திராவிட இயக்கத்தலைவரும், பெரியாரின் கொள்கை வாரிசுமான அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களின் நினைவுநாள் – 16.3.1978

திராவிட இயக்கத்தலைவரும், பெரியாரின் கொள்கை வாரிசுமான அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களின் நினைவுநாள் – 16.3.1978

ஒவ்வொரு சுயமரியாதை பிரச்சார மேடைகளிலும் பெரியார் தன் சுட்டெரிக்கும் சொற்களால் பார்ப்பணியத்தை எரித்துக்கொண்டிருக்கும் அதேவேளையில், அம்மேடை அருகே பெரியாரின் பேச்சுகளையும், எழுத்துக்களையும் புத்தக வடிவிலாக்கி ஒவ்வொரு பெரியாரிய தொண்டரிடமும் கொண்டு சேர்க்கும் பெரும் பணியை சத்தமில்லாமல் ஒருவர் செய்துகொண்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல, பெரியார் வாழும் வரை அவரையும், மறைவுக்குப்பின் திராவிடர் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தையும் பாதுகாத்த திராவிட இயக்கத்தலைவரும், பெரியாரின் கொள்கை வாரிசும், பெரியாருக்குப் பின்னால் திராவிடர் கழகத்தின் தலைவாராகவும் விளங்கிய அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களே.

‘தன்னுடைய நீண்ட கால சமூகத் தொண்டுக்கு தன் உடல்நிலை ஒத்துழைத்ததே அன்னை மணியம்மையார் அவர்களின் தன்னலமற்ற தொண்டால்தான்’ என்று தந்தை பெரியாரே பலமுறை கூறியது நினைவுக் கூறத்தக்கது. 1943 ம் ஆண்டு தனது 26 வயதில் பெரியாரிடம் தொண்டராகவும், உதவியாளராகவும் வந்து சேர்ந்த அன்னை மணியம்மையார் அவர்கள் பெரியாரின் இறுதி மூச்சுவரை அவரை விட்டு ஒரு கணமும் அகலாதிருந்தார்.

அன்னை மணியம்மையார் வெறும் உதவியாளர் அல்லர். தந்தை பெரியாரின் வழியில் பகுத்தறிவு பயணம் மேற்கொண்ட பெற்றோர்களினால் வளர்க்கப்பட்டு, சுயமரியாதை மற்றும் திராவிட சித்தனையில் திளைத்தவர். இந்து மத புரட்டுகளை பற்றி ‘இராமயணமும் கந்தபுராணமும் ஒன்றே’ என்று ஒப்பீட்டு ஆய்வை எழுதும் வன்மை கொண்டவர். ‘சீதையை பற்றிய நடுநிலை ஆராய்ச்சி’ என்று குடியரசில் எழுதியவர்.

அவருடைய ‘பிறசமயமும் நம் (இந்து) சமயமும் (12 வருடத்துக்குமுன் இந்துப்பெண் எழுதியது)’ என்ற கட்டுரையில், “இந்து மதம் தவிர மற்ற மதங்கள் எல்லாம் வேறு மதங்களில் இருந்து வருகின்றவர்களையெல்லாம் தங்களின் மதங்களில் சேர்த்துக் கொள்ளுவதும் நாளுக்கு நாள் தங்கள் மதங்களை விர்த்தி செய்வதும் தங்கள் தங்கள் மதங்களில் உள்ள மக்கள் எல்லோரையும் சமமாகக் கருதி ஒற்றுமைபடச் செய்வதுமான முயற்சியில் எல்லோருக்கும் சமமான கல்வியும், வாழ்க்கையில் சரி சுதந்திரமும் அளிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் இந்து மதம் என்பதில் மாத்திரம் மனிதனை மனிதன் பிரித்துக் காட்டி கீழ்-மேல் உயர்வு தாழ்வு நிலையை உண்டாக்கி வேறு மதத்தில் இருந்து வரும் எவனையும் சேர்க்காமலடித்து இந்து மதத்திலிருந்தும் அநேகரை வேறு மதத்திற்குப் போகும்படி நிர்ப்பந்தப்படுத்தி ஜன சமூகத்தை வருஷத்திற்கு வருஷம் குறைத்துக் கொண்டே வரப்படுகிறது.

மதக் கொள்கையைப் பற்றிப் பேசும்போது மாத்திரம் “இந்து மதம், அன்பு மதம், சமத்துவ மதம், சமரச சன்மார்க்க மதம்” என்று சொல்லுவது, நடக்கும் போது மாத்திரம் சமரசமில்லை, சன்மார்க்கமில்லை, அன்பு இல்லை, இரக்கமில்லை என்பதுமாய் இருக்கிறது.” என்று எழுதினார்.

அதேநேரம் ராஜாஜியின் இந்தித் திணிப்பை எதிர்த்து 1948 ம் ஆண்டு கும்பகோணம் பகுதியில் 144 தடை உத்தரவை மீறி போராட்டம் செய்ததற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது நீதிபதி “உங்கள் மதம் என்ன?” என்று கேட்டதற்கு “எனக்கு எந்த மதமும் கிடையாது” என்றும், “உங்கள் சாதி என்ன?” என்று கேட்டதற்கு “திராவிட சாதி” என்று கூறி தன் கொள்கைப் பிடிப்பை வெளிப்படுத்தினார். அந்த வழக்கில் 2 மாதம் சிறைதண்டனையும் பெற்றார்.

அதுமட்டுமல்லாமல் 1948-ம் ஆண்டு சட்டவிரோதமாக கூடியதாக பெரியார் மற்றும் அண்ணாவுடன் கைது செய்யப்பட்டார். அப்பொழுது இயங்கிவந்த பார்ப்பன பத்திரிக்கையான சுதேசமித்திரன் “ஒரு ஸ்த்ரீ கைதானாள்” என்று இழிவுபடுத்தும் விதமாக செய்தி வெளியிட்டது.

மார்ச் 1949-ல் சென்னை அஞ்சலகம் முன் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டார். செப்டம்பர் 1949-ல் வேலூர் சிறையில் இருந்து அன்னை மணியம்மையார் அவர்கள் விடுதலை அடைந்த போது பெரியார் தாமே நேரில் சிறைவாசலுக்குச் சென்று வரவேற்ற போது அன்னை மணியம்மையார் தொண்டின் சிறப்பு அனைவருக்கும் புரிந்தது.

1957-ம் வருடம் வரலாற்று சிறப்பு மிக்க பெரியார் மீதான ‘நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்’ 2-வது எதிரியாக சேர்க்கப்பட்டவர் அன்னை மணியம்மையார் ஆவார். அதே ஆண்டு ‘பிராமனாள் கபே” என்ற பெயரை நீக்க கோரி போராடியாதற்காக 3 வாரம் சிறை தண்டனை அனுபவித்தார்.

1958-ம் வருடம் விடுதலை இதழில், “இளந்தமிழா புறப்படு போருக்கு” என்ற கட்டுரை எழுதியதற்காக 1 மாத சிறையும், 100 ரூபாய் அபராதமும் தண்டனையாக தரப்பட்டதுமின்றி, அவருடைய 4000 ரூபாய் மதிப்பு கொண்ட காரும் அன்றைய காங்கிரஸ் அரசால் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரியார் மறைவுக்கு பின் 1974-ம் ஆண்டு ‘இராவண லீலா’ நடத்தியதற்காக அன்னை மணியம்மையார் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

1976-ம் ஆண்டு நெருக்கடி காலத்தில் பெரியாரின் பிறந்தநாளை கொண்டாட முயன்றதற்காக அன்னை மணியம்மையார் கைது செய்யப்பட்டார்.

இவை ஒருபுறம் என்றால், தந்தை பெரியாரின் நம்பிக்கைக்குறிய தொண்டராக விளங்கியவர் அன்னை மணியம்மையார் ஆவார். 1946-க்கு பின் திராவிடர் கழகத்தின் மாநில (வட ஆற்காடு மாவட்டம்) நிர்வாக குழுவில் ஒரு உறுப்பினராக பெரியார் அன்னை மணியம்மையார் அவர்களை நியமித்தார். அதோடு மட்டுமல்லாமல் விடுதலை ஏட்டின் ‘அச்சிடுவோர்’, ‘ஆசிரியர்’, மற்றும் ‘வெளியிடுவோர்’ என்ற பொறுப்புகளும் தரப்பட்டன.

1949-ம் வருடம் பெரியார்-மணியம்மையார் திருமண ஒப்பந்தம் நடைபெற்ற பின்பு ‘பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் (Periyar Self-Respect Propaganda Institution) என்ற அமைப்பு பெரியாரால் 1952-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. அதில் ஆயுட்கால உறுப்பினராக இருந்தவர்களில் அன்னை மணியம்மையார் அவர்களும் ஒருவர்.

1970-ம் ஆண்டு மும்பையில் தமிழர்கள் சிவசேனை அமைப்பால் தாக்கப்பட்டபோது சிவசேனை எதிர்ப்பு மாநாடு நடத்த முடிவெடுத்த பெரியார் அதற்கென ‘சிவசேனை எதிர்ப்பு குழு’ ஒன்றை அமைத்தார். அதில் முதல் பெயராக இடம் பெற்றது அன்னை மணியம்மையார் அவர்களின் பெயரே.

பெரியாரின் மறைவு கழக தொண்டர்களை மனவலியில் ஆழ்த்திய கணத்தில் திராவிடர் கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் அன்னை மணியம்மையார். பெரியாரின் மறைவுக்குப்பின் திராவிடர் கழகம் மறைந்து விடும் என்று மனப்பால் குடித்த பார்ப்பன கும்பலுக்கு சவால்விடும் படியாக “அய்யா அவர்கள் இதுவரை செய்து வந்த காரியங்கள், பிரச்சாரங்கள் இவற்றைச் சந்தேகத்திற்கு இடமின்றிச் செய்யக் காத்திருக்கிறேன். பெரியாராவது தேவலாம். அவர் தொண்டர்கள் நம்மை நிம்மதியாக வாழவிடமாட்டார்கள் போலிருக்கிறதே என்று எண்ணும்படி செய்ய வேண்டும். அவர்கள் பெருந் தலைவலியாயிருக்கிறார்கள் என்று கருதும்படி செய்ய வேண்டும். நம்மை ஒழிக்க முற்பட்டவர்கள் தோல்வி கண்டார்கள், நாம் வெற்றி கண்டோம் என்ற நிலை உருவாகும் வகையில் நம் காரியங்கள் அமைய வேண்டும்.” என்று முழங்கினார்.

தன் இறுதி காலத்தில் பல சோதனைகளை தாங்கி, கழகத்தை காத்த திராவிடத் தலைவராக மிளிர்ந்து நின்றார். பெரியாரின் வழியை பின்பற்றி தனக்கு பெரியார் விட்டு சென்ற சொத்துக்களையும் சேர்த்து ‘பெரியார் மணியம்மை கல்வி அறக்கட்டளை’ என்ற நிறுவனத்தை அமைத்தார். பெரியாரின் எழுத்துக்கள் காலத்தால் அழியாமல் இருக்க பெரியார் நூலகம் அமைத்தார்.

பெரியாருக்கு ஒரு நோக்கம் இருந்தது. அது அனைத்து விதமாக ஆதிக்கத்தையும் உடைத்தெறிவது. ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணால் தனித்து இயங்க முடியும்; தலைமை ஏற்க முடியும்; எதிர்த்து நிற்க முடியும் என்று முழங்கிய பெரியாரின் கூற்றுகளை உண்மையாக்கி பெரியாரின் சுயமரியாதை சுடராக விளங்கிய அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவுநாளில் மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply