இளநிலை பட்டப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது! அறிவிப்பை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்!

இளநிலை பட்டப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது! அறிவிப்பை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! – மே பதினேழு இயக்கம்

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பொது நுழைவுத் தேர்வு (Common University Entrance Test – CUET) அடிப்படையில் நடைபெறும் என்று பல்கலைக்கழக மானியக் குழு (UGC)அறிவித்துள்ளது. நீட் நுழைவுத் தேர்வு போன்றே ஏழை, எளிய, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்கள் பட்டப்படிப்பு மேற்கொள்ள இந்த CUET தேர்வு தடையாக இருக்கும். கல்வியில் சமூக நீதிக்கு எதிரான திட்டங்களை தொடர்ந்து திணிக்க முயலும் ஒன்றிய பாஜக அரசை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது,.

மார்ச் 21 , 2022 அன்று UGC வெளியிட்டுள்ள அறிவிப்பில், UGC நிதியில் செயல்படும் 45 மத்திய பல்கலைக்கழகங்களில் 2022-23 கல்வியாண்டு முதல் CUET தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு CUET நுழைவுத் தேர்வு முறையை பல்கலைக்கழகங்கள் கடைபிடிக்கலாம் என்றும், பிற தனியார், அரசு கல்லூரிகளும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் CUET நுழைவுத் தேர்வை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை மூலம் தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படும் என்றும் ஏப்ரல் முதல் வாரம் அதற்கான விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

பொது நுழைவுத்தேர்வு என்பது எவ்வளவு மோசமானது என்று நீட் தேர்வு இன்று அம்பலப்படுத்தியுள்ளது. அதே போன்று கலை அறிவியல் படிப்புகளுக்கும் கூட பொது நுழைவுத் தேர்வு என்பது, சில ஆண்டுகளையும், இலட்சங்களையும் செலவு செய்து பயிற்சி மேற்கொள்ளக் கூடிய உயர்சாதி பணக்காரர்கள் மட்டும் பெருமளவில் பட்டம் பெறுவதற்கு மட்டும் வழிவகுக்கும். இடஒதுக்கீட்டை சீர்குலைக்கும் வகையில் தகுதியை முதன்மைப்படுத்துவது சமூகநீதிக்கு எதிரானது. இதனால் ஏழை, எளிய, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்.

மேலும், இத்தேர்வு முறையினால் 12-ம் வகுப்பு மதிப்பெண் புறந்தள்ளப்படுவதால் 12-ம் வகுப்பு படிப்பதற்கான தேவையையே கேள்விக்குறியாக்குகிறது. பொதுப்பட்டியலில் இருக்கும் பள்ளிக்கல்வி முறையை மாற்றும் அதிகாரத்தை ஒன்றிய அரசு ஏதேச்சதிகாரத்தோடு பயன்படுத்தியுள்ளது. மேலும், ஒன்றிய அரசு அலுவலர்களின் குழந்தைகள் முன்னேற்றத்தை நோக்கமாக கொண்ட சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுக்கான வினாக்கள் கேட்கப்படும் என்கிறது. எனில், அனைத்து சமூக மாணவர்களின் பொது முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்ட மாநிலப் பாடத்திட்டத்தின் கீழான கல்வி முறையின் எதிர்காலம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.

நவீன குலக்கல்வி முறையான புதிய கல்விக் கொள்கையை ஏற்கனவே ஒன்றிய அரசு திணித்து வரும் வேளையில், சமூகநீதியை மேலும் சீரழிக்கும் மற்றொரு முயற்சி தான் CUET தேர்வு. பட்டப்படிப்பில் இணைவதற்கான விகிதத்தை, குறிப்பாக பெண்கள் பட்டப்படிப்பை மேற்கொள்வதை அதிகரிக்கும் வகையிலான திட்டங்களை தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும் வேளையில், பட்டப்படிப்பு மேற்கொள்வதற்கான தகுதியை ஒன்றிய அரசு பரிசோதிக்க முடிவு செய்துள்ளது பட்டப்படிப்பு படிப்பதற்கான ஆர்வத்தை மட்டுப்படுத்தும். குறிப்பாக, இந்தியாவில் உயற்படிப்பில் சேரும் விகிதத்தில் (GER) முன்னேறிய நாடுகளுக்கு இணையாக திகழும் தமிழ்நாடு கடுமையான பாதிப்பை சந்திக்கும்.

நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் என்பதே சமூகநீதி. NEET, CUET உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளும் உடனடியாக இரத்து செய்யப்பட வேண்டும் என்றும், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைகள் நடத்தப்பட வேண்டுமென என்றும், அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. பள்ளிக் கல்வியிலும், உயற்கல்வியிலும் ஒன்றிய அரசு மனுதர்ம சாத்திர முறையை புகுத்துவதை நிறுத்த வேண்டும். கல்வி என்பது மாநில உரிமை. கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றுவதே இப்பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வாக அமையும்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply