‘தமிழர் பண்பாடு மெய்யியல் ஆய்வாளர்’ பேராசிரியர் ஐயா தொ.பரமசிவன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் (டிசம்பர் 24, 2021)

‘தமிழர் பண்பாடு மெய்யியல் ஆய்வாளர்’ பேராசிரியர் ஐயா தொ.பரமசிவன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் (டிசம்பர் 24, 2021)

“கேள்வி: நீங்கள் தமிழ்த்தேசியம் என்ற கருத்தியலை நம்புகிறீர்களா?”

“ஐயா தொ.ப: ஆமாம்… நான் தமிழ்த்தேசியம் என்ற கருத்தியலை நம்புகிறேன். நானும் தமிழ்த்தேசியர்தான்.”

தமிழகத்தின் தொன்மையை வெறும் பழங்கதைகளாகவும், வறட்டு பெருமைகளாகவும் பேசிய தன்மையை மாற்றி தமிழர்கள் மெய்யியலையும், பண்பாட்டையும் அதில் பொதிந்திருந்த ஆரிய வைதிக எதிர்ப்பை வரலாற்று மற்றும் தொல்லியல் சான்றுகளுடன் எடுத்துரைத்த பேராசிரியர் ஐயா தொ.பரமசிவன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள் இன்று.

குறிப்பாக தமிழக நாட்டார் தெய்வங்கள் குறித்த வரலாற்றையும், தமிழர்களின் நடுகல் வரலாற்றையும் குறித்த பேராசிரியர் தொ.ப அவர்களின் பார்வை சமகால அரசியலில் அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டார் மரபை பற்றி கூறும் போது “இங்கு தீட்டு இல்லை. பார்ப்பனிய மரபு இதற்கு நேர் எதிர்” என்றார். அதிலும் தமிழர் மெய்யியலோடு பெரியாரின் சாதி மறுப்புக் கொள்கையும் இணையும் புள்ளியை எடுத்துக்காட்டினார்.

‘இன்று தமிழகத்தில் பல்வேறு சாதியினர் தாங்கள் ஆண்ட பரம்பரை என்று சொல்லிக் கொள்கிறார்களே ?’ என்ற கேள்வி பேராசிரியர் தொ.ப அவர்களிடம் கேட்கப்பட்டபோது கீழ் கூறும் பதிலை கூறினார்.

“சுத்த பைத்தியக்காரத்தனம். அரசன் சாதி கெட்டவன். பெரும் எண்ணிக்கையிலுள்ள சாதிகள் எப்போதும் அரசனுக்குத் துணையாக இருந்திருக்கும் என்பது உண்மை. அப்படித்துணையாக இருந்த சாதியில் இருந்து அரசன் பெண் எடுத்திருப்பான். அதற்காக நாங்கள் அவன் வாரிசு என்று எப்படி சொல்ல முடியும்? ஆண்ட பரம்பரை எனச் சொல்லாத சாதிகளும் தமிழ்நாட்டில் உள்ளன. அவர்களுமே கூட வரலாற்றில் ஏதோ ஒரு தருணத்தில் ஏதாவது ஒரு நிலப்பரப்பின் அதிகாரத்தை கையில் வைத்திருந்தவர்களாக இருப்பார்கள். எனவே ‘நாங்கள் ஆண்ட பரம்பரை’ எனச் சொல்வதில் எந்த தனிப்பட்ட பெருமிதமும் இல்லை.”

இந்து மதத்தின் சடங்குகளையும், பிறப்பின் அடிப்படையிலான கலாச்சாரத்தையும் அடியோடு வெறுத்த பேராசிரியர் தொ.ப அவர்கள், தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்று பறைசாற்றினார். “ 80% மக்களுக்கு நான்கு வேதங்களின் பெயர் கூடத் தெரியாது. பிறகு எப்படி இவர்கள் இந்துக்கள் ஆவார்கள்?” என்று கேட்டார்.

பெரியாரின் மீது பெரும் பற்று கொண்ட பேராசிரியர் தொ.ப அவர்கள் பெரியாரை பற்றி கூறும் போது “வர்க்கத்துக்கும் சாதிக்குமான உறவை சரியாகப் புரிந்து கொண்டவர் பெரியார். வர்க்கத்தின் மூலவடிவமாகத்தான் சாதியைப் பார்த்து சாதி ஒழிப்பில் கவனம் செலுத்தினார்.” என்றார். மேலும் திருச்சியில் நடைபெற்ற கருஞ்சட்டைப் பேரணியில் பேசிய பேராசிரியர் தொ.ப அவர்கள் “பெரியார் ஆதிக்கத்துக்கு எதிரானவர்” என்று முழங்கினார்.

பண்பாடு என்பதை நிலம் சார்ந்ததாக இருக்கிறது என்று பேராசிரியர் தொ.ப அவர்கள் கூறினார். “பண்பாடு என்பது நிலம் சார்ந்தது. நிலம் என்றால் வெறும் மண் அன்று. நிலப்பகுதியில் வாழ்கிற மக்கள், அவர்கள் பேசுகிற மொழி அவர்களுடைய உற்பத்திப் பொருட்கள், அவர்களின் பல்வேறு வகையான இசைக் கருவிகள் புழங்கு பொருட்கள், இசை-கலை-இலக்கிய வெளிப்பாடுகள், வாய்மொழி மரபுகள் எல்லாம் சேர்ந்ததற்குப் பெயர்தான் பண்பாடு.” என்று வரையறுத்தார்.

சமகால அரசியலில் பேராசிரியர் தொ.ப அவர்கள் முன்னெடுத்த வைதிக மரபு எதிர்ப்பு தமிழ்த்தேசியத்தின் முக்கிய கூறாகும். சாதியற்ற, வர்க்கமற்ற தமிழ்த்தேசியத்தின் அடிநாதம் ஆரிய சனாதன வைதிக மரபு எதிர்ப்பாகும். அத்தகைய அரசியலை உணர்த்திய ‘தமிழர் பண்பாடு மெய்யியல் ஆய்வாளர்’ பேராசிரியர் ஐயா தொ.பரமசிவன் அவர்களின் நினைவுநாளில் மே பதினேழு இயக்கம் புகழ்வணக்கம் செலுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply