விசாரணைக்கு அழைக்கப்பட்ட மாணவர் மணிகண்டன் மரணம்! தொடரும் காவல்நிலைய மரணங்களுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்!

விசாரணைக்கு அழைக்கப்பட்ட மாணவர் மணிகண்டன் மரணம்! தொடரும் காவல்நிலைய மரணங்களுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்! – மே பதினேழு இயக்கம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகிலுள்ள நீர்க்கோழியேந்தல் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற மாணவர் வாகனச் சோதனையில் நிற்காமல் சென்றதாக கீழத்தூவல் காவல்நிலையத்துக்கு கடந்த 4-ம் தேதி அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணை முடிந்து வீடு திரும்பிய மணிகண்டன் 5ம் தேதி அதிகாலையில் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். விசாரணையின் போது காவல்துறையினரின் தாக்குதல் காரணமாகவே உயிரிழந்திருக்கக் கூடும் என்று உறவினர்கள் போராடி வருகின்றனர்.

காவல் விசாரணைக்கு அழைக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்த வண்ணம் உள்ளது. சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலைக்கு பிறகு காவல்நிலைய மரண மரணங்கள் மக்கள் கவனம் பெற்றுள்ள நிலையில், மாணவர் மணிகண்டனது மர்ம மரணம் மக்களிடையே கேள்வியை உண்டாக்கியுள்ளது. மணிகண்டன் உயிரிழப்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லாத நிலையில், காவல்நிலைய விசாரணைக்கு சென்று வந்த பின்பு மர்மமான முறையில் மரணமடைந்தது, விசாரணையின் போது காவல்துறையினர் கடுமையாக தாக்கியதே காரணம் என்று கூறுகின்றனர்.

மாணவர் மணிகண்டன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய அவரின் உறவினர்கள், காவல்துறை விசாரணையினால் தான் மணிகண்டன் இறந்தார் எனக்கூறி அவரின் உடலை வாங்க மறுத்து தற்போது வரை போராடி வருகின்றனர். உண்மை கண்டறியும் விதமாக மானவரது உடலை மறு உடற்கூராய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நல்ல உடல்நிலையில் காவல் விசாரணைக்கு அழைக்கப்பட்ட மாணவரின் மரணத்திற்கு காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும். காவல்நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காவல்துறையினருக்கு மனித உரிமைகள் குறித்த பயிற்சியும், உளவியல் ஆலோசனைகளும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

எளிய மக்கள் மீது தொடரும் காவல்துறையினரின் இத்தகைய அராஜக போக்கை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினரை பணியிலிருந்து நீக்கி, கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறைப்படுத்த வேண்டும் வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. இது போல தொடரும் காவல்நிலைய சித்திரவதைகள், கொலை ஆகியவை குறித்த உரிய கவனமெடுத்து அனைவர் மீதும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், அரசுப்பணியும் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகின்றோம்.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply