திருவண்ணாமலை மாவட்டம், வீரலூர் கிராமத்தில் அருந்ததியர்களின் வீடுகளையும் உடைமைகளையும் சூறையாடிய சாதிவெறியர்களை உடனடியாக கைது செய்

திருவண்ணாமலை மாவட்டம், வீரலூர் கிராமத்தில் அருந்ததியர்களின் வீடுகளையும் உடைமைகளையும் சூறையாடிய சாதிவெறியர்களை உடனடியாக கைது செய் – மே பதினேழு இயக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் வீரலூர் கிராமத்தில் உடல்நலக்குறைவால் 15.01.22 அன்று உயிரிழந்த பெண்ணின் உடலை பொதுபாதையில் கொண்டு செல்லலாமா என்று கேட்டதற்காக ’சக்கிலியர்களுக்கு எங்களிடம் வந்து கேட்குமளவுக்கு துணிவுவந்துவிட்டதா’ என்று ஆத்திரம் கொண்டு 200க்கும் மேற்பட்ட சாதிவெறியர்கள் திரண்டு வந்து அருந்ததிய மக்களை தாக்கியதோடு, அவர்கள் சிறுக சிறுக இத்தனை வருடங்களாக கடினமாக உழைத்து சேர்த்த வீடுகளையும், உடைமைகளையும் சூறையாடியிருக்கிறார்கள்.

இவ்வளவு பெரிய வன்முறை வெறியாட்டத்தை இந்த சாதிவெறி கும்பல்கள் திட்டமிட்டு பதட்டமே இல்லாமல் நடத்தும்போது அவர்கள் அருகில் தான் காவல்துறை இருக்கிறது. மேலும் காவல்துறை சாதிவெறியர்களை அப்புறப்படுத்தாமல் அவர்களிடம் ’போதுப்பா இவ்வளவு போதும் கிளம்புங்க’ என்று கெஞ்சும் காணொளிகளை சமுகவலைதளத்தில் பார்க்கும்போது காவல்துறையின் துணையோடுதான் இந்த வன்முறை வெறியாட்டம் எளியமக்களின் மீது நடத்தப்பட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால் பாதிக்கப்பட்ட மக்களில் 20க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் அடிபட்டு மருத்துவமனையில் இருக்கும்போது, தாக்கிய சாதிவெறியர்கள் ஒருவர் கூட இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது.

சமூகநீதிக்கு இந்தியாவுக்கு வழிகாட்டியாய் இருக்கும் தமிழ்நாட்டில் அண்மையில் நடைபெறும் இதுபோன்று சாதிவெறி வன்முறைகள் அவமானகரமானதாகும். காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழ்நாட்டின் முதல்வர் எப்படி சென்னை புறநகரில் நடக்கும் ரவுடிகளை களையெடுக்க தனிப்படை அமைத்தாரோ அதேபோல சாதி, மத மோதல்களை செய்யும் வன்முறையாளர்களை கட்டுப்படுத்த தனிப்படை அமைக்கவேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதோடு, சாதிவெறியர்களை உடனடியாக கைது செய்யவேண்டும். சாதிவெறி, மதவெறி கும்பல்களுக்கு எதிராக தமிழகத்திலுள்ள முற்போக்கு ஆற்றல்கள் ஒரணியில் திரளவேண்டுமாய் மே17 இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010 

Leave a Reply