கண்ணியமிக்கத் தலைவர் ஐயா காயிதே மில்லத் அவர்களின் 50-வது நினைவுநாள் – 05-04-1972

கண்ணியமிக்கத் தலைவர் ஐயா காயிதே மில்லத் அவர்களின் 50-வது நினைவுநாள் – 05-04-1972

“இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது; நல்ல உத்தமமான மனிதர்; முஸ்லிம் சமுதாயத்திற்கு இவரைப் போன்ற தலைவர் கிடைப்பது கஷ்டம்”

சென்னை புது கல்லூரியில் (Chennai New College) பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த கண்ணியமிக்கத் தலைவர் ஐயா காயிதே மில்லத் அவர்களின் உடலை பார்க்க நேரில் வந்த தந்தை பெரியார் அவர்கள் கூறிய வரிகள் தாம் இவை. இவ்வரிகளின் ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய பெருமையை தன் வாழ்நாளில் வாழ்ந்தும், செயல்பட்டும் பெற்றவர் கண்ணியமிக்கத் தலைவர் ஐயா காயிதே மில்லத் அவர்கள்.

இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர், இந்திய நாடாளுமன்ற இருசபைகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர், அன்றைய சென்னை மாகாணத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பல சிறப்பியல்புகள் கொண்ட ஐயா காயிதே மில்லத் அவர்கள் ஒரு சிறந்த தமிழ்ப் பற்றாளரும் கூட. “இஸ்லாம் எங்கள் வழி; இன்பத்தமிழ் எங்கள் மொழி. இதுவே தமிழ் முஸ்லிம்களின் முழக்கம்” என்று முழங்கியவர். 1968-ம் ஆண்டு உலகத்தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு ‘அரபு நாடுகளுடன் தமிழர்கள் தொடர்பு’ என்ற தலைப்பில் உரையாற்றினார். நாடாளுமன்றத்தில் ஸ்ரீ ராமேஸ்வர ஆனந்த் என்ற உறுப்பினர் ஐயா காயிதே மில்லத் அவர்களை பார்த்து “உருதுவில் பேசுங்கள்” என்று உள்நோக்கத்தோடு கூறியபோது, “எனக்கு இந்தியும் அந்நிய மொழி, உர்தூவும் (உருதுவும்) அந்நியமொழியே; இந்த அவையில் உள்ள உறுப்பினர்களில் பலர் நிலைமையும் இதே போன்றதே. எனது தாய்மொழியான தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே என்னால் சரளமாக பேச முடியும்.” என்று கூறினார்.

1949-ம் ஆண்டு அரசியல் நிர்ணய சபை விவாதத்தில் இந்திய ஆட்சிமொழி பற்றி கூறும்போது, “ஒரு மொழி இந்திய மொழியாக மட்டும் இருந்தால் போதாது. அம்மொழி இந்நாட்டின் பழமையான மொழியாகவும் இருக்க வேண்டும். அத்தகைய மொழியையே இந்நாட்டின் தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்து இங்கே முன்வைக்கப்பட்டது.

அக்கருத்தை ஏற்று அரசியல் நிர்ணய சபை தேசிய மொழி பற்றிய முடிவை எடுக்குமானால், ஒரு உண்மையை இச்சபை முன்பு துணிவோடு கூற விரும்புகிறேன். இந்த நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ் தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. எந்தப் புதைபொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது எனது தாய்மொழி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். அம்மொழியை நான் நேசிக்கிறேன்.

அம்மொழியைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால் இந்தியாவின் தேசிய மொழியாக தமிழைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.” என்று கூறினார்.

அதேநேரம் ஒற்றை ஆட்சி மொழியை அவர் ஏற்றுக் கொண்டாருமில்லை. 1963-ம் ஆண்டு நாடாளுமன்ற உரையில் “மொழி என்பது உணர்ச்சிபூர்வமானது. ஒருவன் வாழ்க்கை முழுவதிலும் அது பிரதிபலிக்கிறது. தொட்டு நிற்கிறது. எனவே இதுகுறித்து விளையாட்டாகவோ மேம்போக்காகவோ பேசிவிட்டு நிறுத்திவிட முடியாது.

ஒரு மொழியை மட்டும் மத்திய அரசு ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்டால் அந்த மொழியைப் பேசுகிறவர்கள் மட்டும் ஆட்சியாளர்களாகவும், அம்மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்கள் ஆளப்படுபவர்களாகவும் ஆகிவிடுவார்கள்.

ஒரு மொழிதான் ஆட்சி மொழியாக வேண்டுமா? அல்லது இந்நாட்டின் ஒற்றுமை முக்கியமா? இதுதான் இன்று கேள்வி.” என்று முழங்கினார்.

தன் தலைமையில் இயங்கிய கட்சியை உடைக்க பலர் முயன்ற போதும், இந்திய ஒன்றிய அரசு கட்சியை கலைக்க முயன்ற போதும், பல அவதூறுகளை அள்ளி வீசிய போதும் கலங்காமல் எதிர்ப்புக்களை களம் கண்டவர் கண்ணியமிக்கத் தலைவர் ஐயா காயிதே மில்லத் அவர்கள்.

ஐயா காயிதே மில்லத் அவர்கள் இளம் வயது முதலே அரசியல் ஆர்வம் கொண்டவர். 1909-ம் ஆண்டு தான் வயது ஒத்த முஸ்லிம் சமூக இளைஞர்களை கொண்டு ‘பால்ய முஸ்லிம் சங்கம்’ என்ற சங்கம் ஒன்றை துவங்கினார். அப்பொழுது அவர் வயது 13 மட்டுமே.

1936-ம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண தேர்தலில் பொதுத்தொகுதியில் போட்டியிட்ட திரு M.ஜமால் முகமது சாகிப் (திருச்சி ஜமால் முகமது கல்லூரியை நிறுவியவர்) தோல்வி அடைந்ததை கண்ட ஐயா காயிதே மில்லத் அவர்களுக்கு இந்திய ஒன்றியத்தின் ‘பெரும்பான்மை வகுப்புவாதம்’ என்பது பற்றி தெளிவாக புரிந்தது. தன் இறுதி காலம் வரை சிறுபான்மை மக்களின் உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க அவர் அனுமதித்ததே இல்லை.

பீஹார் தலைநகர் பாட்னாவில் 21-01-70 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஐயா காயிதே மில்லத் அவர்கள், “சிறுபான்மையினர் பிரச்சனை என்பது உலகளாவியதொரு விவகாரம். எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும், ஏதாவது ஒரு வகையில் சிறுபான்மையினர் என முத்திரை இடப்பட்டு ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். மதம், மொழி, இனம், நாகரிகம், கலாச்சாரம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் என ஏதாவது ஒரு அம்சத்தில் மக்களுக்கிடையில் வித்தியாசங்கள், வேறுபாடுகள் இல்லாமல் இருக்காது; இருக்க முடியாது.

ஒரு நாட்டில் சிறுபான்மையினரே இல்லாது பூண்டோடு ஒழித்து விடுவோம் எனக் குரல் எழுப்புவது சிறுபிள்ளைத்தனம்; பைத்தியக்காரத்தனம்; மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள்தான் இப்படி சிந்திப்பார்கள். சூரிய மண்டலத்தில் இருந்து சந்திரனைப் பிரித்து வேறாக்கி விடுவேன் என யாராவது கூறினால் நாம் என்ன சொல்வோம்? பைத்தியக்காரத்தனமான பேச்சு என அலட்சியமாகப் பார்ப்போம். அதே போன்றுதான், இந்நாட்டில் சிறுபான்மையினரே இல்லாது ஒழித்துக் கட்டி விடுவோம் என்ற கூப்பாடும்.” என்று உரையாற்றினார்.

சென்னை துறைமுக அறக்கட்டளைக் குழு, சென்னை தொழிற்துறை அறக்கட்டளைக் குழு, தென்னிந்திய இரயில்வே அறிவுரைக் குழு, சென்னை தொழிற்துறை திட்டக்குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராக இருந்த ஐயா காயிதே மில்லத் அவர்கள் சிறந்த தொழிற்துறை நிர்வாகியும் ஆவார். 1947-ம் ஆண்டு ‘முஸ்லிம்’ என்ற நாளேடும், 1961-ம் ஆண்டு ‘உரிமைக்குரல்’ என்ற வார இதழும் தொடங்கினார்.

1945-ம் ஆண்டு சென்னை மாகாண தனித்தொகுதியில் போட்டியின்றி சட்டசபைக்கு தேர்வானார். 1946 முதல் 1955 வரை சென்னை மாகாண சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவாராக பங்காற்றிய பெருமையும் உண்டு. 1945-ல் தமிழ்நாடு முஸ்லிம் லீக் மாநிலத் தலைவராகவும், 1948-ல் இந்திய முஸ்லிம் லீக் கட்சித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1948 முதல் 1950 வரை அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக இயங்கினார். 1952-58-ல் மாநிலங்களவையிலும், 1962-67 காலத்திலும், 1967-70 காலத்திலும் 1971-ம் ஆண்டும் மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். திராவிட இயக்கங்களோடு நல்லுறவு வந்திருந்த ஐயா காயிதே மில்லத் அவர்கள் 1962-ம் ஆண்டு அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையிலான திமுகவோடு கூட்டணி வைத்து தேர்தலில் களம் கண்டார். மேலும் 1967 தேர்தலில் கூட்டணியை தொடர்ந்தார். 1967-68-ம் ஆண்டு சென்னை மாநகராட்சி மேயர் பதவி முஸ்லிம் லீக் கட்சிக்கே கொடுக்கப்பட்டது.

இந்திய ஒன்றியத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த தலைவாரானாலும் இந்திய ஒன்றியம் அதை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. விடுதலைக்குப்பின் இந்திய முசுலீம் லீக் தேவையா என்ற கேள்வியை இந்திய ஒன்றிய அதிகார மையங்கள் எழுப்பின. அன்றைய பாகிஸ்தான் நாட்டு வங்கியில் பிரிவினைக்கு முன் போடப்பட்ட இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் பணத்தை தர பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்தது. அப்பொழுது அரசியல் நிர்ணய சபையில் இருந்த தலைவர்கள் இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் மீது அவதூறுகள் கூறினர். அச்சமயம் டில்லியில் கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்த திரு ராஜாஜி, வைஸ்ராய் மாளிகைக்கு ஐயா காயிதே மில்லத்தை அழைத்து உரையாடிக் கொண்டிருக்கும் சாக்கில் பேச்சு வாக்கிலேயே “கராச்சியிலிருந்து முஸ்லிம் லீக்கிற்கு வர வேண்டிய பணத்தைப் பெறுவதற்கு எனது உதவிகள் ஏதேனும் தேவைப்படுமா?” என்றே கேட்டார். அதற்கு “முஸ்லிம் லீக்கிற்காக எந்த வெளிநாட்டில் இருந்தும் ஒரு நயா பைசா கூட வாங்கும் உத்தேசம் அக்கட்சிக்குக் கிடையாது” என்று ஐயா காயிதே மில்லத் பதிலளித்தார். ஆனாலும் இந்திய ஒன்றியம் தனது முயற்சிகளை விடவில்லை. 30-01-1948 அன்று ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதி கோட்சேவால் காந்தி அவர்கள் கொலை செய்யப்பட்ட மறுதினம் (01-02-1948) இந்திய முஸ்லிம் லீக்கின் ‘முஸ்லிம் நேஷனல் கார்டு’ என்ற தொண்டர் படை தடை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அப்பிரிவை ஐயா காயிதே மில்லத் அவர்கள் கலைத்தார்.

தன் குடும்பத்தைவிட நாட்டு நலனே முக்கியம் என்று வாழ்ந்தவர் ஐயா காயிதே மில்லத் அவர்கள். 22-08-1962 அன்று டெல்லியில் நடைபெற்ற அசோக் மேத்தா விசாரணைக் குழு முன் ‘வகுப்புவாதம்’ என்ற விடயத்தைப் பற்றி சாட்சியம் கொடுத்தார். அதற்கு ஒருமாதம் குறைவான நாட்களுக்கு முன்னரே (27-07-1962) அவரது மனைவியார் திருமதி ஹமீதா பீவி மறைவுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1962 சீன படையெடுப்பின் போது தன் மகனை இந்திய ராணுவத்தில் இணைந்து போர் புரிய அனுப்ப தயாரானார். தனது நாடாளுமன்ற சம்பளத்தில் ஒரு பகுதியை தொடர்ந்து போர் நிதியாக தந்தார். பாகிஸ்தான் பிரிவினையின் போது ஒன்றுபட்ட இந்தியாவை ஆதரித்தார். மேலும் இந்தியா மீது பாகிஸ்தான் படை எடுத்தபோது அதைக் கடுமையாக எதிர்த்து கண்டனக் குரல் எழுப்பினார். “தாயகம் மீது படை எடுத்து வருவோர் முஸ்லிம்களாயினும், முறியடித்து துரத்துவோம்” என்றும், “ இந்தியாவின் பகைவர்கள் எங்கள் பகைவர்கள். இந்தியாவை தாக்கும் நாட்டை எதிரியாகவே கருதுவோம்” என்றும் முழங்கினார்.

இவ்வாறு சிறுபான்மையினரின் உரிமைகளுக்காகவும், தமிழர்களின் உரிமைகளுக்காவும் தொடர்ந்து குரல் கொடுத்தது மட்டுமின்றி, இசுலாமியர்கள் இந்திய ஒன்றியத்தின் குடிமக்கள் என்பதை வலியுறுத்திய கண்ணியமிக்கத் தலைவர் ஐயா காயிதே மில்லத் அவர்களின் 50 வது நினைவுநாளில் மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply