தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் முகநூல் பக்கம் முடக்கம்! சனநாயக வெளியை முடக்கும் முகநூல் நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்!

தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் முகநூல் பக்கம் முடக்கம்! சனநாயக வெளியை முடக்கும் முகநூல் நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்! – மே பதினேழு இயக்கம்

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் முகநூல் பக்கம் (fb.com/thirumurugan.gandhi.may17) நேற்று (11-01-22) முடக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் ஏதும் அறிய முடியவில்லை. முகநூல் நிர்வாகம் இது தொடர்பான எந்த ஒரு எச்சரிக்கையோ அறிவிப்போ வழங்கவில்லை. தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் முகநூல் பக்கத்தை முடக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருந்துள்ளது. முகநூல் நிர்வாகத்தின் இத்தகைய சனநாயகமற்ற செயலை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தனிப்பட்ட முகநூல் கணக்கு துவங்குவதற்கு முகநூல் நிர்வாகம் ஏற்கனவே தடை விதித்துள்ளது. திருமுருகன் காந்தி என்ற பெயரில் கணக்கு துவங்கினால் அடுத்த நொடியே அந்த கணக்கு முகநூல் நிர்வாகத்தால் முடக்கப்படுகிறது. அதே போல், ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார் அவர்களின் பெயரில் துவங்கப்பட்ட தனிப்பட்ட கணக்கும் தடுக்கப்பட்டு, தகுந்த அடையாளச் சான்றுகள் அளித்தும் கணக்கை அணுகுவதற்கு எவ்வித காரணமுமின்றி முகநூல் நிர்வாகம் மறுக்கிறது.

மேலும், மே பதினேழு இயக்கத் தோழர்கள் சிலரது நீண்டகால கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது அல்லது அதன் செயல்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மே பதினேழு இயக்கம் மற்றும் தோழர் திருமுருகன் காந்தியின் முகநூல் பக்கங்களின் பதிவுகள் அப்பக்கங்களை பின்தொடர்பவர்களை சென்றடையாமல் மட்டுப்படுத்தப்பட்டு அதன் செயல்பாடுகள் கடந்த காலங்களில் முடக்கப்பட்டுள்ளது. இதில், தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் முகநூல் பக்கமானது தகுந்த சான்றுகள் அளிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட (Blue Tick) பக்கமாகும்.

இவை அனைத்திலும், முகநூல் நிர்வாகம் முறையான எச்சரிக்கையோ அறிவிப்போ வழங்கவில்லை. மேலும் இது குறித்து முறையிடுவதற்கான அனைத்து வழிகளையும் அடைத்தும் வைத்துள்ளது. இது, மே பதினேழு இயக்கத்தின் செயல்பாட்டை முழுவதுமாக தடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே முகநூல் நிர்வாகம் செயல்படுவதை காட்டுகிறது. அதன் உச்சம் தான் தற்போது தோழர் திருமுருகன் காந்தியின் முகநூல் பக்கம் முடக்கம்.

முகநூல் மட்டுமல்லாது, சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் மே பதினேழு இயக்கத்தின் மீதான அடக்குமுறை தொடர்கிறது. பல்லாயிரக்கணக்கான சந்ததாரர்களை கொண்டிருந்த மே பதினேழு இயக்கத்தின் யூடியூப் சானலும் எச்சரிக்கை அளிக்காமல் முடக்கப்பட்டது. இதனால் பல்லாண்டு ஆவணங்களான காணொலிகளை இழந்தோம். இது குறித்து மே பதினேழு இயக்கம் மக்கள் மன்றத்தில் பல முறை முறையிட்டுள்ளது.

மே பதினேழு இயக்கம் சமூக வலைத்தளங்களில் செயல்படுவதற்கான சனநாயக வெளியை முடக்குவது கருத்துரிமைக்கு எதிரானதாகும். தோழர் திருமுருகன் காந்தியின் முகநூல் பக்கம் மீண்டும் செயல்பட முகநூல் அனுமதிக்க வேண்டும். இதற்கான அழுத்தத்தை சனநாயக ஆற்றல்கள் உண்டாக்க வேண்டுமென வேண்டுகோள் வைக்கின்றோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010 / contact.may17@gmail.com

Leave a Reply