தமிழ்நாட்டு மீனவர்களை கொன்ற இனப்படுகொலையாளனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு! இந்திய ஒன்றிய அரசிற்கு வன்மையான கண்டனங்கள்!

தமிழ்நாட்டு மீனவர்களை கொன்ற இனப்படுகொலையாளனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு! இந்திய ஒன்றிய அரசிற்கு வன்மையான கண்டனங்கள்! – மே பதினேழு இயக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையை சேர்ந்த கப்பல் அவர்கள் மீது மோதியதில் ராஜ்கிரண் என்ற மீனவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 2 மீனவர்களை கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். இந்த நிலையில், உத்திரப்பிரதேசம் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறக்கும் நிகழ்விற்கு இனப்படுகொலையாளன் இராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே சக அமைச்சர்களோடு கலந்துகொள்ள மோடி அரசினால் அழைக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டு மீனவர்களை கொன்ற இனப்படுகொலை அரசு பிரதிநிதிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கும் மோடியின் இந்திய ஒன்றிய அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்.

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்வதை இலங்கை கடற்படை வாடிக்கையாகவே வைத்துள்ளது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் ஊரை சேர்ந்த மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையை சேர்ந்த கப்பல், மீனவர்களின் படகின் மீது மோதி தாக்கியுள்ளனர். கடலில் விழுந்த மூன்று மீனவர்களில், திருமணமாகி 40 நாட்களே ஆன ராஜ்கிரண் என்ற மீனவர் கொல்லப்பட, மற்ற இரண்டு மீனவர்களை மட்டும் மீட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்தில் ஒப்படைத்துள்ளனர் இலங்கை கடற்படையினர்.

இச்சம்பவம் நடைபெறுவதற்கு 3 நாட்கள் முன்னர் தான், ஏற்கனவே இது போன்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை சிறையில் வாடும் 23 அப்பாவி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள கோரி பிரதமர் அலுவலகத்திற்கும், கடற்படையினரின் தொடர் தாக்குதலை தடுத்து நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள கோரி வெளியுறவுத்துறைக்கும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு முக ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அவர் கடிதம் எழுதிய அதே நேரத்தில், இந்தியாவின் இராணுவம் இலங்கையின் இனப்படுகொலை இராணுவத்துடன் இணைந்து ராணுவ ஒத்திகையில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், பாஜகவின் முக்கிய தலைமைகளில் ஒருவரான சுப்ரமணிய சாமி, இனப்படுகொலையாளன் ராஜபக்சே குடும்பத்தினருடன் சந்தித்து உறவாடியுள்ளதோடு, இலங்கை ராணுவ நிகழ்விலும் பங்கெடுத்துள்ளார்.

சூழல் இவ்வாறிருக்க, புத்தரின் பெயரால் சுற்றுலாவை வளர்த்தெடுக்க உத்திரப்பிரதேசத்தின் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறக்க, தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சேவின் மகனும் இலங்கை அரசின் அமைச்சருமான நமல் ராஜபக்சே சக அமைச்சர்கள் மற்றும் பௌத்த பேரினவாத துறவிகளோடு கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்ட செய்தி வெளியான பின்பும், கொலை செய்த இலங்கை அரசு கண்டிக்காத இந்திய அரசு, அந்நாட்டுடன் தமிழின விரோத உறவை பேணுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்திய ஒன்றிய அரசின் இந்த செயல் இலங்கை அரசின் தமிழின விரோதப் போக்கை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டு மீனவர்கள் இப்படியாக தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும், உடமைகள் பரிக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும், இது தொடர்பாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஒன்றிய அரசிற்கு கடிதம் எழுதுவது என தொடர்கதையாக உள்ளது. 35 ஆண்டுகளாக தொடரும் இலங்கை அரசின் இந்த அட்டூழியத்திற்கு 700-க்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டுனர். இதற்காக சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டிய இலங்கை அரசை இந்தியா நட்பு நாடாக கருதி, தமிழர்களை கொன்ற இலங்கை ராணுவத்துடன் கூட்டு ராணுவப் பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. தமிழின விரோத கொள்கையையே இந்திய ஒன்றிய அரசு வெளியுறவுக் கொள்கையாக வைத்துள்ளது என்பதையே இது காட்டுகிறது.

மாநிலங்களுக்கு வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்பது மே பதினேழு இயக்கத்தின் நீண்டகால கோரிக்கை. இலங்கை தொடர்பான வெளியுறவுக்கொள்கையை தீர்மானிப்பதில் தமிழ்நாடு அரசு முக்கிய பங்கு வகிக்கும் என்றால், தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்படுவதை தடுத்திருக்க முடியும். இலங்கை நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தை தீர்மானமாக நிறைவேற்றிய தமிழ்நாட்டு சட்டமன்றத்திற்கு மதிப்பளிக்க வேண்டிய கடமை இந்திய அரசியலமைப்பிற்கு உண்டு என்பதை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களை கொன்ற இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

தமிழின விரோத இந்திய-இலங்கை கூட்டு நீடிக்கும் வரை தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்வதும், இலங்கை மீதான வெளியுறவுக் கொள்கையை தமிழ்நாடு அரசு தீர்மானிக்காத வரை இந்தியா-இலங்கையின் தமிழின விரோத செயல்களை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு, ஒன்றிய அரசிற்கு கடிதம் எழுதக் கூடிய சூழல் மட்டும் நிலவும். இதனை முறியடிக்க வேண்டிய கடமை தமிழ்நாடு அரசிற்கு உண்டு என்பதை உணர்ந்து தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு அரசு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தனது ஆளுமையை செலுத்தும் வகையில் தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து சனநாயகக் குரலை எழுப்ப வேண்டும். சொந்த மக்களைக் காக்கக்கூட வழியற்றிருக்கும் மாநில ஆட்சி அதிகாரம் என்பது வெற்று மேற்பூச்சு அலங்காரம் என்பதை இந்நிகழ்வு அம்பலப்படுத்துகிறது. இந்திய அரசிற்கு கடிதம் எழுதுவது மட்டுமே தீர்வை பெற்றுத்தராது. எனவே தமிழர்கள் தங்கள் அரசியல் ஒற்றுமையை முன்னெடுத்து , வெளியுறவுக் கொள்கையை வடிவமைக்கும் உரிமையை வென்றெடுத்து தமிழ் மீனவர் வாழ்வாதாரத்தை காக்க முன்வரவேண்டும்.

மே பதினேழு இயக்கம்
9884864010 

Leave a Reply