ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் அரசு பாரபட்சமாக செயல்படுவதை கைவிட வேண்டும்! இஸ்லாமியர்கள் மற்றும் எழுவர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும்!

ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் அரசு பாரபட்சமாக செயல்படுவதை கைவிட வேண்டும்! இஸ்லாமியர்கள் மற்றும் எழுவர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும்! – மே பதினேழு இயக்கம்

அறிஞர் அண்ணாவின் 113 -வது பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனையை முடித்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் 700 ஆயுள் தண்டனை சிறைவாசிகளை மாநில அரசின் 161 ஆம் சட்டபிரிவை பயன்படுத்தி விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நவம்பர் 15-11-2021 அன்று அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையில் இந்திய அரசியலமைப்பின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை பின்பற்றாமல் சிறைவாசிகளின் மதத்தையும், வேறுசில காரணிகளையும் நிபந்தனைகளாக வைத்திருக்கிறார்கள்.

நீண்ட காலமாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளையும், 7 நிரபராதி தமிழர்களையும் விடுவித்திடக் கூடாது என்பதற்காகவே இது போன்ற நிபந்தனைகளை திட்டமிட்டு இணைத்திருப்பதாகவே தெரிகிறது. அரசியல்ரீதியான இந்த போக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது. தமிழ்நாடு அரசின் இத்தகைய பாரபட்சமான அணுகுமுறையை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.

கடந்த அக்டோபர் 21 அன்று ஒரு வழக்கில் கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்தியா முழுவதும் உள்ள ஆயுள் சிறைவாசிகள் (விசாரணையே இன்றி நீண்ட நாள் சிறையிலிருப்பவர்கள், விடுதலைக்காக மேல்முறையீடு செய்திருப்பவர்கள், மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் விடுதலை பட்டியலில் இருப்பவர்கள்) விவரங்களை சேகரிக்க கெளரவ் அகர்வால், தேவனஸ் மோத்தோ,லிஸ் மேத்யூ என்ற மூன்று வழக்கறிஞர்களை நியமித்தது. இந்த குழு மாநில அரசுகளிடம் மேற்சொன்ன விபரங்களை கேட்ட போது, உத்திரபிரதேசம், பிகார், சட்டீஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்கள் இந்த விவரங்களை கொடுக்க மறுத்துவிட்டது.

இதை கண்டித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்றம், நீண்ட கால சிறைவாசிகளை (10 ஆண்டுகளுக்கு மேல்) மாநில அரசுகள் விடுதலை செய்யும்போது, அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும். மேலும் சிறைவாசிகளின் அடிப்படை உரிமைகள் எக்காரணம் கொண்டும் மீறக்கூடாதென்று அறிவுறுத்திருந்தார்கள். ஆனால் இப்போது தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிற நிபந்தனைகள் என்பது சிறைவாசிகளின் அடிப்படை உரிமையை மறுப்பதும், சிறைவாசிகளுக்குள் பேதம் பார்ப்பதுமாக இருக்கிறது. இது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுக்கு எதிரானது. மேலும், இது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது.

அதேபோல், 2020 நிலோபர் நிஷா வழக்கில் நீதிமன்றமே நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்தது போல், நளினி தன்னை விடுவிக்க கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது, எழுவர் விடுதலை தொடர்பான அரசின் கொள்கை நிலைப்பாட்டிற்கு முரணாக உள்ளது. நளினியின் இந்த வழக்கை, தமிழ்நாடு அரசின் எழுவர் விடுதலை தீர்மானத்தின் மீது 3 ஆண்டுகளுக்கு மேலாக நடவடிக்கை எடுக்காத ஆளுநர் மீது அழுத்தம் உண்டாக்கும் வாய்ப்பாக பயன்படுத்தாமல், ஆளுநரின் செயலையே காரணம் காட்டி முட்டுக்கட்டை போடுவது கண்டிக்கத்தக்கது. திமுக தனது தேர்தல் அறிக்கையில் எழுவர் விடுதலையை குறிப்பிட்டு ஆட்சியை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, உச்சநீதிமன்ற வழிகாட்டலின் படி தமிழக அரசு இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக வெளியிட்டிருக்கும் இந்த நிபந்தனைகளை உடனடியாக நீக்கி, நீண்ட கால இஸ்லாமிய சிறைவாசிகளையும், 7 நிரபராதி தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010 

Leave a Reply