அறிஞர் அண்ணா அவர்கள் 53வது நினைவுநாள் – 03-02-1969

அறிஞர் அண்ணா அவர்கள் 53வது நினைவுநாள் – 03-02-1969

“மக்களின் சுக துக்கங்களோடு பிணைந்திருப்பது மாநில அரசுதானே தவிர மத்திய அரசு அல்ல”
(அறிஞர் அண்ணா பேச்சு – 1968. நூல்: அண்ணாவின் மாநில சுயாட்சி முழக்கம்)

தமிழ்நாட்டில் திராவிட கட்சியின் முதல் முதலமைச்சரும், பெரியாரின் தொண்டருமான அறிஞர் அண்ணாவின் வரிகள் இவை. பெரியார் முன்மொழிந்த பல்வேறு கருத்துகள் செயல் வடிவம் பெற அறிஞர் அண்ணாவின் ஆட்சி உறுதுணையாக இருந்தது.

தமிழ்நாட்டில் அன்றைய மக்கட் விரோத காங்கிரஸ் ஆட்சியை அகற்றி திராவிட ஆட்சியை மலரச் செய்த பெருமை அண்ணா அவர்களையே சாரும். ஆட்சிக்கு வந்த அடுத்த கணமே பெரியாருக்கு தனது ஆட்சியை சமர்ப்பித்தார். பெரியாரின் வழியில்தாம் தமது ஆட்சி நடக்கும் என்றும் உறுதிப்படுத்தினார்.

அதற்கேற்றார்போல் சுயமரியாதை திருமண சட்டம் உள்ளிட்ட பல பெரியாரின் கொள்கைகளை சட்டமாக்கினார். மேலும் ஈகியர் சங்கரலிங்கனாரின் கோரிக்கைபடி அன்றைய சென்னை மாகணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றினார்.

அறிஞர் அண்ணா அவர்களின் அரசியல் வரலாற்றில் மகுடமாய் அமைத்த கொள்கை ‘மாநில சுயாட்சி’ கொள்கையே ஆகும். இந்திய ஒன்றிய அரசு என்பதே மாநில அரசுகளின் வலிமையால்தான் இயங்குகிறது என்று தெளிவாக எடுத்துரைத்தார்.

“மத்திய அரசின் வலிவு என்பது மாநிலங்கள் ஒவ்வொன்றும் தனித்தனி வலிவையும் கூட்டியதால் ஏற்பட்ட மொத்த வலிவுதான் என்றால் வாதத்திற்கு ஏற்றது. அரசியலுக்கு நல்லது. காரியத்திற்கும் உகந்தது. ஆனால் மத்திய அரசுதான் எல்லா உரிமைகளையும், பலத்தையும் வைத்திருக்கும்; மாநிலங்கள் தத்தித் தத்தி நடக்கும் அதிகாரம்தான் வைத்திருக்கும் என்றால், அது எதற்கும் பொருத்தமுடையது அல்ல.”

அதுமட்டுமல்லாமல், அம்மாநில சுயாட்சிக்கு ஆபத்து வருமென்றால் அதை எதிர்த்து போராடுவதே தனது கடமை என்றும் முழங்கினார்.

“மத்திய அரசின் வலிவு அசாமிற்கு அச்சத்தை தர, தமிழ்நாடு தத்தளிக்க, கேரளத்திற்கு கலக்கம் தருவதற்காக தான் என்றால், நமது சுதந்திர சிந்தனையை சிறுகச்சிறுக அழித்து சிந்திக்கும் திறனை இல்லாமல் ஆக்குவதற்குதான் என்றால் நமது கூட்டு சக்தியின் மூலம் நம் ஒவ்வொருவருடைய அறிவையும் கொண்டு அந்த அக்ரம வழியை சிறுக சிறுக குறைப்பது தான் எங்கள் கடமையாக இருக்கும்.”

பெரியார் முன்னெடுத்த சாதி ஒழிப்பு மற்றும் சமூக நீதி கொள்கைகளை நீக்கமற கடைபிடித்த அண்ணா அவர்கள் இந்து மதத்தை கடுமையாக எதிர்த்தார். “இந்து என்றால், சனாதன தருமானுசாரி!” என்று சாடிய அண்ணா அவர்கள்

“நாம் யாருக்கும் மேலல்ல, யாரும் நமக்கு மேலோர் அல்ல. நாம் ஆள ஆட்கள் வேண்டாம், நம்மை ஆளவும் ஐயார்மார் வேண்டாம். நம்மிடையே தரகர் கூடாது, தரப்பை ஆகாது. சேரியும் கூடாது, அக்ரஹாரம் ஆகாது. யோக யாகப் புரட்டுகள், புரோகித பித்தலாட்டம், மனுக்கொடுமை வேண்டாம்.”
(நூல்: ஆரிய மாயை)

என்று கூறினார்.

மேலும், “இந்துக்கள் பெருந்தன்மையான, உதாரணமான நோக்கம் உடையவர்கள்” என்று சாஸ்திரியார் கூறுகிறார். இது உண்மை என்று சேரியை ஒருமுறை கண்ட எவரேனும் ஒப்புக்கொள்ள முடியுமா?” என்றும் கேள்வி கேட்டார்.

இன்றைய இந்துத்துவ பாசிச சக்திகளுக்கு முன்னோடியான இந்து மகா சபையினர் பற்றிய அண்ணா அவர்களின் பார்வை தெளிவாக இருந்தது.

“இந்து-முஸ்லிம் பிரச்சனையைப் பற்றிய பயங்கரமான பீதிகளை கிளப்பிவிட்டுத் திராவிடத்தில் உள்ளோரையும் ‘இந்துக்கள்’ என்று பாத்யதை கொண்டாடித் திராவிடரைத் துணைக்கு அழைப்பதுபோல் நடந்து ஆரியத்தை நிலைக்கச் செய்வதுதான் இங்குள்ள இந்து மகா சபையினர் உண்மையான கருத்து.”

இங்கனம் தமிழ்நாட்டில் திராவிட கருத்தியல் கொண்ட ஆட்சியை அமைத்தவரும், இந்துத்துவ கருத்தை மறுத்தவரும், மாநில சுயாட்சியின் முக்கியத்துவத்தை முன்மொழிந்தவருமான அறிஞர் அண்ணா அவர்களின் நினைவுநாளான இன்று அன்னாருக்கு புகழ்வணக்கம் செலுத்துகிறோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010 

Leave a Reply