பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் பிறந்தநாளில் மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது – 10.3.1933

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் பிறந்தநாளில் மே பதினேழு இயக்கம் புகழ் வணக்கம் செலுத்துகிறது – 10.3.1933

வேதியன் உயிரும், அன்பு
வேளாளன் உயிரும் வேறென்
றோதிய நூல்கள் மாய்ந்தே
உறுதமிழ் நாட்டில் எங்கும்
சாதியின் வேர றுத்துச்
‘சரி நிகர் மாந்தர்’ என்னும்
சேதியைக் கொளல் மூன் றென்று
நிகழ்த்துக வானம் பாடி!

சாதியெனும் நச்சு மரத்தை வெட்டி வீழ்த்த தமிழ்க் கூறும் நல்லுலக்கில் தன்னலமின்றி உழைத்தவர்களில் முகாமையானவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவர். தமிழ்நாட்டு விடுதலை, தமிழீழ விடுதலை, தமிழ் மொழி விடுதலை ஆகியவற்றில் சமரசமின்றி முழங்கிய தமிழ் மகனார் ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் என்றால் அது மிகையில்லை.

தமிழ்த்தேசியக் கருத்துக்களை தான் வாழ்நாள் முழுதும் பேசிய பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் மொழிஞாயிறு தேவநேய பாவாணர் மற்றும் மறைமலை அடிகளார் மீது பற்று கொண்டவர். அதனடிப்படையில் தனித்தமிழில் பேசியும் எழுதியும் வந்தார். தமிழ்மொழிக்கான முன்னுரிமையும், தனித்துவமும் மறுக்கப்பட்டு வருவதை கடுமையாக கண்டித்து எதிர்த்தார்.

ஆரிய இந்திய கட்டமைப்பில் இருந்து தமிழ்நாடு விடுதலை பெறவேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தினார். அதிலும் உரிமைதனை போராடியேப் பெறவேண்டும் பிச்சை எடுத்தல் கூடாது என்று வலியுறுத்தும் வகையில்

பல்லை இளித்தா விடுதலை பெறுவது?
சொல்லை அடுக்கியா உரிமை சுவைப்பது?
கரையில் நின்றா கடலைக் கடப்பது?
விரைக தமிழனே விடுதலை நோக்கி!
பொங்கும் உணர்வால் விடுதலை முழக்கம்
எங்கும் எழுந்திடச் செய்க! தமிழனே!

என்று எக்காளமிட்டு பாடினார்.

தமிழீழத்தின் விடுதலையின் மீதும், தமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கத்தின் மீதும் பெரும் பத்து கொண்டவராக இருந்தவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள். இதனை தான் பாடல்கள் மூலமும், எழுத்துக்கள் மூலமும், அவர் நடத்தி வந்த தென்மொழி, தமிழ் நிலம் போன்ற பத்திரைக்கை மூலமும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தினார்.

ஈழத்தமிழர்கள் படும் துயரை மன வலியோடு வெளிப்படுத்திய பாவலரேறு பெருஞ்சித்திரனார்

ஈழத் தமிழ்க்குலம் சிங்கள ரால்உறும்
இடர்கள், இழிவுகள் நினைந்திடுவோம்! – அவர்
வாழத் துடித்தும் வறுமைப் பட்டும்
வடிக்கும் நீரில் நனைந்திடுவோம்!

என்று பேசினார். மேலும்,

நெஞ்சை உருக்குதடா! – நம்
நினைவைக் கருக்குதடா! – ஒரு
பஞ்சைப் பழுதென, ஈழ நிலத்தினில்
பைந்தமிழ்த் தாயினம்
அஞ்சி வாழுநிலை

என்று தன் வலியை வெளிப்படுத்தினார். தமிழீழ விடுதலைக்கு விடுதலைப்புலிகளின் தலைமையில் அணித் திரளுமாறு அறைக்கூவலும் விடுத்தார். 1987 ம் ஆண்டு தமிழ் நிலம் பத்திரிக்கையில் தலையங்கமாக “தன்மதிப்பும், தன்மானமும் பாராமல் இனநலம் கருதித் தமிழீழ போராளிகள் பிரபாகரனுடன் ஒன்றுபட்டு, அவர் தலைமையில் இயங்குமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.” என்று கேட்டுக்கொண்டார்.

அதுமட்டும் அல்லாமல், 1984 ம் ஆண்டு மே 5 ம் நாள், புலவர் கலியபெருமாள் அவர்களின் தலைமையில் நடைபெற்றதும், ஐயா ஆனைமுத்து, ஐயா பெருஞ்சித்திரனார் ஆகியோர் பங்கெடுக்க ‘தமிழீழ விடுதலை மாநாடு’ நடைபெற்றது. அதை தான் ‘தமிழ் நிலம்’ பத்திரிக்கையின் முதல் பக்கத்தில் பிரசுரித்தார்.

இந்தியாவின் தமிழீழ எதிர்ப்பு பார்ப்பணிய தன்மைக் கொண்டது என்பதை தான் எழுத்துக்களால் வெளிப்படுத்தினார். 1988 ம் ஆண்டு தமிழ் நிலம் இதழில் கீழ்கண்டவாறு பதிவிட்டார்.

“தமிழர்க்கு வாழ்வுரிமையும், தனிநாடும் கிடைத்துவிடக் கூடாதென்பதே இந்தியாவின் கொள்கை”

“தீட்சித் இதை தெளிவுபடுத்தினார். அதனால்தான் தனிஈழக் கோரிக்கையை இந்தியா ஆதரிக்கவில்லை”

“ஆனால் தமிழீழத்தை மீட்டெடுப்பதே புலிகளே உயிர்க் கொள்கை”

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் ஆற்றிய தமிழ்த்தொண்டும், தமிழர்த் தொண்டும் அளப்பரியது. பெரியார் மீது பெரும் மதிப்பு கொண்டவரான பாவலரேறு பெருஞ்சித்திரனார் “தொண்டு செய்து பழுத்த பழம்” என்றார். 1958 சிறை மீண்ட போது,

“கூட்டைத் திறந்ததும் கடுங்குரல் எழுப்பிக்
குறுநடை போட்டதே அரிமா! – சாதிக்
கேட்டை ஒழித்திட, சிறுநரிக் கூட்டம்
கிடுகிடுத் தொடுங்கின எங்கும்!”

என்று வாழ்த்தி வரவேற்றார்.

இங்கனம் தமிழ்த்தேசிய அரசியல் உணர்வை தமிழக் குழுக்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் பரப்பியவரான பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் பிறந்தநாளில் மே பதினேழு இயக்கம் புகழ்வணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply