மொழிப்போர் ஈகியர் நாள் – இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போர்

காந்தியார் முன்மொழிந்த இந்தி ஆதரவிற்கு எதிராக 01.08.1917 அன்று நீதிக்கட்சியின் இதழான ‘திராவிடனில்’, இந்தி மொழி ஆதிக்க எதிர்ப்புக் கட்டுரை முதன்முதலாக வெளியானது. 1926இல் தந்தை பெரியார் வடமொழி உயர்வுக்காகவும், ஆரிய ஆதிக்கத்திற்காகவும் இந்தியைத் திணிக்கிறார்கள் என ‘குடிஅரசு’ இதழில் எழுதினார். காஞ்சியில் 1938 பிப்ரவரியில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாடு அதே ஆண்டு ஜூன் 4ஆம் தேதி நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்புப் களப்போராட்டம் எனத் துவங்கிய இந்தி எதிர்ப்புப் போர் 1940- 50 கால கட்டங்களிலும் தொடர்ந்தது. தனித்தமிழ் இயக்கத்தவரும், தமிழறிஞர்களுமான மறைமலை அடிகளும், திரு.வி.க.வும் இப்போராட்டத்தில் இணைந்து தீவிரப்படுத்தினர். 1948இல் அனைத்துக்கட்சி இந்தி எதிர்ப்பு மாநாட்டை திராவிடர் கழகம் நடத்தியது. இந்தி ஆட்சி மொழியாகப்படுவதற்கான முயற்சியை எதிர்த்துப் பெரும் போராட்டம் வெடித்தது.25.01.1964இல் திருச்சி கீழப்பழுவூர் சின்னச்சாமி தமிழுக்காகத் தன்னைச் சாம்பலாக்கிக் கொண்டார். 1965 இல் மத்திய அரசு அலுவலகங்கள் முன் இந்தி அழிப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பொள்ளாச்சியில் 1965 பிப். 12ம் தேதி நடந்த தபால் அலுவலக இந்தி எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தின்போது காங்கிரஸ் அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டு அறிவிக்கப்படாமல் அரசால் புதைக்கப்பட்டனர். இதேபோன்று பிப்ரவரி 10 1965 இல் கோவை, திருச்செங்கோடு, வெள்ளக்கோயில், கரூர், மணப்பாறை, குமாரபாளையம் மற்றும் திருப்பூரில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் பள்ளி மாணவர்கள் உட்பட பலர் படுகொலை செய்யப்பட்டனர்.தீக்குளித்தும், நஞ்சுண்டும் பலர் மாண்டனர். தமிழின எழுச்சி போராட்டமாக வெளிப்பட்ட மொழிப்போர் ஆதிக்கவாதிகளை அச்சுறுத்தி அடிபணிய வைத்தது. காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டது. வெள்ளையர் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் தமிழர்களின் மிகப்பெரும் தமிழ் தேசிய இன எழுச்சியாக இந்தி எதிர்ப்பு ‘மொழிப்போர்’ வரலாற்றில் பதிவானது. இந்தி ஆதிக்கம் அப்புறப்படுத்தப்பட்டது

Leave a Reply