மக்கள் கண்காணிப்பகம் மீதான ஒன்றிய அரசின் சிபிஐ சோதனை; மனித உரிமைகள் அமைப்புகளை மிரட்டும் மோடி அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்

மக்கள் கண்காணிப்பகம் மீதான ஒன்றிய அரசின் சிபிஐ சோதனை; மனித உரிமைகள் அமைப்புகளை மிரட்டும் மோடி அரசை வன்மையாக கண்டிக்கின்றோம் – மே பதினேழு இயக்கம்

தமிழ்நாட்டில் 1995ஆம் ஆண்டிலிருந்து மனித உரிமைகள் சார்ந்து பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்பு தான் மதுரையை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டுவரும் மக்கள் கண்காணிப்பகம். இந்த அமைப்பு வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது நடத்தப்பட்ட மனித உரிமை மீறலாகட்டும், ஆந்திர காவல்துறையால் தமிழர்கள் சுட்டுகொல்லப்பட்ட நிகழ்வாகட்டும், ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக போராடிய மக்களை சுட்டுக்கொன்ற கொடுமையாகட்டும் இவை அனைத்திற்கெதிராகவும் போராடி அதை வெளிவுலகுக்கு கொண்டு வந்ததோடு, பாதிக்கப்பட்டவர்களுக்காக வழக்கு நடத்தி நிவாரணமும் வாங்கிக்கொடுத்த அமைப்பு மக்கள் கண்காணிப்பகம். இப்படிப்பட்ட அமைப்பின் மீது ஒன்றிய அரசு காழ்ப்புணர்ச்சியோடு வழக்கு பதிவு செய்து, அதன் அலுவலகத்தில் சிபிஐ-யைக் கொண்டு கடந்த 08-01-22அன்று சோதனையிட்டிருக்கிறது. மக்கள் கண்காணிப்பகம் மீதான ஒன்றிய அரசின் ஒடுக்குமுறையை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

பாஜக அரசு பதவியேற்றதிலிருந்தே மனித உரிமைகள் அமைப்புகளை அச்சுறுத்துவதும், அவர்கள் மீது பொய்வழக்கு போட்டு அவர்களின் செயல்பாடுகளை முடக்குவதுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. சமீபத்தில் கூட இந்தியாவில் வெளிநாட்டு பங்களிப்புகள் (ஒழுங்குமுறை) சட்டத்தின் (எஃப்சிஆர்ஏ) கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த 22,000 க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பெரும்பாலனவற்றை நீக்க மோடி அரசின் கீழ் இயங்கும் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதற்காகவே ஐந்து ஆண்டுகளுக்கு முன் எளிமையாக இருந்த நிறுவனத்தை புதுப்பிக்கும் வழிமுறையில் பிரிவு 12(4) திருத்தம் கொண்டுவந்து மிகக்கடுமையாக மாற்றியமைத்தது. அதன்படி அரசை எதிர்த்து பேசக்கூடாது என்று உறுதிவாங்குவதற்காக பொதுநலனுக்கும் தேசத்திற்கும் எதிராக செயல்பட மாட்டோமென்ற சான்றிதழ் பெற வேண்டுமென்று நிபந்தனையை விதித்தது. அதுமட்டுமில்லாமல் நேரடியாகவே 160 தன்னார்வ நிறுவனங்களின் மீது தடையும் விதித்தது. அதில் அன்னை தெரசா அவர்களால் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற தன்னார்வ தொண்டு நிறுவனமும் ஒன்று.

இந்த வரிசையில் தான் மக்கள் கண்காணிப்பகத்தின் செயல்பாடுகளை முடக்க ஒன்றிய அரசு 2012ஆம் ஆண்டே சில அடக்குமுறைகளை மேற்கொண்டது. அயல்நாடுகளில் இருந்து நிதிபெற 2012இல் ஒரு முறை, 2013இல் இரண்டு முறை என மொத்தம் மூன்று முறை தடைவிதித்தனர். இதனை எதிர்த்து மக்கள் கண்காணிப்பகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதில் ஒன்றிய அரசு விதித்த தடை செல்லாது என்று தீர்ப்பு வந்தது. இதனையெடுத்து பதவிக்கு வந்த பாஜக மோடி அரசு 29.10.2016ஆம் ஆண்டு வெளிநாட்டில் நிதிபெறுவதற்கான உரிமத்தை புதுபிக்க கொடுத்த விண்ணப்பத்தை ஏற்க மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து மக்கள் கண்காணிப்பகம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அது இந்த 2022 ஆம் ஆண்டு இந்த மாதம் சனவரி 24ஆம் தேதி விசாரணைக்கு வரவிருந்தது. இந்நிலையில் ஏற்கனவே 2012இல் போடப்பட்டு முடிந்துவிட்ட ஒரு வழக்கில் தற்போது 06-01-2022இல் புதிதாக வழக்கு பதிந்து, 07-01-2022 அன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் பெற்று, 08-01-2022 அன்று அதை வைத்து மக்கள் கண்காணிப்பகத்தின் மீது சோதனை போட்டிருப்பது என்பது மக்கள் கண்காணிப்பகத்தின் தமிழ்நாடு, இந்தியா தாண்டிய அதன் செயல்பாடுகளை முடக்குவதற்கு தான் என்பது தெள்ளத்தளிவாக தெரிகிறது.

மக்கள் கண்காணிப்பகம் சனநாயக கோரிக்கைகளுக்காகவும், பாசிச எதிர்ப்பு செயல்பாடுகளுக்காகவும், அரச வன்முறைக்கு எதிராகவும், சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து இந்திய அரசியல் சாசனத்திற்குட்பட்டு செயல்படும் ஓர் அமைப்பாகும். இதன் தலைவரான தோழர்.ஹென்றி டிபேன் அவர்களும் சர்வதேச அளவில் இந்திய சமூகத்தில் இருக்கும் அவலங்களை அம்பலப்படுத்தியும், அதற்குரிய சட்டங்களையும், பரிந்துரைகளையும், தீர்மானங்களையும் கொண்டு வருவதற்கு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருபவர். இந்த வகையில் மக்கள் கண்காணிப்பகம் மற்றும் தோழர்.ஹென்றி டிபேன் மீதான அடக்குமுறை என்பது தமிழகத்தின் முன்னனி சனநாயக அமைப்பு மீதான நெருக்கடியாகும். இது தடுக்கப்படவில்லையெனில் இது போன்ற ஒடுக்குமுறைகள் விரிவடையலாம் என்பதால், சனநாயக அமைப்புகள் இச்சமயத்தில் ஒன்றுபட்டு இந்துத்துவ பாசிச அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்க அனைவரும் ஒன்றுபட வேண்டுமென மே 17 இயக்கம் அழைப்பு விடுக்கிறது. மேலும் மக்கள் கண்காணிப்பகம் மீதான ஒன்றிய அரசின் இந்த அடக்குமுறையை மே 17 இயக்கம் கண்டிப்பதோடு இதுபோன்ற நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக நிறுத்த வேண்டுமெனவும் கோருகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply