புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131 வது பிறந்தநாளில் புகழ்வணக்கம் செலுத்துவோம் – ஏப்ரல் 14, 1891

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131 வது பிறந்தநாளில் புகழ்வணக்கம் செலுத்துவோம் – ஏப்ரல் 14, 1891

“சாதி கூடாது என்றால் உங்களுடைய இலட்சிய சமூகம் எப்படிப்பட்டது என்ற கேள்வி நிச்சயம் எழக்கூடும். என்னுடைய இலட்சிய சமூகம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.”
அண்ணல் அம்பேத்கர் அவர்கள்

இந்திய ஒன்றியத்தின் அரசியல் அமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதையும், இந்து மதத்தின் சனாதன வர்ணாசிரம கொடுமையால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓட்டுரிமை, இடஓதுக்கீடு போன்ற அடிப்படை உரிமைகளை போராடி பெற்றுத் தந்தவரும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சிறப்புரிமைகள், பெண்களுக்கான சொத்துரிமை போன்ற சட்டங்களை நிறைவேற்றாத காங்கிரஸ் அரசை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியையே துறந்தவருமான புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கனவுதான் மேற்கூறப்பட்ட சமூகம்.

இங்கிலாந்து இலண்டன் நகரின் வழக்கறிஞர் பட்டப்படிப்பு படிக்கும் அளவிற்கு கடும் உழைப்பை கொண்டிருந்தாலும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தன்னளவில் சந்தித்த சாதிய தீண்டாமைக் கொடுமைகள் கணக்கிலடங்ககாதவை. அத்தகைய கொடுமைகளே அண்ணல் அவர்களை சாதியின் தோற்றம் குறித்த காரணங்களைத் தேடச்செய்தன. அத்தேடலின் முடிவில் இந்துமதமும், அதன் சாதிய அடுக்கும், அதன் உச்சியில் அமர்ந்து அதிகாரம் செலுத்தும் பார்ப்பனர்களும், அவர்களின் அதிகாரத்தை ஏற்றுக்கொண்ட பார்ப்பனியக் கட்டமைப்புமே தீண்டாமையின் ஊற்றுக்கண் என்பதை புரிந்து கொண்டார். அந்த கணம் முதல் இந்து மதத்தை ஒழிப்பதே சாதி ஒழிப்பிற்கு ஒரேவழி என்றும் உணர்ந்து கொண்டார்.

அதை தன் எழுத்துக்களில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“பார்ப்பனர், சத்ரியர், வைசியர், சூத்திரர் எனும் பழைய முத்திரைகளை ஒட்டிக்கொண்டிருக்கும் இந்த சதுர்வர்ண முறையை நான் அறவே வெறுக்கிறேன். என் முழு இயற்கையும் அதை எதிர்த்து எழுகிறது.”

‘அன்பே ஒற்றை வழி’ என்று போதித்த புத்தரின் தத்துவத்தை உணர்ந்த அண்ணல் அவர்கள் ‘வெறுக்கிறேன்’ என்று கூறும் அளவிற்கு இந்து மதம் தீண்டாமைப் புரையோடிய மதமாய் இருந்து வருகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்து என்பதையே அண்ணல் ஏற்றுக்கொள்ளவில்லை. “இந்து சமூகம் என்பதே வெறும் கற்பனையான ஒன்றுதான். இந்து என்ற பெயரே ஓர் அன்னியப் பெயர்தான். இந்து சமூகம் என்று சொல்லப்படுவதெல்லாம் பல சாதிகளின் தொகுப்பே ஆகும். இந்து முஸ்லிம் கலவரம் ஏற்படும் சமயங்கள் தவிர்த்த பிற சமயங்களில் ‘பிற சாதிகளோடு தம் சாதிக்கு உறவு உண்டு’ என்பதை எந்த சாதியும் உணர்வதில்லை.” (சான்று: டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும் – தொகுதி 1) என்று கூறுகிறார். மேலும் இந்த கற்பனை மதம் கூட காட்டுமிராண்டித்தனமானது என்பதாக “இந்திய சமுதாயத்தைத் தவிர வேறு எந்த நாகரிக சமுதாயத்திலும் நாகரிகமற்ற பழங்காலத்திற்குறிய மிச்ச சொச்ச சின்னங்கள் நிலவி வருவதை காண முடியாது.” என்றும் கூறுகிறார்.

இந்துவாக வளர்க்கப்பட்ட ஒருவன் மனிதத் தன்மையற்று இருப்பதை உணர்ந்த அண்ணல் “கிறித்தவ தொண்டு நிறுவனங்கள் பழங்குடியினருக்கு செய்யும் ஊழியங்களை ‘இந்து’ ஒருவன் செய்ய முடியுமா? செய்ய முடியாது என்றே கூறுவேன். காரணம் இந்த பழங்குடி மக்களை நாகரீக மக்களாக்குவது என்றால் அவர்களோடு இணைந்து அவர்களை உறவினாராக நடத்த வேண்டும். அவர்களுக்குள் ஒருவாராகவே வாழவேண்டும். தோழமை உணர்வை வளர்க்கவேண்டும்.

சுருக்கமாக சொல்வதென்றால் அவர்களை நேசிக்கவேண்டும். ஒரு இந்து இவற்றையெல்லாம் செய்வது சாத்தியப்படுமா?” (சான்று: டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும் – தொகுதி 1) என்று சனாதனவாதிகளை பார்த்து கேள்விகளைத் தொடுத்தார்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களை பொறுத்த மட்டில் சாதிதான் முதன்மை முரண். அதை தனது பேச்சிலும், எழுத்திலும், நாடாளுமன்ற உரைகளிலும் ஒவ்வொரு கணமும் முழங்கியுள்ளார். இந்தியாவில் சாதிகள் என்ற நூலில் “கோட்பாட்டு அளவிலும் நடைமுறையிலும் சாதிப் பிரச்சினை மிகப்பெரியதொன்றாகும். சாதிச் சிக்கல் ஒரு வட்டாரச் சிக்கல்; ஆயினும் மிகப் பரந்த அளவில் தீங்கு விளைவிக்கும் வல்லமை கொண்டது. ஏனெனில் இந்தியாவில் சாதிமுறை உள்ளவரை இந்துக்கள் கலப்பு மணம் செய்ய மாட்டார்கள்; அன்னியருடன் சமூக உறவு கொள்ள மாட்டார்கள்; இந்துக்கள் உலகின் பிற பகுதிகளுக்குப் பிழைக்கச் சென்றாலும் இந்திய சாதி உலகளாவியதொரு சிக்கலாக உருக்கொள்ளும்.” என்று எச்சரிக்கிறார்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்தியா என்ற நிலப்பரப்பு ஒரு ஒன்றியமாக இருக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக நின்றிருந்தார். அந்த ஒன்றியத்தின் உறுப்புக்கலான மாநிலங்கள் தன்னாட்சி கொண்டாதாக இருக்கவேண்டும் என்ற பொருளில் “இன்று நமக்கும், நாளை நமது சந்ததிகளுக்கும் இந்திய ஐக்கிய மாநிலங்கள் முற்றிலுமாக சுய ஆட்சிக்கும் (Self Government) நல்லாட்சிக்கும் வழி செய்தல்” என்றே தனது விருப்பத்தை தெரிவித்தார்.

அதிலும் சிறுபான்மையினர் (இசுலாமியர்கள், கிறித்தவர்கள் முதலானோர்), பட்டியல் சமூக மக்கள் ஆகியோரின் நலன்கள் பாதிக்கும் வண்ணம் இந்தியா வடிவமைக்கப்பட்டுவிடக்கூடாது என்று கவலைப்பட்டார். அதன் உச்சபட்சமாக, இந்திய தேர்தல் முறையில் பெரும்பான்மை சமூக ஆட்சி என்று ஒன்று உருவாகக்கூடாது என்றும், மீறி உருவானால் அது சிறுபான்மையினர் மற்றும் பட்டியல் சமூகத்தினரின் உரிமைகளை பறித்துவிடும் என்று எச்சரித்து அதை தடுப்பதற்கான ஒரு வரைவையும் முன் மொழிந்தார் (சான்று: சமூகத் தடையும் அதைத் தாக்கும் வழியும் – கட்டுரை).

1. பெரும்பான்மை ஆட்சி, தத்துவ ரீதியில் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை, நடைமுறையில் நியாயமற்றது. ஒரு பெரும்பான்மைச் சமூகத்திற்கு ஓரளவு (relative) பெரும்பான்மைப் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படலாம். ஆனால் அறுதிப் பெரும்பான்மையை (absolute majority) அது கோர முடியாது.

2. ஒப்பீட்டு அடிப்படையில் ஓரளவு பெரும்பான்மை பிரதி நிதித்துவம் சட்டசபையில் கொடுக்கப்படும் போது, அதன் எண்ணிக்கை சிறிய சிறுபான்மை வகுப்பினரின் உதவியுடன் தனது ஆட்சி அமைப்பதைச் சாத்தியமாக்குமளவுக்கு இருக்கக் கூடாது.

3. சபையில் இடப் பங்கீடு செய்கையில், பெரும்பான்மை வகுப்பும் ஒரு பெரிய சிறுபான்மை வகுப்பும் இணைந்து, மற்ற சிறுபான்மை வகுப்புகளின் வகுப்புகளின் நலனுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் கூட்டணி அமைய முடியாதவாறு இருத்தல் வேண்டும்.

4. அனைத்துச் சிறுபான்மை வகுப்பினரும் இணைந்து பெரும்பான்மையைச் சார்ந்திராமல் அவர்களே ஆட்சி அமைக்க முடியும் என்ற அடிப்படையில் இடங்கள் பங்கீடு செய்யப்பட வேண்டும்

5. பெரும்பான்மையிடமிருந்து எடுக்கப்பட்ட உபரி இடங்களின் எண்ணிக்கை சிறுபான்மை வகுப்புக்களிடையே பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு வினியோ கிக்கும் போது, சமூக, பொருளாதார, கல்வி நிலைகளில் மேம்பாடு அடைந்துள்ள பெரிதான சிறுபான்மைக்கு இடங்களைக் குறைந்த எண்ணிக்கையில் ஒதுக்கியும். சமூக நிலைகளில் தாழ்ந்துள்ள சிறிய சிறுபான்மை வகுப் பினர்க்கு அதிக இடங்களையும் ஒதுக்கியும் நேர்மாறான விகிதத்தில் பங்கீடு செய்ய வேண்டும்.

இதையும் மீறி அமையும் பெரும்பான்மை ஆட்சி எப்படி இருக்கும் என்பதையும் அவர் கணித்திருந்தார். “இந்தியாவின் வருங்கால அரசியலமைப்பில் பெரும்பான்மையோர் ஆட்சி ஏற்பட்டால், அது நிச்சயம் சாதி இந்துக்களின் ஆட்சியாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த சாதி இந்துக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு நியாயம், நீதி, சமத்துவம், மனசாட்சி எல்லாம் பலியிடப்படும். சட்ட ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் சிறுபான்மை வகுப்பினரின் நலன் புறக்கணிக்கப்படும்; அவர்களது குடிஉரிமைகள் காற்றிலே பறக்க விடப்படும் என்பதில் ஐயமில்லை. ஒடுக்கப்பட்ட வகுப்பினரும் மற்ற சிறுபான்மை வகுப்பினரும் அஞ்சுவது இதுதான்.” (சான்று: டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும் – தொகுதி 3, பக்கம் 42)

மேலும் “இக்கண்ணோட்டத்துடன் பார்க்கையில், சிறுபான்மை வகுப்பினருக்கு சட்டப் பேரவைகளிலும் நிர்வாக அமைப்பிலும் நாட்டின் பொதுப்பணிகளிலும் தக்க பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும்; பெரும்பான்மை வகுப்பினர் ஒரு சமுதாயத்திற்கும் மற்றொரு சமுதாயத்தினருக்கும் வேறுபாடு காண்பிக்கும் வகையில் மத்திய, மாநில சட்டப் பேரவைகள் சட்டங்களை இயற்றுவதற்குத் தடை செய்யும் வண்ணம் அவர்களது அதிகாரங்களுக்கு வரையறை விதிக்கப்பட வேண்டும்.” என்றும் வலியுறுத்தினார்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வர்க்கம் பற்றிய பார்வையும் தனித்தன்மை உடையது. இந்திய நிலப்பரப்பில் வர்க்கத்தின் இருப்பை ஒப்புக்கொள்ளும் அண்ணல் அதனை முதன்மை முரணாக பார்ப்பதை ஏற்கவில்லை. வருணமும், சாதியும் வர்க்கத்தோடு கலந்திருப்பதை பின்வருமாறு சுட்டிக்காடுகிறார்.

“இந்துக்கள் பலத்தரப்பட்ட சாதியினராகப் பிரிக்கப்பட்டு இருப்பது போலவே, சாதிகளும் சாதியின் பலவகைப்பட்ட வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்து எனப்படுபவர் சாதி உணர்வுள்ளவராகவே இருக்கின்றார். அதோடு வர்க்க உணர்வும் அவருக்கு உண்டு. அவர் சாதி உணர்வு உள்ளவரா அல்லது வர்க்க உணர்வு உள்ளவரா என்பது அவரை எதிர்க்கின்ற சாதியைப் பொறுத்து வெளிப்படுகிறது. அவரது எதிர்ப்புக்குப் பாத்திரமாகும் சாதி அவர் சார்ந்திருக்கும் வர்க்கத்தைச் சார்ந்த சாதியாக இருந்தால் அவர் சாதி உணர்வு உள்ளவராக இருக்கிறார். அவ்வாறின்றி அந்தச் சாதி அவரது வர்க்கத்தைச் சாராததாக இருந்தால் அவர் வர்க்க உணர்வு உள்ளவராக இருக்கிறார்” (சான்று: இந்து மதத்தின் அடையாளங்கள் – கட்டுரை). மேலும் “ஏனைய பொருளாதாரமல்லாத அனைத்து விசயங்களும் சமமாக இருக்கும் ஒரு சூழலில் மட்டுமே பொருளாதார மனிதன் இருக்க முடியும்” என்ற புரட்சியாளர் மார்க்ஸ் அவர்களின் மேற்கோளை சுட்டிக்காட்டி இந்திய சமூகத்தில் சாதி முரணே முதன்மை என்றும் கூறுகிறார்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தீவிரமாக எதிர்த்த இந்து மத நூல்களில் முதன்மையானவை மநு மற்றும் பகவத் கீதை ஆகும். பகவத் கீதையை பற்று கூறும் போது “இது ஒரு மதநூலும் இல்லை, தத்துவ நூலும் இல்லை. இதில் நாம் எடுத்தாள்வதற்கு எதுவும் இல்லை” என்கிறார்.

இன்றைய அரசியல் சூழலில் ‘இந்து ராஜ்ஜியம்’ அமைக்க காவி கும்பல்கள் முயல்வதை பற்றி அன்றே அண்ணல் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். “இந்து ராச்சியம் என்பது, உண்மையில் நடை முறைக்கு வருமேயானால், சந்தேகமின்றி – இது இந் நாட்டுக்கு ஏற்படப்போகும் மிகப்பெரிய ஆபத்தாகும். இந்துத்துவம் என்பது – சுதந்திரம், சமத்துவம், சகோத ரத்துவம் இவற்றுக்கு நேர்விரோதமானது. அந்த அடிப் படையில், இது ஜனநாயகத்துக்கு எதிரானது. எப்பாடு பட்டாகிலும் இந்து ராச்சியம் தடுத்து நிறுத்தப்பட்டே ஆக வேண்டும்.”
(சான்று: பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 8, பக்கம் : 356) என்று தன் எதிர்ப்பை பதிவிட்டுள்ளார்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் மாபெரும் முன்னெடுப்பு லட்சக்கணக்கான பட்டியல் சமூகத்தினரோடு புத்த மதத்திற்கு மாறியதே. அன்றைய தருணத்தில் “நீண்ட நாட்களுக்கு முன்பே நான் கூறினேன், ‘நான் இந்துவாகப் பிறந்தாலும் ஒருபோதும் இந்துவாக சாக மாட்டேன்’. நேற்று அதை நிருபித்தும் காட்டினேன். நான் தற்பொழுது மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறேன். நான் ஒரு கொடூரத்திலிருந்து விடுதலை பெற்றிருக்கிறேன்.” என்று கூறினார்.

சாதி ஒழிப்பே மக்களாட்சியை தரும் என்று பறைசாற்றிய அண்ணல் “உங்களுடைய சமூக அமைப்பை மாற்றாமல் நீங்கள் சிறிதுகூட முன்னேற்றம் காண முடியாது. தற்காப்புக்கோ அல்லது போர் தொடுப்பதற்கோ மக்களை ஒன்று திரட்ட முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதையும் உருவாக்க முடியாது. தேசிய இனத்தை உருவாக்க முடியாது. ஒரு ஒழுக்கப் பண்பை உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக வைத்து நீங்கள் எதை உருவாக்கினாலும் அது உடைந்து சிதறி உருப்படாமற் போகும்.” என்றே கூறுகிறார். அதுவே நாம் முன்னிறுத்தும் தமிழ்தேசியத்தின் அடிப்படையும் ஆகும்.

சாதியே முதன்மை முரண் என்றும், இந்து சனாதன மத ஒழிப்பே முதன்மை பணியென்றும், ஒடுக்கப்பட்ட மற்றும் பட்டியல் சமூக மக்களின் சமூக அரசியல் பொருளாதார உரிமை மீட்பே இறுதி இலக்கென்றும் வாழ்ந்து காட்டிய அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply