தமிழ்நாடு அரசே! மைக்கேல்பட்டி பள்ளி மாணவி மரணம் குறித்து விசாரிக்க பாஜக அமைத்த குழுவை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்காதே!

தமிழ்நாடு அரசே! மைக்கேல்பட்டி பள்ளி மாணவி மரணம் குறித்து விசாரிக்க பாஜக அமைத்த குழுவை தமிழ்நாட்டிற்குள் அனுமதிக்காதே! – மே பதினேழு இயக்கம்

மைக்கேல்பட்டி பள்ளி மாணவியின் மரணத்தை மதமாற்ற கண்ணோட்டத்தில் தவறாக திரித்து பரப்பி வரும் பாஜக, தமிழ் நாட்டின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், மாணவியின் மரணம் குறித்து விசாரிக்க மத்திய பிரதேசத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்தியாரே தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவை பாஜகவின் தலைவர் ஜேபி நாட்டா அமைத்துள்ளார். மதக் கலவரத்தை உண்டுபண்ணும் நோக்கில் தமிழகம் வரும் இந்த குழுவை தமிழ் நாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என்று தமிழ் நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகிலுள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல் நிலைப்பள்ளியில் பயின்று வந்த மாணவியின் மரணம் தொடர்பாக புனையப்பட்ட ஒரு காணொலியை வெளியிட்ட தமிழ் நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அவர் மரணத்திற்கு காரணம் மதமாற்றமே என்று பொருள்படும் வகையில் திரித்து பொய் பரப்புரை மேற்கொண்டார். பின்னர் வெளியான வேறு சில காணொலிகள் மூலமும், காவல்துறையின் விசாரணை, ஊர் பொதுமக்களின் சாட்சியங்கள் மூலமும் பாஜகவின் கூற்று தவறு என்பதும், தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க பாஜக முயற்சிப்பதும் அம்பலமானது.

இந்நிலையில், இச்சம்பவத்தை மேலும் பெரிதாக்கி அரசியல் ஆதாயம் தேடும் வகையில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்தியா ரே எனபவர் தலைமையில், தெலுங்கானாவை சேர்ந்த விஜயசாந்தி, மராட்டியத்தை சேர்ந்த சித்ரா தை வாக், கர்நாடகாவை சேர்ந்த கீதா விவேகானந்தா ஆகிய 4 பேர் கொண்ட குழு, மாணவியின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் என்று பாஜகவின் தலைவர் ஜேபி நட்டா அறிவித்துள்ளார். மாணவியின் மரணத்திற்கு காரணம் மத மாற்றமே என்ற கண்ணோட்டத்தில் ஒரு பொய்யான கருத்தை நிறுவுவதற்காகவே இக்குழுவை பாஜக அமைத்துள்ளது.

மாணவியின் மரணத்திற்கு சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், இக்குழுவின் வருகை அதனை சீர்குலைக்கும் வகையில் அமையும். தமிழ்நாட்டு மாணவி மரணம் தொடர்பாக வெளிமாநிலங்களை சேர்ந்த குழு விசாரணை நடத்த வருதன் நோக்கம், தமிழ்நாட்டில் நிலவி வரும் மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து, மதக் கலவரத்தை மதக் கலவரத்தை உண்டாக்குவதே. மாணவி பயின்றது கிருத்துவ பள்ளி என்ற ஒரே காரணத்திற்காக மதமாற்ற முயற்சி என்று பாஜக கற்பிக்க முயற்சிக்கிறது. இந்நிலையில், தமிழ் நாட்டிற்குள் இக்குழு நுழைந்தால், அது தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்கும்.

பொய்யென நிறுவப்பட்ட ஒரு விடயத்தில் ‘இந்து மாணவிக்கு நீதி கேட்கிறோம் என்று குழு அமைக்கும் பாஜக, சென்னை பத்ம சேஷாத்ரி பால பவன் (பி.எஸ்.பி.பி.), கோவை சின்மயா வித்யாலயா பள்ளிகளில் பாதிக்கப்பட்ட ‘இந்து’ மாணவிகளுக்காக குழு அமைக்க ஏன் முன்வரவில்லை? உபி லக்கீம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்ற சம்பவத்திற்கு விசாரணை கமிசன் அமைத்ததா? டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்களை கொலை செய்த சம்பவத்திற்கு விசாரணை கமிஷன் அமைத்து எதுவும் செய்யவில்லை. எனில், பாஜகவின் நோக்கம் இந்துக்கள் மீதான அக்கறை இல்லை. மாறாக, மதக் கலவரத்தை உண்டாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவதே.

காஷ்மீரில் ஜனநாயக படுகொலை நிகழும் போது, அங்கு செல்ல முயன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை மோடி-அமித்சா அனுமதிக்கவில்லை. உபி ஹேத்ரஸ் சம்பவத்தில் யோகி அரசு பத்திரிக்கையாளர்களை அனுமதிக்கவில்லை. அங்கு சென்ற பத்திரிக்கையாளர் சித்திக் இன்றும் சிறையில் உள்ளார். இது போன்று உண்மையை கண்டறிய முயன்ற ஜனநாயக குழுக்களை பாஜக தடுத்தது. ஆனால், தற்போது பாஜக அமைத்திருக்கும் குழுவோ, அப்படியான உண்மையை வெளிக்கொண்டுவர அமைக்கப்பட்டதல்ல. மாறாக தவறான உள்நோக்கத்தை திணிப்பதற்கான முயற்சி. இப்படிப்பட்ட பாஜகவின் இந்த மதவெறி குழுவை, மத நல்லிணக்கத்திற்கு முன்னோடியாக திகழும் அமைதிப் பூங்காவாம் தமிழ்நாட்டிற்குள் அனுமதியோம்.

ஆட்சி கவிழக்கூடிய நெருக்கடியான சூழ்நிலையிலும், மதக் கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் பீகாருக்குள் நுழைய முயன்ற அத்வானியின் ரத யாத்திரையை லாலு பிரசாத் தடுத்து நிறுத்தியது போல, தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்க நுழையும் பாஜகவின் இந்த மதவெறி குழுவை தமிழ் நாட்டிற்குள் நுழைவதை தமிழ் நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. இக்குழு தமிழ்நாட்டிற்குள் நுழைந்தால், அதற்கு எதிரான ஜனநாயக போராட்டத்தை மே பதினேழு இயக்கம் மேற்கொள்ளும். ஆரிய இந்துத்துவ வெறிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்பதை உறுதி செய்ய தமிழ்நாட்டின் ஜனநாயக ஆற்றல்கள் ஒன்றிணைய வேண்டுமென மே பதினேழு இயக்கம் அறைகூவல் விடுக்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010 

Leave a Reply