பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கட்சியின் ஒற்றுமை அணிவகுப்பு பேரணிக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து தோழர்களை கைது செய்த காவல்துறையின் ஜனநாயக விரோத செயலை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) கட்சியின் சார்பாக கடந்த மார்ச் 6 அன்று, தாம்பரம் மற்றும் சேலம் நகரங்களில் மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற தலைப்பில் ஒற்றுமை அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முந்தைய நாள் வரை அனுமதி வழங்குவதாக காவல்துறை கூறிய நிலையில், பேரணிக்கான ஏற்பாடுகளை பிஎஃப்ஐ கட்சி செய்திருந்தது. ஆனால் பேரணி துவங்கவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் பேரணிக்கான அனுமதியை மறுப்பதாக கூறி, பேரணி செல்ல முயன்ற அனைவரையும் காவல்துறை கைது செய்தது.

கொரானா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதி அளித்து பாதுகாப்பு அளிக்க வேண்டியது காவல்துறையின் கடமையாகும். பேரணிகள் நடத்துவது வழக்கமாக நடைபெறும் ஓர் அரசியல் நிகழ்வாகும். அதுவும் ஜனநாயகத்தை ஊக்குவிக்கும் விதமாக மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற தலைப்பில் ஒற்றுமை அணிவகுப்பை நடத்த பிஎஃப்ஐ கட்சி முயன்றுள்ளது. அதனை காவல்துறை மறுத்துள்ளது ஜனநாயக விரோத செயலாகும்.

அதேவேளை தாம்பரம் இந்து மிஷன் மருத்துவமனையின் இந்திய மருத்துவர்கள் சங்கம் (ஐஎம்ஏ) சார்பாக ஆர்எஸ்எஸ் தொடர்புடைய பேரணிக்கு அனுமதி அளித்ததோடு, தாம்பரம் ஆணையர் இரவி கொடியசைத்து துவக்கி வைத்தும் உள்ளார். இதே போல், இதற்கு முன்னரும் ஆர்எஸ்எஸ் பேரணிகளுக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. கலவரத்தை உண்டுபண்ணும் நோக்கில், சமூகத்தில் பிளவை உண்டாக்கும் பேரணிகளுக்கு அனுமது அளிப்பதும், ஜனநாயக சக்திகளின் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பதும், காவல்துறையின் ஜனநாயக விரோத போக்கை காட்டுகிறது.

காவல்துறையின் இத்தகைய ஜனநாயக விரோத செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. சமூகநீதியை, மத நல்லிணக்கத்தை முன்னெடுத்து செல்லும் தமிழ்நாட்டில், காவல்துறையின் போக்கு அதற்கு எதிர்மறையாக அமைவது தமிழ்நாட்டை பின்னோக்கி தள்ளும். தமிழ்நாடு அரசு இதனை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்

98848641010

Leave a Reply