக்கினாலும் இது தொடர்கதையாக உள்ளது. இது போன்ற சம்பவங்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும், அதற்கு காவலர்களுக்கு உரிய உளவியல் பயிற்சியும் புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கவும் வேண்டுமென தமிழ்நாட்டு அரசை மே பதினேழு வலியுறுத்துகிறது.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் முதற்கொண்டு அனைத்து காவலர்களை உடனடியாக பணி நீக்கம் செய்து குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதுவே உயிரிழந்த விக்னேஷிற்கு வழங்கப்படும் நீதியாக அமையும். மேலும், விக்னேஷ் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தினர் மீதான காவல்துறையினரின் அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்படுவதும், காவல்நிலைய மரணங்கள் ஒழிக்கப்படுவதுமே சமூகநீதியை பாதுகாப்பதற்கு ஒப்பாக அமையும்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply