பெருங்காமநல்லூர் படுகொலை நினைவுநாள் – 3.4.1920

பெருங்காமநல்லூர் படுகொலை நினைவுநாள் – 3.4.1920

“ஆடு மாடுகளைப் போல் போலீசில் கட்டுண்டு அடிமையாக்கப் பார்க்கின்றனர் வெள்ளையர். சட்டத்திற்குக் கட்டுப்பட்டு இன்று நாம் பதிவு செய்தோமேயானால் மேற்கொண்டு நம் இனத்தார் எல்லோரையும் பதிவு செய்து விடுவார்கள். முதலில் நாம் பணிந்து மற்றவர்களும் பணிய வேண்டியதற்கு நாம் முன் மாதிரியாகிவிடக் கூடாது. ரேகைப் பதிவுக்கு ஒத்துக் கொள்ளக் கூடாது”. – ரேகை எதிர்ப்புக் கமிட்டி தீர்மானம் (மார்ச், 1920)

இந்தகைய ஒரு தீர்மானத்தை போடும் அளவிற்கு அடக்குமுறையான சட்டமொன்றை ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசு இந்தியா முழுவதும் தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்கள் மீது செலுத்தியது. அச்சட்டம் குற்ற பரம்பரை சட்டம் (Criminal Tribes Act, 1871) என்றும், ரேகைச்சட்டம் என்றும் அழைக்கப்பட்டது.

அச்சட்டத்தின் படி தேர்ந்தெடுக்கபட்ட ஒரு சில சமூகத்தினரின் முன்னோர்கள் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் என்று அடையாளப்படுத்தி, அவர்களின் வாரிசுகளும் குற்றவாளிகளே என்று முத்திரை குத்தியது. இவ்வாறு வகைப்படுத்தபட்டவர்கள் இரவு நேரம் வந்ததும் தங்கள் வீட்டில் தங்கி இருக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஊரின் மத்தியில் அன்றைய ஆங்கிலேய அரசின் காவல்துறை வளாகமாக கருதப்பட்ட ‘சாவடி’ என்ற இடத்தில் வந்து தன் வருகையை பதிவிடவேண்டும் என்றும், ஒவ்வொரு இரவையும் அங்கேயே கழிக்க வேண்டும் என்றும் அடக்குமுறையை ஏவியது. அப்படி இரவு வந்து தங்கியதற்கு சான்றாக பதிவேட்டில் ‘கைரேகையை’ பதிவிடும்படி வலியுறுத்தப்பட்டதால் இது ‘ரேகைச்சட்டம்’ என்று அழைக்கப்பட்டது.

இச்சட்டம் வயது வரம்பு பாராமல் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரின் மீதும் செலுத்தப்பட்டது. இரவு வெளியூருக்கு செல்ல வேண்டும் என்றாலோ, வேறு காரணங்களுக்காக இரவு வர இயலவில்லை என்றாலோ முன்னனுமதி கேட்டு ‘அனுமதி சீட்டை’ பெறவேண்டும் என்றும் அப்படி பெறாமல் இரவு சாவடிக்கு வராமல் இருந்தால் அபராதம் முதல் பல ஆண்டு கடும் சிறை தண்டனை வரை தரப்பட்டது.

உண்மையில் இச்சட்டம் ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக போராடும் வல்லமை கொண்ட தேசிய இனங்களை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட சட்டமாக்கும். குற்ற பரம்பரை என்று பட்டியலிடப்பட்ட ஒருவர் ஏதேனும் சிறு குற்றத்தில் ஈடுபட்டால் கூட அவருக்கு அதே குற்றத்தில் ஈடுபட்ட மற்றவர்களை விட அதீத தண்டனை விதிக்கப்படும் அவலம் ஏற்பட்டது.

எடுத்துக்காட்டாக ஒரு வழக்கை கூறலாம். ஒரு சிறு திருட்டு குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கபட்டனர். அதில் ஒருவர் விடுதலை செய்யப்பட, மற்றொருவருக்கு 6 மாதக் சிறைமட்டுமே கிடைத்தது. மூன்றாம் நபருக்கோ ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார். காரணம் அவர் ‘குற்றப்பரம்பரை’ என்று பட்டியல் படுத்தப்பதிருந்தார்.

குற்றம் செய்தால் மட்டுமல்லாமல், குற்றம் செய்யக்கூடும் என்ற ஐயத்தில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்பட்டது. அன்றைய மதிப்பில் இது அரை கிலோ தங்கத்தை விட (66.5 பவுன்) அதிக தொகையாகும். அவர் செய்த குற்றம் ஏரிக்கரையில் ஒரு கத்தரிக்கோலோடு நின்று கொண்டிருந்ததுதான்.

இத்தகைய கொடூர கருப்புச்சட்டத்தை எதிர்த்துதான் மதுரை மாவட்டம், திருமங்கலம், உசிலம்பட்டி பகுதியில் உள்ள பெருங்காமநல்லூர், காளப்பன் பட்டி, குமரன் பட்டி, நரியம் பட்டி போன்ற ஊர்களில் தமிழர்கள் போராடத்தொடங்கினார். அப்போராட்டமே வரலாற்றில் மறக்கமுடியாத பெருங்காமநல்லூர் படுகொலை சம்பவத்திற்கு இட்டுச்சென்றது.

1920, ஏப்ரல் 3 ம் நாள், ஆங்கிலேய அரசின் காவல்துறை பெருங்காமலநல்லூர் கிராமத்தை முற்றுகையிட்டது. காவல்துறை கண்காணிப்பாளர் ராஜுப்பிள்ளை, காவல்துறை படையை வழிநடத்திய ஜார்ஜண்டு, கீட்ஸ், ஜமேதார் சீதா ராம்தாஸ் ஆகியோர் தலைமையில் வந்த ஆயுதமேந்திய காவல்துறை எதிர்ப்பு காட்டியவர்களை சுட்டு வீழ்த்தியது. அதில் காயம்பட்டவர்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவிய மாயக்காள் என்ற ஈகியர் துப்பாக்கி முனையில் இருக்கும் ‘பயனேட்’ என்னும் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து மேலும் 16 பேர் துப்பாக்கியால் சுட்டும், ‘பயனேட்’ என்ற கத்தியால் குத்தியும் படுகொலை செய்யப்பட்டனர்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து ஓராண்டு கூட முடிவடையாத தருணத்தில் நடைபெற்ற இப்படுகொலை சம்பவத்தினை பற்றிய விசாரணை வேண்டும் என்று முயற்சிகள் முன்னெடுக்கபட்டன. வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப் என்பவர் முன்னெடுப்பில் வழக்கும் தொடக்கப்பட்டது. ஆனால் வழக்கின் தீர்ப்போ ஆங்கிலேய காவல்துறையின் படுகொலையை அங்கீகரித்து வந்தது. படுகொலை செய்தவர்களுக்கு பரிசுத்தொகைகளும், பதவி உயர்வுகளும் தரப்பட்டன. போராடிய மக்களில் 32 பேருக்கு தண்டனை வழக்கப்பட்டது.

பெருங்காமநல்லூர் படுகொலை சம்பவம் ஒரு வரலாற்று நினைவுப் புள்ளியாகும். அதிகார வர்க்கத்தின் இறுதி இலக்கு அரச பயங்கரவாதமாகவும், படுகொலையாகவும் இருக்கும் என்பதையும், அவர்களின் நீதிமன்றங்களும் அச்செயலுக்கு பக்கபலமாகவே நிற்கும் என்பதை பெருங்கமாநல்லூர் முதல் கீழ்வெண்மணி வரையிலான வரலாற்றுப் பக்கங்கள் நமக்கு எடுத்துரைக்கும். இப்போராட்டங்கள் வெறும் உணர்ச்சிப் போராட்டங்கள் அல்ல. அதிகாரம் எந்த வடிவத்தில் நம் மீது திணிக்கப்பட்டாலும், அங்கே ஒரு கிளர்ச்சி உருவாகும் என்ற உண்மையை உணர்த்தும் போராட்டங்களாக்கும்.

ஆங்கிலேய அரசின் கருப்புச்சட்டமான ‘குற்றப் பரம்பரை சட்டத்திற்கு’ சற்றும் குறையாதவையே இன்றைய கருப்புச்சட்டங்களான ‘குண்டர் சட்டம்’, ‘ஊபா (UAPA) சட்டம்’ மற்றும் ‘தேசிய பாதுகாப்பு சட்டம் (NSA)’ போன்றவை. குற்றப் பரம்பரை சட்டத்தைப் போலவே இச்சட்டங்களிலும் குற்றம் சாட்டப்பட்டவரே தன்னை குற்றமற்றவர் என்று நிரூபிக்கவேண்டும் என்ற கொடிய நிலை உள்ளது. அதன் அடிப்படையிலேயே அத்தகைய சட்டங்களை தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்படுகிறது. இல்லையென்றால் வரலாறு எங்கிலும் பெருங்காமநல்லூர்கள் உருவாவதை நம்மால் தடுக்க முடியாது.

ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறையை எதிர்த்தும், குற்றப்பரம்பரை கைரேகைச் சட்டத்தை எதிர்த்தும் போராடி உயிர் ஈகம் செய்த 17 தமிழர்களுக்கும் மே பதினேழு இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010, 9444327010

Leave a Reply