தமிழ்நாடு அரசே! காந்தியை கொலையாளிகளை குறிப்பிட்டு உறுதிமொழி எடுப்பதை தடுத்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு!

தமிழ்நாடு அரசே! காந்தியை கொலையாளிகளை குறிப்பிட்டு உறுதிமொழி எடுப்பதை தடுத்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு! – மே பதினேழு இயக்கம்

தேசத் தந்தை உத்தமர் காந்தி இந்துத்துவ பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட நினைவு நாளான 30-01-2022 அன்று மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் கோவையில் இந்துத்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி. இராமகிருஷ்ணன் அவர்கள் காந்தியை கொன்ற இந்துத்துவ பயங்கரவாதி கோட்சே பெயரை குறிப்பிட்டு உறுதிமொழி வாசிக்கும் போது குறுக்கிட்டு தடுத்துள்ளது காவல்துறை. உறுதிமொழி ஏற்பு நிகழ்வை தடுக்க முயற்சித்த, இந்துத்துவ பயங்கரவாதி கோட்சே பெயரை சொல்லுவதை தடுத்த கோவை காவல்துறையினரை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

பல முற்போக்கு அமைப்புகள் இணைந்த கோவை மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக ஆண்டுதோறும் காந்தி நினைவு நாளில் பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி ஏற்பது வழக்கம். அதன்படி 30-01-2022 அன்று நிகழ்விற்கான அனுமதி கேட்ட போது, நகர்புற உள்ளாட்சித் தேர்தலை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்திடம் செல்ல காவல்துறையினர் கூறியுள்ளனர். காந்தி நினைவு நாள் விதிவிலக்கு என தேர்தல் ஆணையம் அனுமதி தேவையில்லை என்று கூறியுள்ளது. இந்நிலையில், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி. இராமகிருஷ்ணன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் கோவை கு. இராமகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் நிகழ்வை நடத்த முயன்ற போது அனுமதி இல்லை என்று கூறி நிகழ்வை நடத்தக்கூடாது என்றும் காந்தி படம் இருந்த பதாகையை நீக்கவும் காவல்துறை கூறியுள்ளது. தோழர்களின் எதிர்ப்பிற்கு பிறகு பதாகையில் இருந்த ‘இந்து மத வெறியர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட காந்தி’ என்ற வாசகத்தை நீக்க காவல்துறை வற்புறுத்தியது. கடும் விவாதத்திற்கு பிறகு ‘இந்து மதவெறி’ என்ற வார்த்தையை மறைத்து நிகழ்ச்சியை தொடர்ந்தனர். தொடர்ந்து உறுதிமொழி ஏற்பின் போது “கோட்சே, ஆர்எஸ்எஸ்” போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது, அது மற்ற மதத்தவர்களை புண்படுத்தும் என்று காவல்துறை தடுத்துள்ளது. வாக்குவாதத்திற்கு பின்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

தேசத் தந்தை காந்தியாரை கொலை செய்தது பார்ப்பன பயங்கரவாதி நாதுராம் கோட்சே என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதனடிப்படையில் அவனுக்கு தூக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. பயங்கரவாத செயலில் ஈடுப்பட்ட தேசவிரோத இந்துத்துவ ஆர்எஸ்எஸ் அமைப்பும் இதற்காக தடை செய்யப்பட்டது. இந்நிலையில், அதிகாரம் இல்லாத நிலையிலும் காந்தி நினைவு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வை தடுக்க கோவை காவல்துறை முயற்சித்துள்ளது. மேலும், இந்துத்துவ பயங்கரவாதத்தையும், பார்ப்பன பயங்கரவாதி கோட்சே பெயரையும் குறிப்பிட்டு பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதிமொழி எடுப்பதை கோவை மாநகர துணை ஆணையரும் , இரத்தினபுரி காவல் ஆய்வாளர் இரமேஷ் கண்ணாவும் தடுக்க முயற்சித்துள்ளனர். இந்துத்துவ பயங்கரவாதியால் தேசத்தந்தை காந்தி கொலை செய்யப்பட்டதை நினைவுகூறுவதையும், தேசத்திற்கு எதிரான பயங்கவாத செயலில் ஈடுபட்ட கோட்சே, ஆர்எஸ்எஸ் பெயரை குறிப்பிடுவதையும் ஏற்க மறுக்கும் அளவிற்கு கோவை துறையினர் மதவாதத்திற்கு ஆட்பட்டுள்ளது இதன் மூலம் புலப்படுகிறது.

கடந்த காலங்களில் ஆர்எஸ்எஸ் பயங்கவாத செயலுக்கு காவல்துறையினர் உடந்தையாக இருந்ததும், சமீபத்தில் சின்மயா வித்யாலயா பள்ளி மாணவி மரணத்தில் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக அவர்களை காப்பாற்றும் விதத்தில் கோவை காவல்துறையினர் செயல்பட்டதும் அனைவரும் அறிந்ததே. முதலமைச்சர் தனது காந்தி நினைவு நாள் செய்திக் குறிப்பிலும் காந்தியை கொன்ற கோட்சேவின் பெயரைக் குறிப்பிட்டு அவரது வாரிசுகளுக்கு இந்திய மண்ணில் இடமில்லை என்று கூறிய நிலையிலும், அவருக்கு கீழாக இயங்கும் காவல்துறையினர் கோட்சே மீதான பாசத்தை வெளிப்படையாக காட்டுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் இப்படி ஆர்எஸ்எஸ்-பாஜகவிற்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்பட்டு வருவதை மே பதினேழு இயக்கம் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறதா என்ற கேள்வியும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசிற்கு எதிரான, இந்துத்துவ பயங்கவாதத்திற்கு ஆதரவான காவல்துறையின் இந்த போக்கு தமிழ்நாட்டின் இறையாண்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. தமிழ்நாடு காவல்துறை தமிழ்நாட்டு மக்களுக்காக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டிய கடமை அந்த அமைச்சகத்தை கையாளும் முதலமைச்சருக்கு உள்ளது. இந்துத்துவ பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட காந்தியின் நினைவு நாள் உறுதியேற்பு நிகழ்வை தடுக்க முயற்சித்த, பார்ப்பன பயங்கரவாதி கோட்சே பெயரை உச்சரிப்பதை தடுக்க முயற்சித்த கோவை காவல்துறையினர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்து, பணி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டுமென தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. மதவாத சக்திகளையும், அவர்களுக்கு துணையாக இயங்கும் அதிகார வர்க்கத்தினரையும் களையெடுப்பதே தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநாட்ட எடுக்கப்படும் முயற்சியாக இருக்கும்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply