திராவிட இயக்கப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 58-வது நினைவு நாளில் (ஏப்ரல் 21, 1964) புகழ் வணக்கம் செலுத்துகிறோம்!

திராவிட இயக்கப் பாவலர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 58-வது நினைவு நாளில் (ஏப்ரல் 21, 1964) புகழ் வணக்கம் செலுத்துகிறோம்! – மே பதினேழு இயக்கம்

“தமிழ்ப் படி; தமிழ் பேசு, தமிழ் எழுது. கொடுமை கண்டவிடத்து எதிர்த்துப் போராடு. யாரேனும் தமிழைப் பழித்தால் லேசில் விடாதே.”
– பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், சென்னை சொற்பொழிவு-1946

தமிழர்களுக்கு இன உணர்வும், மொழி உணர்வும், தன்மான உரிமை உணர்வும் ஊட்டிய பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பங்களிப்பு திராவிட இயக்க வாலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை.

பாண்டிச்சேரியில் பிறந்த கனக சுப்புரத்தினம் என்னும் இயற்பெயர் கொண்ட பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தன் இளம் வயது முதலே அரசியல், சமூக மற்றும் மொழி உரிமை உணர்வு கொண்டவர். ஆசிரியர் பணியில் இருந்து கல்விப் பணியாற்றிய பாவேந்தர் அவர்கள் 1919-ல் திருபுவனையில் பிரெஞ்சு அரசுக்கு எதிராக எதிராக செயல்பட்டதாக கூறி 1 வருடம் 4 மாதம் பொய்க் குற்றச்சாட்டு சாட்டப்பட்டு, சிறைபட்டு, விடுதலை செய்யப்பட்டார்.

தமிழ் மொழியின் இனிமைக்கு சான்றாய் அமையும் பல்வேறு பாக்களை இயற்றிய பாவலரான பாவேந்தர் அவர்கள் இந்தி எதிர்ப்பில் பெரும் பங்கு கொண்டவர். 1948-ம் ஆண்டு சென்னை மாகாண இந்தி எதிர்ப்பு மாநாடு நிகழ்வில், “இந்தி எந்த நாட்டுக்கு பொது மொழி? திராவிட நாட்டுக்கா?” என்று கேள்வி எழுப்பினார்.

“தீங்குடைய பார்ப்பனரின் ஆயுதங்கள்
இந்தி, வடசொல் இரண்டும்”

என்று இந்தி மற்றும் சமஸ்கிருத எதிர்ப்பை வெளிப்படுத்தினார். தமிழர்கள் திரண்டு இந்தி எதிர்ப்பை முன்னெடுக்க கோரி அழைப்பு விடுத்த பாரதிதாசன் அவர்கள்,

“இந்தி எதிர்த்திட வாரீர் – நம்
இன்பத் தமிழ்தனைக் காத்திட வாரீர்”

“செந்தமிழ் தன்னில் இல்லாத – பல
சீமைக் கருத்துக்கள் இந்தியில் உண்டோ?
எந்த நலம்செய்யும் இந்தி – எமக்கு
இன்பம் பயப்பது செந்தமிழன்றோ.”

என்று முழங்கினார். மேலும்,

“தென்னாடு தான்எங்கள் நாடு – நல்ல
செந்தமிழ் தான்எங்கள் தாய்மொழி யாகும்
புன்மைகொள் ஆரிய நாட்டை – எங்கள்
பொன்னாட்டினோடு பொருத்துதல் ஒப்போம்.
இன்னலை ஏற்றிட மாட்டோம் – கொல்லும்
இந்தியப் பொதுமொழி இந்தி என்றாலோ
கன்னங் கிழிந்திட நேரும் – வந்த
கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்.”

என்று இந்தி திணிப்பாளர்களை எச்சரித்தார்.

சாதி ஒழிப்பு என்பதை தன் பாக்கள் வழியே தொடர்ந்து வெளிப்படுத்திய பாவேந்தர் அவர்கள்,

“பஞ்சமர் பார்ப்பார் என்பதெல்லாம்
பாரத நாட்டுப் பழிச்சின்னத்தின் பெயர்”

என்றும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக ‘தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு’ என்ற பாடலில்

“அற்பத் தீண்டாதார் என்னும்
அவரும் பிறரும் ஓர்தாய்
கர்ப்பத்தில் வந்தாரன்றோ – சகியே
கர்ப்பத்தில் வந்தாரன்றோ?”
என்று பாடினார்.

1928-ல் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தார். குடிஅரசு, பகுத்தறிவு ஆகிய திராவிட இயக்க ஏடுகளில் பாடல், கட்டுரைகள் தொடர்ச்சியாக எழுதிவந்தார். பாவேந்தர் அவர்களின் பெரும்பணி கண்டு ‘சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற பாவலர்’ என்று தந்தை பெரியாரால் புகழப்பட்டார்.

பெரியார் மீது பெரும் பற்றுக் கொண்டவர் பாவேந்தர் அவர்கள். 1957-ம் ஆண்டு பெரியார் பற்றி கூறும் போது,

“தோழர்களே! அரசியல் பகுதி எது சமூக பகுதி எது என்பதை நீங்கள் நான்கு அலசிப் பார்த்துப் போராடவேண்டும். இப்படிப்பட்ட சமுதாயதுறையில் பெரியாருக்கு முப்பது ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உண்டு. நீங்கள் அவர் வழி நிற்க வேண்டும். அவர் பாதையில் செல்ல வேண்டும்.” என்று தமிழர்களை கேட்டுக் கொண்டார்.
1958-ம் ஆண்டு சிதம்பரத்தில் பெரியாருக்கு வெள்ளி வாள் பரிசளிப்பு பொதுக்கூட்டத்தில்,

“வாள் வெட்டுவது, துணிப்பது ஆகிய வேலைகளை செய்வது. வடவர்க்குத் தமிழகத்தின் மேல் இருக்கும் தொடர்பை வெட்டுபவர் பெரியார்தாம்”

என்று பேசியதில் இருந்து தான் இறுதி காலம் வரை பெரியாரின் மீதும், பெரியாரின் செயல்பாடுகள் மீதும் பெரும் நம்பிக்கை வைத்திருந்தவர் பாவேந்தர் அவர்கள் என்று உணர்ந்து கொள்ளலாம்.

பெரியார் தான் வாழ்நாள் முழுதும் எதிர்த்த இராமாயானத்தை பற்றி கூறும் போது,

“இராமாயணம் ஆரியக்கதை. தமிழனை அரக்கனென்றும், குரங்குகளென்றும், கரடிகளென்றும் கூறும் கதை. ஆரியத்தை ஒழிக்கவேண்டும் என்று கூக்குரலிட்ட புலவர், ஆரியக் கதையாகிய இராமாயானத்தை எரிக்க வேண்டும் என்றால் எதிர்ப்பானேன்?”

என்றுக் கூறினார்.

தமிழீழ தமிழர்களின் மீதான சிங்களவர்களின் அடக்குமுறையை பற்றி சினத்துடன் பாடிய பாவேந்தர் அவர்கள்,

“சிங்களவர் பெரும்பான்மை யோரெனச் செப்பித்
தமிழர் உரிமையைத் தலை கவிழ்க்க
எண்ணும் எண்ணம் இழைக்கும் தீமைகள்
எவற்றையும் தமிழர் எதிர்க்க வேண்டும்
மானங் காப்பதில் தமிழ் மக்கள்
சாதல் நேரினும் தாழக் கூடாது
இவைகள் இலங்கைத் தமிழர் கொள்கைகள்!
யாவர் இவற்றை எதிர்ப்பினும் விடற்க!
வெல்க இலங்கைத் தமிழர்!
வெல்க தமிழே! மேவுக புகழே!”

என்று முழங்கினார் – (இலங்கை ‘தினகரன்’ சிறப்பு மலர் – நவம்பர் 7,1959).

மக்களுக்கு மிக எளிமையாக உணர்த்துவதில் பாவேந்தருக்கு இணையில்லை என்று கூட சொல்லலாம். அவர் எழுதிய ஆத்திச்சூடியில் இதை காணலாம்.

அரசாட்சி பொதுவானதாக இருக்கவேண்டும் என்பதை ‘ஆட்சியை பொதுமை செய்!’ என்றும், அனைத்து பொருளாதாரக் காரணிகளும் பொதுவுடைமையாக இருக்கவேண்டும் என்பதை ‘உடைமைப் பொதுவே!’ என்றும், உயர்வு தாழ்வு எனும் கீழ்மை எண்ணம் தவிர் என்பதை ‘கீழ்மகன் உயர்வெனும், குள்ள நினைவு தீர்’ என்றும், இணையரை இழந்தவருக்கு மறுமணம் செய்வது முகாமையானது என்பதை ‘கைம்மை அகற்று’ என்றும், நால்வருணம் என்ற பார்ப்பன கருத்தை மறுத்து ‘நால்வகைப்பிறவி பொய்’ என்றும், மத பரப்புதல் போது நன்மைக்கு எதிர் என்பதை ‘பார்ப்பு பொதுப்பகை’ என்றும் (பார்ப்பு – மத பரப்புரை), சுயமரியாதையே மனிதர்க்கு அழகு என்பதை ‘பீடு தன் மானம்’ என்றும், ஆணும் பெண்ணும் சமம் என்பதை ‘பெண்ணொடாண் நிகர்’ என்றும், ஆரிய பார்ப்பன வேதங்கள் என்ற மறை நூலகள் ஒரு சூழ்ச்சி செயல்பாடு என்பதை ‘மறைஎனல் சூழ்ச்சி’ என்றும், இயல்பு மொழியில், அதேநேரத்தில் ஒரு சிறந்த இலக்கிய நயத்துடனும் வெளிப்படுத்தியவர்.

தமிழ்த்தேசியத்தின் இன்றைய கூறுகளை தன் பேச்சு மற்றும் எழுத்து வழியே வெளிப்படுதியவர். திராவிட இயக்க சிந்தனையை தன் பாடல்கள் வழியே மக்களிடம் பரப்பிவர் பாவேந்தர் அவர்கள். அவரின் பாடல்கள் எக்காலத்திலும், யாராலும் புரிந்து கொள்ள இயலும் வண்ணம் அரசியலை வெளிப்படுத்தினார். அவரது 58 வது நினைவு நாளில் மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply