சிந்தனைச் சிற்பி தோழர் சிங்காரவேலர் அவர்களின் 75-வது நினைவுநாள் (11-02-1946)

சிந்தனைச் சிற்பி தோழர் சிங்காரவேலர் அவர்களின் 75-வது நினைவுநாள் (11-02-1946)

தென்னிந்திய மாகாணமாகிய சென்னை மாகாணத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் உருவாகக் காரணமாக இருந்தவரும், சென்னை மாகாணத்தில் முதல் உழைப்பாளர் தினத்தை கொண்டாடிய பெருமைக்குரியவருமான சிந்தனைச் சிற்பி தோழர் சிங்காரவேலர் அவர்களின் 75வது நினைவுநாள் இன்று.

அன்றைய ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக தொடங்கிய போராட்டமானது காலப்போக்கில் ஆங்கிலேய அரசிடம் அதிகாரம் பெற்று ஆட்சி அமைப்பதை மட்டும் நோக்கமாக கொண்டவர்கள் ஒரு பக்கமாகவும், அன்றைய இந்தியாவின் அதிகார மையமாக சாதிமத அமைப்புகளிடமிருந்து விடுதலைக் கோரி உழைக்கும் வர்க்கத்திற்காக போராடுகின்ற பகுத்தறிவாளர்கள் மற்றொரு பக்கமாகவும் பிரிந்து நின்ற காலம் தோழர் சிங்காரவேலர் அவர்கள் இயங்கிய காலமாகும்.

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற சாதியக் கட்டமைப்பையும், தொழிலாளி முதலாளி என்ற வர்க்க கட்டமைப்பையும் ஒருசேர எதிர்த்த பொதுவுடமை அரசியல்வாதி தோழர் சிங்காரவேலர் என்றால் மிகையாகாது. குறிப்பாக மத நிறுவனங்கள் மக்களிடம் மூடநம்பிக்கை வளர்ப்பதையும், அந்நிறுவனங்கள் சார்ந்தவர்கள் சுயலாபத்திற்காக நிறுவன சொத்துக்களை கொள்ளையடிப்பதையும் நன்கு புரிந்து கொண்ட தோழர் சிங்காரவேலர், 1925 ஆம் ஆண்டு கோயில் சொத்துக்கள் மத அறக்கட்டளைகள் ஆகியவற்றினை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய ‘இந்துமத பரிபாலன சட்டத்தை’ நீதிக்கட்சி முன்மொழிந்த பொழுது அதை பெரிதும் ஆதரித்தார். மேலும் மத பிற்போக்கு நிறுவனங்களான இந்து மகாசபை போன்ற நிறுவனங்களை ‘கொடிய பழக்க வழக்கங்களுக்கு ஆதரவு அளிக்கும் ஸ்தாபனங்கள்’ என்று சாடினார்.

இச்சட்டத்தை கொண்டு வந்த பொழுது இந்து மதத்திற்கு ஆபத்து வந்துவிட்டது என்று குரல் எழுப்பியவர்களைப் பார்த்து “இந்து மதத்திற்கு ஆபத்து வந்துவிட்டது என்பது சரியான காரணமாகாது. உடன்கட்டை ஏறுதல் என்னும் வழக்கம் ஒழிக்கப்பட்ட காலத்திலும் இந்தக் கூச்சல் எழுந்தது. விவாதா விவாக சட்டம் போன்ற சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட காலத்திலும் இத்தகைய குரல்கள் எழுந்தன. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சரியான நிர்வாகத்திற்கு உட்படுத்த கூடிய இந்த சட்டத்திற்கு விரோதமாக ஏன் கிளர்ச்சி செய்ய வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்

சேலம் ஜில்லா முதலாவது சுயமரியாதை மாநாட்டு தலைவராகத் தோழர் சிங்காரவேலர் அவர்கள் முன்நின்று நடத்தினார். அதில் தந்தை பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்தைப் பற்றி கூறும் பொழுது “உங்களுடைய சுயமரியாதை இயக்கம் இந்திய சமூக சீர்திருத்தங்கள் யாவையும் கொள்ளத்தக்க இயக்கம் என்றே எண்ணத்தகும். இந்த இயக்கத்தைப் போன்று எந்த ஒரு இயக்கமும் இவ்விதமாக நமது சமூக ஊழல்களை வேர்க்களைய ஒரே காலத்தில் எழுந்ததை அறியோம். உங்களுடைய இயக்கத்தை ‘One of the most Comprehensive Social Reformers Organ’ என்று கூறலாம்.” எனக் கூறினார். (குடிஅரசு- 1932)

