கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆணவப்படுகொலை! தமிழ்நாட்டில் தொடரும் ஆணவப்படுகொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆணவப்படுகொலை! தமிழ்நாட்டில் தொடரும் ஆணவப்படுகொலைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்! – மே பதினேழு இயக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்ற பட்டியல் சமூக இளைஞரும், தங்கநிலா என்ற பிற்படுத்தப்பட்ட சமூக பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், சுரேஷ்குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பெண் வீட்டார் சுரேஷ்குமாரை ஆணவப்படுகொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. சாதிய ஏற்றத்தாழ்வு அடிப்படையில் நடைபெற்ற இந்த ஆணவப்படுகொலையை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாட்டில் தொடரும் ஆணவப்படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

பட்டியலின வகுப்பை சேர்ந்த 25 வயதான சுரேஷ்குமார் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை புதூர் என்ற ஊரை சேர்ந்தவர். இவரும், அருகிலுள்ள காட்டுப்புதூர் என்ற ஊரை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 25 வயதான தங்கநிலா என்பவரும் கல்லூரி காலம்தொட்டு 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். வீட்டில் திருமண ஏற்பாடு செய்வதை தொடர்ந்து, குடும்பத்துடன் அவரது வீட்டிற்கு வந்து பெண் கேட்குமாறு சுரேஷ்குமாரிடம் தங்கநிலா கூறியுள்ளார். அதற்கு வீட்டில் பேசி கூட்டி வருவதாக சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த செப்டம்பர் 18-ம் தேதி, தங்கநிலா உறவினர்கள் பேச விரும்புவதாக தோவாளையை சேர்ந்த வழக்கறிஞர் பழனி என்பவர் தன்னுடைய வீட்டிற்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு சுரேஷ்குமாரை அழைத்துள்ளார். குடும்பத்தினருடன் அங்கு சென்ற சுரேஷ்குமாரை சாதிரீதியாக திட்டி இழிவுபடுத்தியதோடு, கொலை செய்துவிடுவோம் என்று பெண்ணின் அண்ணன் தாமோதரன் என்பவர் தலைமையில் வந்திருந்த தங்கநிலா உறவினர்கள் மிரட்டியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, நவம்பர் 7 அன்று நண்பகலில், தங்கநிலாவின் அண்ணன் தாமோதரன் உள்ளிட்ட சிலரோடு சுரேஷ்குமார் வீட்டிற்கு வந்த பூதப்பாண்டி காவல்நிலையம் உதவி ஆய்வாளர் ஜோசப் ராஜ் என்பவர், சுரேஷ்குமாரை காவல்நிலையத்திற்கு அழைத்துள்ளார். அவர்களுடன் சென்ற சுரேஷ்குமார், காவல் நிலையத்திற்கு போய் சேரவில்லை என்பது தெரியவந்து, அவரது உறவினர்கள் காவல்நிலையம் உட்பட பல இடங்களில் தேடியுள்ளனர். சுரேஷ்குமாரின் அலைபேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. சுமார் 5:30 மணியளவில் தங்கநிலா ஊரின் அருகிலுள்ள, ஆலடி சிவன்கோயில் தெப்பக்குளம் சாலையோரத்தில் சுரேஷ்குமாரின் இருசக்கர வாகனம் இருப்பதை கண்டு தேடிய போது, அருகிலுள்ள தோட்டத்தில் மயக்க நிலையில் கிடந்துள்ளார் சுரேஷ்குமார்.

சுரேஷ்குமார் அருகில் அவரது அலைபேசி சேதமடைந்த நிலையில் கிடந்துள்ளது. மேலும், அதிலிருந்த சிம்கார்டு மற்றும் மெமரி கார்டு ஆகியவை காணாமல் போயிருந்தது. சுரேஷ்குமாரை எழுப்ப முடியாத நிலையில், அவரை மீட்டு அருகிலுள்ள நான்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது. இறுதியில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்தபோது, சுரேஷ்குமார் இறந்துவிட்டார் என்று மருத்துவர் கூறியுள்ளார். உடல்கூறாய்வு முடிவு தெரியாத நிலையில், காவல்துறை இதனை தற்கொலை வழக்காக பதிவு செய்துள்ளது.

காதல் விவகாரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த சுரேஷ்குமாரை, பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தங்கநிலா உறவினர்கள் கொலை செய்ததாகவே தெரிகிறது. நடைபெற்ற சம்பவங்களும் அதற்கு வலு சேர்க்கின்றனர். ஆனால், பிற்படுத்தப்பட்ட சாதினருக்கு ஆதரவாக காவல்துறையும், அதிகார வர்க்கம் செயல்படுகிறது. விசாரணைக்கு வந்த கோட்டாட்சியர், “பெண் செத்தால் நியாயம் கேட்கலாம், ஆணுக்கு எப்படி கேட்கிறீர்கள்?” என்கிற வினோதமான கேள்வியை கேட்டிருக்கிறார். காவல் உதவி ஆய்வாளர் அழைத்து சென்றவர் இறந்துள்ள நிலையில், மாவட்ட‌ காவல்துறை கண்காணிப்பாளர் “இதில் ஏன் காவல்துறையை குற்றம்சாட்டி புகார் கூறுகிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார். அதே சாதியை சேர்ந்த உள்ளூர் அரசியவாதிகளின் ஆதரவு இருப்பதே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

சுரேஷ்குமார் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை விசாரிக்க தனி நீதிவிசாரணை அமைக்க வேண்டும். குற்றம்சாட்டப்பட்டுள்ள பெண்ணின் குடும்பத்தார் மட்டுமல்லாது, இந்த கொடும்குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள், காவலர்கள், கொலையை மறைக்க ஆதரவாக நின்ற அதிகாரிகள் ஆகியோரை கைது செய்ய வேண்டும். அதிகாரிகளை பணி நீக்கம் செய்க. சாதிரீதியாக மிரட்டிய அனைவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும். சுரேஷ்குமாருக்கு சிகிச்சையளிக்க மறுத்த தனியார் மருத்துவமனைகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

பாலின பேதம் பாராது தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆணவப்படுகொலைகள் சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒடுக்கப்பட்ட பட்டியலின வகுப்பை சேர்ந்தவர்கள் அதிகார வர்க்கத்தின் துணையோடு பலியாக்கப்படுவதை, தமிழ்நாடு அரசு உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். காவல்துறையில் புரையோடிப் போயிருக்கும் சாதியம் இதற்கு அடிப்படை காரணமாக உள்ளது. சமூகநீதியில் அக்கறை கொண்டதாக கூறிக்கொள்ளும் திமுக அரசு, காவல்துறையில் சீர்திருத்தங்களை கொண்டுவர முற்பட வேண்டும். சாதிமறுப்பு திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு சலுகைகளும், சாதிமறுப்பு திருமணம் புரிவோருக்கு பாதுகாப்பு அளிக்கும்படி சிறப்பு சட்டமும் இயற்றப்பட வேண்டும். ஆணவப்படுகொலையை தடுக்க நீண்டகாலமாக கோரப்பட்டு வரும் சிறப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

மே பதினேழு இயக்கம்
9884864010

Leave a Reply