உயர்சாதியினர் அதிகாரம் செலுத்திய அன்றைய காங்கிரஸ் அரசைப் பற்றி கூறும்பொழுது, “ராம ராஜ்ஜியம் முதல் இந்த நாட்டிலிருந்து வந்த நிலைமையை காப்பாற்றுவதற்காகவே நமது காங்கிரஸும் மிதவாதிகளும் நமது ராஜா கூறும் அதிகாரம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். கோயில் குளங்கள் மூட பக்தியை வளர்க்கவும் ஜாதி மத வேற்றுமைகள் தழைத்தோங்கவும் வறுமையும் அறியாமையும் நிலைத்து வளரவும் ஏற்பட்டதே காங்கிரஸும், பிரிட்டிஷ் அரசும், மற்ற தேச விசுவாசிகளும் அரசியல் கட்சிகளும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்று சாடினார். (குடிஅரசு – 1932)

இந்தியாவில் நிலவி வரும் சாதி வர்ண வர்க்க கட்டமைப்பின் உட்பொருளை மார்க்சிய கண்ணோட்டத்தில் அணுகிய தோழர் சிங்காரவேலர் ,“உழைப்பவனுக்கு உரியது உழைப்பின் பயன் என்பதுதான் சமதர்மத்தின் தர்மம்” (குடிஅரசு – 1933) என்று கூறியது மட்டுமல்லாமல் சாதி மத சமூக வேறுபாடுகளை பாதுகாக்கும் காங்கிரசின் சுயராஜ்ய கொள்கையை எதிர்த்து ‘சுயராஜ்யமா? சமதர்ம ராஜ்யமா?’ என்று கேள்வி எழுப்பினார்

மேலும் பொதுவுடைமை அரசு பற்றி கூறும் பொது “சமதர்ம ஆட்சியில் மகாராஜன் என்றும், ஏழை என்றும், முதலாளி என்றும், தொழிலாளி என்றும், உயர்ந்தவன் என்றும், தாழ்ந்தவன் என்றும் இல்லாமல் யாவரும் சரிநிகர் சமானமாக வாழப் போகிறார்கள். சோம்பேறிகளும், பிறர் உழைப்பால் ஜீவிப்போரும், பலரை மதங்களின் பெயராலும் கடவுளின் பெயராலும் மோட்ச நரகங்கள் பெயராலும் வஞ்சித்து தின்று கொழுத்து வாழ்ந்து வரும் சோம்பேறிகள் அற்றுப் போக போகிறார்கள்” என்று கூறினார்.

அதுமட்டுமல்லாமல் தனி உடமை சமூகத்தை அடியோடு மாற்ற வேண்டும் என்று விரும்பினார். வாக்களிக்கக் கூடிய வயது நிரம்பிய அனைவருக்கும் தேர்தலில் வாக்கு செலுத்தும் உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று கூறினார். நில உடைமையாளர்களின் நிலங்களில் உழைக்கும் தொழிலாளிகளுக்கு உற்பத்தியில் ஒரு குறிப்பிட்ட பகுதியை பங்காக கொடுக்க வேண்டும் என்று கேட்டார். கோவில் மற்றும் மத நிறுவனங்களின் சொத்துக்களை எடுத்து கல்வி சுகாதாரம் போன்ற பொது மக்கள் பணிக்கு செலவிட வேண்டும் என்று எழுதினார். சாதி மத அடையாளங்களை பொது பதிவேடுகளில் இருந்து நீக்கிவிட வேண்டும் என்றும், அத்தகைய அடையாளங்களை வைத்து இருக்கும் நபர்களுக்கு பொது வேலைகளில் ( அரசு சார்ந்த வேலைகள் மற்றும் ஒப்பந்தங்கள்) இடம் தரக்கூடாது என்று முழங்கினார்.

இவ்வாறு பொதுவுடமைக் கொள்கை மற்றும் சுயமரியாதைக் கொள்கை இரண்டையும் உள்ளடக்கிய அரசியல் கொள்கையை தந்து சென்ற தென்னிந்தியாவின் தவிர்க்கமுடியாத பொதுவுடமைவாதி தோழர் சிங்காரவேலர் அவர்களின் நினைவு நாளான இன்று சாதி மத வர்க்க வேறுபாடுகளைக் களைவோம் என்று உறுதி ஏற்று மே 17 இயக்கம் வீரவணக்கம் செலுத்துகிறது

மே பதினேழு இயக்கம்

9884864010

Leave a Reply